அமுதமொழி – விளம்பி – சித்திரை – 8 (2018)

பாடல்

இன்று நின்றவர் நாளைநின் றிலரே
     என்செய் வோம்இதற் கென்றுளம் பதைத்துச்
சென்று நின்றுசோர் கின்றனன் சிவனே
     செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
நன்று நின்துணை நாடக மலர்த்தாள்
     நண்ண என்றுநீ நயந்தருள் வாயோ
பொன்றல் இன்றிய எழில்ஒற்றி அரசே
     போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.

திருஅருட்பா – இரண்டாம் திருமுறை – வள்ளலார்

பதவுரை

அழிவில்லாத எழில் படைத்த ஒற்றியூர் அரசே, போற்றுகின்றவர் எல்லாருக்கும்  பொதுவாய் நின்றவனே, இன்று இருப்பவர் நாளை இல்லாதவர்களாக மறைகின்றார்களே, இதற்கு நாம் என்ன செய்வது என நினைந்து மனம் திடுக்கிட்டு இங்கும் அங்கும் சென்றும் நின்றும் தளர்கின்றேன்; நான் சிறியவர்களுக்குள் சிறியவன் ஆனதலால் செய்யக்கூடியது என்ன? நன்மைதரும் நின்னுடைய நாடகமாடுவதைப் போன்ற இரண்டு மலர்போன்ற நின் திருவடிகளை யான் அடைவதற்கு, நீ விரும்பி அருள் செய்வாயாக.

விளக்க உரை

 • கதி – நடை; செயல். ‘சிவகதி’ – சிவ நடையுடன் மாற்று கருத்து இல்லாமல் ஒத்து. அஃதாவது சிவ கதியில் சேர்ந்திருக்கும் பராசத்தி, ‘அவன்றன் உடலும் உயிருமாய் நின்றாள்; சென்றாள்’ என மாற்றி உரைக்க.
 • ‘உணர்வு ஆகி’ என்பது ஞான அனுபவத்தை வழங்கி, அவ்வழிகளில் இன்பம் பெறப்பட்டதை குறித்தது
 • ‘போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – போற்றுவோர் தூற்றுவோர் அனைவர்க்கும் பொதுவாகிய கடவுள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆயினும் `யாதோர் தேவர் எனப்படுவார்க் கெல்லாம் மாதேவன் அல்லால் தேவர் மற்று இல்லையே` எனும் திருநாவுக்கரசர் வரிகளும், `யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்` எனும் அருணந்தியாரின் திருவாக்கும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
 • அறியா தன்மையாலும், அதுபற்றி நிற்றலும் இன்மையால் ‘நான் செய்வது என்னை’  எனும் வரிகளும் ‘நான் சிறியருட் சிறியேன்’ எனும் வரிகளும்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 27 (2018)

பாடல்

இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற்
     கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே
எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை
      அருட்சோதி இயற்கை என்னும்
துப்பாய உடலாதி தருவாயோ
      இன்னும்எனைச் சோதிப் பாயோ
அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ்
      வடியேனால் ஆவ தென்னே.

திருஅருட்பா – வள்ளலார்

பதவுரை

அப்பனே, இவ்வுலகில் ஸ்தூலச் சரீரம் ஆகிய உடலென்றும், சூட்சும சரீரம் ஆகிய பொருளென்றும், காரணச் சரீரம் ஆகிய உயிரென்றும் பருத்துக் காணப்படும் இம்மூன்றையும் உனக்கு உரியவை என உணர்ந்து கொண்டப்பின், எனக்குரியது எனக் கருதுவதற்கு எனக்கு உரிமை சிறிதும் இல்லை; இந்த ஏழை அடியவனாகிய என்னால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் நின்னுடைய அருட் சோதியின் இயற்கை தன்மை ஆகும் என்று அறிந்த பின்னும் இனி எனக்குப் போக நுகர்ச்சிக்கு உரிய உடல் முதலியவற்றைத் தருவாயோ? மேலும் துன்பத்தைத் தந்து சோதனை செய்வாயோ? உன்னுடைய திருவுளக் குறிப்பை அறிய வல்லவன் அல்லன்.

விளக்க உரை

 • ஆன்மா சுதந்தரமின்மை கொண்டு இருக்கும் நிலையை விளக்கும் பாடல்
 • இறைவன் திருவருள் வடிவானவன் என்பதால் “அருட் சோதி”, அத்திருவருள் துணைகொண்டு ஒவ்வொரு சிற்றணுவும் இயங்குவதால், “அருட் சோதி இயற்கை”
 • துப்பாய உடல் – சிவ போகத்தை நுகர்வதற்குரிய ஞான உடம்பு.
 • உடலாதி –  ஞான உடம்பும் ஞானப் பொருளும் பெற்று இன்னும் ஞான போகம் பெறா நிலை குறிக்கும்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – களித்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  களித்தல்

பொருள்

 • மகிழ்தல்
 • மதங்கொள்ளுதல்
 • செருக்கடைதல்
 • நுகர்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே
     அழைத்தனன் அப்பனே என்னை
எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய்
     எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்
     பெருந்திறல் சித்திகள் எல்லாம்
சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன்
     சென்னிதொட் டுரைத்தனை களித்தே.

ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்

கருத்து உரை

நான் பட்ட துயரங்களை எல்லாம் நீ அறியாமாட்டாயா என்று முறையிட்டு உன்னை அழைத்த போது என்னுடைய அப்பனாகிய பெருமானே! நீயும் என்னை எடுத்து எறிதலைப் போல் புறக்கணிக்காமல் அழைத்த தருணத்தில் வந்தாய்; வந்து பின் என்னை எடுத்து மார்போடு  அணைத்து, மகனே, இனி “நீ அஞ்ச வேண்டா; உன்னை விட்டு இவ்வுலகில் சிறிது போதும் பிரிய மாட்டோம்; பெரிய  சித்திகள் யாவும் உனக்கு கிடைக்குமாறு அருள்  செய்துள்ளோம்” என்று என் தலைமேல் கை வைத்து உவகையுடன் உரைத்து  அருளினாய்.

விளக்க உரை

 • இனி எனக்கு ஒருகுறையும் இல்லை என்ற பொருள் பற்றியதும், பெரும் சித்திகள் பெற்றதையும் தானே விளக்கிக் கூறும் பாடல்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மன்று

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மன்று

பொருள்

 • சபை
 • சிதம்பரத்துள்ள கனகசபை
 • நியாயசபை
 • பசுத்தொழு
 • பசு மந்தை
 • மரத்தடியுள்ள திண்ணைப் பொதுவிடம்
 • தோட்டத்தின் நடு
 • நாற்சந்தி
 • வாசனை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

திண்ணம் பழுத்த சிந்தையிலே
   தித்தித் துலவாச் சுயஞ்சோதி
வண்ணம் பழுத்த தனிப்பழமே
   மன்றில் விளங்கு மணிச்சுடரே
தண்ணம் பழுத்த மதிஅமுதே
   தருவாய் இதுவே தருணம்என்றன்
எண்ணம் பழுத்த தினிச்சிறியேன்
   இறையுந் தரியேன் தரியேனே.

திருஅருட்பா – வள்ளலார்

கருத்து உரை

எத்தகைய துன்பங்கட்கும் சலிப்புறாத, உறுதியான  மனத்தில் இனிமை செய்து அதன் தன்மை கெடாது இயல்பாகவே ஞானவொளி பெற்று என்றும் இடையறாது விளங்கும் சுய சோதி ஆனவனே, அழகு விளங்குமாறு  பழுத்த ஒப்பற்ற பழம் போன்றவனே, தில்லையம்பலத்தில் செம்மேனி அம்மானாய் ஞான ஒளி கொண்டு  விளங்குகின்ற மாணிக்க மணியின் சுடரொளியை உடையவனே, குளிர்ச்சி பொருந்திய சந்திரனிடத்தே நிலவும் அமுதத்தைத் தந்தருள்வாய்;  அதற்கு இதுவே சமயமாகும்; எண்ணத்தில் முதிர்வுடையவனகிய யான்,  உடலாலும், உள்ளத்தாலும் பெற்ற ஞானப் பேற்றால் மென்மை உற்று உலகியல் துன்பங்களைத் தாங்கும் சிறுமையைப் பொறாததால் இனிமேல் சிறியவனாகி இந்த உலகியல் தரும் துன்பங்களைத் தாங்க மாட்டேன்.

விளக்க உரை

 • தண்ணம் பழுத்த மதி அமுதே தருவாய் – யோக முறையில் சிரசின் மேல் துவாத சாந்தத்தில் சந்திரனாகத் தோன்றி ஞான அமுது தருகின்றான் என்பது பற்றியது
 • இதுவே தருணம் – அதனைப் பெறுதற்குரிய பக்குவத்தைத் தான் அடைந்து கூறல்

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அநாதி முக்தன் யார்?
சிவன்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – என்பு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  என்பு

பொருள்

 • எலும்பு
 • உடம்பு, உடல்
 • புல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில்
   புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி
   ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு
   மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த
   இளைப்பையும் ஐயநீ அறிவாய்.

திருவருட்பா – இராமலிங்க அடிகள் எனும் வள்ளலார்

கருத்து உரை

துளைக்கப் படாத மணியாகிய என் உயிராகிய பெருமானே! புலால் மணக்கும் இந்த உடம்பிலுள்ள அசுத்தத்தையும், இந்த உடம்பினுள் கலந்திருக்கின்ற மாயையும் பலகாலம் நினைந்து நினைந்து நான் வருந்தி ஏங்கிய ஏக்கத்தையும் நீ அறிந்திருக்கின்றாய்; கொடுமையை தறுவிக்கும் புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டு, அறிவு மயங்கி, மனம் நடுங்கி அக்கொடுமையை ஆற்றாமல் என்னுடம்பின் எலும்பெல்லாம் கருகும்படி நான் இளைத்திருக்கின்ற இளைப்பையும் நீ நன்கு அறிவாயன்றோ. (அறிந்தாய் – மறை பொருள்).

விளக்க உரை

 • புலால் வெறுக்கும் தன்மை எடுத்துரைத்தல்
 • புன் புலால் உடம்பு –  புலால் நாறும் பொருள்களில் இருந்து உடம்பு தோன்றுவதால் உடலில் எழும் நாற்றம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சுணங்கன்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  சுணங்கன்

பொருள்

 • நாய் போலத் திரிபவன்
 • இழிந்தோன்

வாக்கிய பயன்பாடு

ஏண்டா, எப்பவும் சொணக்கமாவே இருக்க, எப்படித்தான் கரை சேரப் போறீயோ?

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து
   பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில்
தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த
   தயவிலாச் சழக்கனேன் சழக்கர்
உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில்
   உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன்
இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன்
   என்னினும் காத்தருள் எனையே.

திருஅருட்பா – வள்ளலார்

கருத்து உரை

புலால் விற்கும் கடைகளில் தலையைத் தாழ்த்திக் கொண்டு,  அலைந்து கொண்டு சிறு இறைச்சி  துண்டங்களைப் பொறுக்கி உண்ணும் நாய் போன்றவனாகிய யான், பொருளை வாங்கி ஊருக்குள் கொண்டுவந்து விற்போருடைய உழைப்பையும் வாழ்வையும் எண்ணாது விலையை மதியாது இரக்கமின்றிக் குறைத்து விலை பேசி விலையை மட்டும் குறியாகக் கொண்டு இரக்கமில்லாத தீயவனாகவும், ‘இது கேடில்லை செய்க’ எனத் தீயவர் உடனிருந்து கூறிய கொடிய செயல்களை மேற்கொண்டு, பலகாலும் முயன்ற மனத்தவனாய், எனக்கு ஒப்பாரில்லை என்று அகம்பாவம் கொண்டிருந்த குற்றம்  உடையவனாயினும் என்னைக் காத்தருள்க.

விளக்க உரை

 • புலைவிலைக் கடையில் தலை குனிந்து அலைந்து பொறுக்கிய சுணங்கன்” -. சிதறுண்டு ஒழியும் இழிபொருள்களையும் அலைந்து பெறும் கீழ்மக்கள் இயல்பை குறிப்பது
 • தலைவிலை – பொருள் விளையுமிடத்து அமையும் விலை
 • கடைவிலை – விற்பனையாகுமிடத்து விலை

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வதை

 

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வதை

பொருள்

 • கொலை
 • துன்புறுத்தல்
 • வன்கொடுமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான் அருள்வான்
அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் – அஞ்சுமுக
வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர் அரையோ
டஞ்சரையான் கண்கள் அவை.

திருவருட்பா – இராமலிங்க அடிகள் எனும் திருவருட்பிரகாச வள்ளலார்

கருத்து உரை

ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களையுடைய சிவனுக்கு திருமகனும், திருமால் சக்கரப் படையை இழந்து பெற மாட்டாது அஞ்சிய போது அதனைப் பெறுவித்து அருளியவனும், ஐம்புலன் வழி செல்லும் ஆசைகளை அன்பர்கள்பால் செல்லாதவாறு அவைகளை விலக்கி அருளும் ஐந்தாகிய அழகிய கைகளை உடையவனும், கண்கள் மூன்று உடையவனுமாகிய விநாயகப் பெருமான் அஞ்சத்தக்க இயல்பையுடைய வஞ்சகர்களை யான் கூடிக்கெடாதவாறு காத்து அருளுவான்.

விளக்க உரை

 • விநாயகப் பெருமான் வஞ்சரோடு கூடிக் கெடாதவாறு அருளியது குறித்தது வியந்து போற்றியது இப்பாடல்.
 • திருமாலின் சக்கரப் படையை விநாயகரின் கணங்களில் ஒன்று வாயில் கவ்விக் கொள்ள அதனைப் பெறும் வழி அறியாது அஞ்சியபோது செய்வகையை தெரிவித்து அதனைப் பெறுவித்தவர் விகடச் சக்கர விநாயகர் – காஞ்சிப் புராண விகடச் சக்கர விநாயகர் வரலாறு
 • ஓர் அரையோ டஞ்சரையான் கண்கள் –  ஓரு அரையோடு(0.5)  அஞ்சரை (5.5),  ஆக மொத்தம் 6.0, ஆறரையாய் (ஆறில் பாதியான மூன்று கண்கள் உடையவன்)
 • கண்கள் மூன்று உடையவனுமாகிய விநாயகப் பெருமான் – ஓம் ஈச புத்ராய நம: எனும் நாமாவளியோடு ஒப்புமை படுத்தி சிந்திக்கத் தக்கது
 • விநாயகன் ஐந்து கரம் – தன்பால் அன்பு செய்யும் ஆன்மாக்களின் ஆசைகளை(பஞ்ச இந்திரியங்களில் எழும் ஆசைகளை)  விலக்குதல் பொருட்டானது

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காரியம் தோன்றும் வரை இருந்து பின் நீங்கும் காரணம் எது?
துணைக்காரணம்

சமூக ஊடகங்கள்