மனத் துன்பங்களுக்கு காரணமான குற்றம் முழுதும் அற்று, இரண்டற்ற நிலையில், நின்திருவடியில் ஒன்றாக இணைந்து நிற்கும் நல்ல தவம் உடையவர்களுக்கு ஒப்பில்லாத ஒன்றாய் விளங்கும் உண்மை அறிவு இன்ப வண்ண வாழ்வே! நின் திருவடிக்கு அடித்தொண்டு பூண்டு உன்னிடத்திலே பேரன்பு பெருக எளியேனுக்கு நீ நின்திருவருள் தோற்றம் தந்து அஞ்சேலென்று அமிழ்த மொழியளித்து அருளும் நாள் எந்த நாளோ?
விளக்க உரை
‘வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே’ எனும் கந்தர் அலங்காரப்பாடல் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
இறைவனின் குணங்களாக ஆகமங்கள் கூறுவது என்ன? எண் குணங்கள்
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின் வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின் செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
பொறாமை உடையவர்களாக ஆகி, அறத்தின் வழியில் இருந்து விலகி, தீக்குணம் உடையவர்களாக பிறர் பொருளைக் கொள்ளாதீர்கள். நற்பண்பு உடையவர்களாக உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்.
விளக்க உரை
இவ்வாறான நெறியில் நின்றால் நிலையாமை நீங்கி இன்பம் பெறலாம்` என்பது குறிப்பு.
`உணர்வு நிலையாமையை உணர்ந்து நிலைபெறுவதற்கு உரிய நெறியில் நிற்றல் வேண்டும்` என்பது பற்றி கூறப்படும் பாடல்.
‘அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே’ எனும் அபிராமி அந்தாதி யாண்டும் சிந்திக்கத் தக்கது.
மோட்சம் பெறுவதற்கான சூட்சமத்தினை சொல்கிறேன். ஏமாற்றுதல், பொய், திருட்டு, மற்றும் கொலை செய்யாதே; கோபம் அதன் காரணமான காய்ச்சல் ஆகியவற்றைப் போடு; உலகத்தில் புண்ணியத்திற்கான வழிமுறைகளை கருத்தில் கொள்ளு; (மனத்தால்) நிலை இல்லாமல் தாவிக் கொண்டே இருக்காதே; அவ்வாறு இருந்து பாழாக போகாதே; பல வேதங்களும், சாத்திரங்களும் அவற்றின் மெய்யான பொருள் உணர்ந்து பார்; நம்பிக்கை உடையவர்கள் பிழைக்கச் செய்வதற்கான மார்க்கம் என இவைகளை எனது குடியாகவும், குழந்தைகளாகவும் உடைய நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
கதாயுதத்தை தன் தோளினின்று அகற்றாத வீமன் செலுத்திய அம்பு மழையில், பெரும் பகைவர்களாகிய கெளரவர்களின் பெரிய சேனையை பொடிபட உதவியவரும், கதறிச் சென்ற பசுக்கள் மீண்டு வர தனது புல்லாங்குழலை ஊதியவரும், அர்ச்சுனன் ஏறிய தேரில் தேர்ப்பாகனாக இருந்தவரும், தங்க மயமானதும், வேத ஒலியைத் தருவதும் ஆன சங்கை ஊதியவரும், அலை வீசும் பாற்கடல் மீதில் பாம்பின் மேல் பள்ளி கொண்டவரும், மூன்று உலகங்களை மூன்று அடியில் அளந்த பாதத்தை உடையவரும், கருடனை வாகனமாகக் கொண்டவரும் ஆன திருமாலின் மருமகனே! அன்றலர்ந்த மலர் மாலையை அணிந்த மார்பினை உடையவனும், திருவண்ணாமலை அரசனும் ஆகிய ப்ரபுட தேவராஜனின் உள்ளமும் மகிழ்ச்சியில் ஆடும் வண்ணம் அவனது நெஞ்சிலே வாழும் தேவர் பெருமாளே! பூமிக்கு கீழ் பாதாலத்தில் இருக்கும் ஆதிஷேன் ஆடவும், அகிலத்தில் மீதுள்ள மேருமலை அசைந்தாடவும், சிவதாண்டவத்துக்கு மாறுபாடு இன்றி ஒற்றுமையாக காளி தாண்டவம் ஆடவும், அந்த காளியோடு அதை எதிர்த்து அன்று அவள் அதிர்ந்து நடுங்கும்படி ஊர்த்துவகோலத்தில் நடனம் ஆடி போட்டியிட்டவரான, ரிஷபத்தில் ஏறிய சிவன் ஆடவும், அருகில் பூத கணங்களும் பேய்களும் ஆடவும், இனிமை மிக்க சரஸ்வதியும் ஆடவும், தாமரை மலரில் அமரும் பிரமனும் ஆடவும், அருகில் அவர்களிடத்தில் பொருந்தி நிற்கும் தேவர்கள் எல்லாம் ஆடவும், சந்திரன் ஆடவும், தாமரை மறையில் உறையும் மாமி ஆகிய லக்ஷ்மியும் ஆடவும், விஸ்வரூபம் எடுத்த நின் மாமனாகிய விஷ்ணுவும் ஆடவும், நீ ஏறிவரும் மயிலும் ஆடி, நீ நடனம் ஆடி என்முன்னே வரவேண்டும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
மறைத்தலின் நோக்கம் என்ன? உயிர்கள் தம் வினைகளை நுகர்தல் பொருட்டு ஆசை உண்டாக்குதல்
வண்டு கூட்டங்கள் நிறைந்த, சோலைகள் நெருங்கியுள்ள கொன்றை மாலையை அணிந்தவனும், பாம்பின் வடிவம் ஒத்து இருக்கும் சடையாகிய நீண்ட, நிறத்தால் பொன்போன்ற முடியினையுடைய, அழகிய கருணையை உடையவனும் ஆன அவனை தலைவன் என்றும், தேவன் என்றும், இறைவன் என்றும் தன்னைப் பல நாளும் துதித்துத் தொழுகின்றவரது துன்பங்களைப் பார்த்துக் கொண்டிராதவன்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அழித்தலின் நோக்கம் என்ன? உயிர்களின் களைப்பு ஒழித்தல்
செற்றரக் கன்வலியைத் திரு மெல்விர லாலடர்த்து முற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன் மும்மையினான் புற்றர வம்புலியின் னுரி தோலொடு கோவணமும் தற்றவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்துஉரை
செருக்கினை அடைந்த அரக்கனாகிய இராவணனது வலிமையைத் தன் மெல்லிய திருக்கால் பெருவிரலை ஊன்றி அழித்தவன்; முழுவதும் திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவன்; உருவம், அருவம், அருவுருவம் என்ற மூவகைத் திருமேனிகளையுடையவன்; புற்றில் வாழ்கின்ற பாம்பையும், புலித்தோலையும், கோவணத்தையும் ஆடையாக உடுத்தவன்; அப்படிப்பட்ட பெருமான் வீற்றிருந்து எழுந்தருளும் இடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காத்தலின் நோக்கம் என்ன? உயிர்கள் தம் வினையைப் பற்றச் செய்தல்
திருமாலும், பிரமனும் தம்முள்ளே எங்கும் தேடித்திரிந்தும் காணும் வல்லமை இல்லாதவர்கள் ஆயினர்; பொங்குவரும் கங்கை ஆற்றினை செஞ்சடையில் உடையவனும், நல் வினைப் பயன்களின் திரண்ட வடிவான தலைவனாகிய இறைவன் `இங்கு இருக்கிறேன்` என்று இலிங்க வடிவில் தோன்றினான்.
விளக்கஉரை
புண்ணிய மூர்த்தியே – உயிர்களிடத்தில் வினைகளை விலக்கி உயிர்களுக்கு அருளும் திரண்ட வடிவான தலைவன் எனும் பொருளில் எடுத்தாளப் பட்டுள்ளது. இரு வினைகள் விலக்கியவன் என்பதால் இப்பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
படைத்தலின் நோக்கம் என்ன? உயிர்களிடத்தில் மலப்பரிபாகம் உண்டாக்கல்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – இருந்தவம்
பொருள்
பெரியதவம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்
குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென்
சென்று நீரிற் குளித்துத் திரியிலென்
என்று மீசனென் பார்க்கன்றி யில்லையே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
என்றும் எப்பொழுதும் ஈசன் என்பவர்களாக இல்லாமல், நன்கு பொறுமை உடையவர்களாக இருப்பினும், உண்ணாவிரதம் இருப்பினும், மலையில் ஏறிப் பெருந்தவம் செய்தாலும், விரும்பிச் சென்று நீரில் நீராடித் திரிந்தாலும் ஈசனை விலக்கிய மற்றவர்களுக்கு இவற்றால் பயன் இல்லை.
விளக்கஉரை
அகவழிபாடு சிறப்பினை விளக்கும் மற்றொரு பாடல்.
நோற்றல் – பொறுத்தல், தவம் செய்தல் எனும் பொருள் விளக்கம் இருப்பினும் இரண்டாவது வரியில் ‘குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென்’ எனும் வரிகளால் பொறுமை உடையவர்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் எதனிடத்தில் செய்யப்படுகின்றன. மாயை ஆகிய சடப்பொருளிடத்தில்
ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே தேரிற்கோள் நட்புத் திசைக்கு.
சீர் பிரிப்புடன்
ஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே நாளும் நவைபோகான் கற்றல் மிக இனிதே ஏருடையான் வேளாண்மைதான் இனிது ஆங்கு இனிதே, தேரின், கோள் நட்புத் திசைக்கு.
பதினெண் கீழ்க்கணக்கு – இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
கருத்துஉரை
கட்டளை இட்டு சொன்ன வேலைகளை அதில் மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிதாகும். எல்லா காலங்களிலும் குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். ஏரினை சொந்தமாக வைத்து விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லும் அனைத்து திசையிலும் நட்புக்கொள்ளுதல் இனிது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
உயிர்களிடத்து செய்யப்படும் தொழில்கள் எவை? மறைத்தல், அருளல்
வேதங்களைப் பின்பற்றி நடப்பவராகிய அந்தணரும், விண்ணில் வாழும் தேவரும், மனிதர்களும் வணங்கி தொழுது நிற்க, நல்ல ஒளி உருவமாய், சுருண்ட கூந்தலையுடைய உமாதேவியோடும், பூக்களில் உறையும் வண்டுகள் ஓசையைச் செய்கின்ற திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வன், இந்த வழியே என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாதே ஒழிந்தேன்; இஃதே என்னே ஏழ்மை!
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் எதனிடத்தே செய்யப்படுகின்றன? மாயை ஆகிய சடப் பொருளில்
பிரமாணமாவது காட்சிமுதல் அறுவகைப்படும் என்பாரும் , அவ்வாறான அறுவகைப் பிரமாணங்கட்கு மேலும் எஞ்சுவதைக் கொள்ளுதல் ஆகிய பிரமாணமாகிய பாரிசேடப்பிரமாணம் நான்கு என்பாரும், ஆக மொத்தம் பத்துக்கு எனவும் அதற்கு மேலும் பிரமாணங்கள் உள்ளன என்பாரும் உளர். அவையெல்லாம் பிரத்தியட்சம்,அநுமானம், உரைச்சான்று என மூன்றினுள் அடங்குவனவன்றி வேறானது அல்ல.
பாரிசேடப் பிரமாணம்- ஒழிபளவை, உ.ம் மூவரில் இருவர் திருடவில்லை எனும் பொழுது மற்றொருவன் திருடினான் என்பது பொருள். அவ்வண்ணமே பதி பசு பாசம் என்னும் மூன்றில் பசுவிற்கும் பாசத்திற்கும் வினைப் பயனைக் கூட்ட முடியாது என்று விலக்கவே, பதிக்குக் கூட்ட முடியும் என்பதால் பாரிசேடமாயிற்று
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அருளல் தொழில் என்பது என்ன? உயிர்களிடத்தில் அவற்றின் மலப்பற்றை போக்கி தனது பேரின்பத்தை நுகரச் செய்தல்
யான் நந்தி பெருமானைக் குருவாக அடைதற்கு முன், அறியத்தக்க பொருளை அறியாது கிடக்கின்ற மூடர்களோடு ஒன்றாக பொருந்தி இருந்தேன். அவரை அடைந்த பின், என்னைக் அந்தக் கூட்டத்திற்கு அயலானாக ஆக்கி, அறியாமையை நீக்கிச் சிவத்தை உணருமாறு ஆக்கப்பட்டால் யான் சொரூப சிவத்தில் தோய்ந்தபின்பு மீண்டும் அந்தக் கூட்டத்திற்கு செல்லாதவாறு இருக்கும் உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றார்.
விளக்கஉரை
குருவருளில் உறைத்து நிற்பதாலே கருணை உண்டாகும் என்பது பற்றிய பாடல்
பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவதில்லை; இடை நடுவில் குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே!
பட்டினத்தார்
கருத்துஉரை
கச்சி ஏகப்பனே! செல்வமானது, பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை. இந்தப் பூவுலகில் பிறந்து மண்ணில் இறக்கும் போது கொண்டு போவதில்லைலை. மனித வாழ்வில் இடையில் செல்வம் எனக் குறிக்கப்படும் இது சிவன் தந்தது என பிறருக்கு கொடுக்க அறியாது இறக்கும் உலோபிகளுக்கு என்ன சொல்வேன்?
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அழித்தல் தொழில் என்பது என்ன? தனு முதலியவற்றை மாயையில் ஒடுக்குதல்
வெம்பினா ரரக்க ரெல்லா மிகச்சழக் காயிற் றென்று செம்பினா லெடுத்த கோயில் சிக்கெனச் சிதையு மென்ன நம்பினா ரென்று சொல்லி நன்மையான் மிக்கு நோக்கி அம்பினா லழிய வெய்தா ரவளிவ ணல்லூ ராரே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
இராவணன் சீதாபிராட்டியை வஞ்சனையால் சிறை வைத்து மிகப் பெரிய குற்றம் இழைத்தான். அவனின் இந்த செயலால் செம்பினால் உறுதியாக அமைக்கப்பட்ட அவன் அரண்மனை உறுதியாக அழிந்துவிடும் என்று நல்ல மனம் கொண்ட அரக்கர்கள் எல்லோரும் வேண்ட. ` நம்மிடத்தில் நம்மை விரும்பினவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும்` என்றும், இராவணனால் துன்புறுவார்க்கு இன்புறும் நன்மை செய்யவேண்டும் என்றும் அந்த நல்ல மனம் கொண்ட அரக்கர்களை விருப்பத்துடன் நோக்கி, இராமபிரான் தனது அம்புகளால் இலங்கையை அழிப்பதற்கு அவன் உள்ளிருந்து அம்பு எய்தவர் அவளிவணல்லூர்ப் பெருமான் ஆவார்.
விளக்கஉரை
இந்த தலத்துப் பதிகங்கள் முழுவதும் இராவணன் வரலாறே கூறப்படுவதால் இதிலும் அவ்வாறே கொள்ளப்பட்டது .
இராமன் வாயிலாக அவனுக்கு உயிர்த்துணையாய் நின்று அம்பை விடுத்து அருளினார் என்னும் இராமாயண வரலாற்றின் உண்மைக்கு இது சான்று.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காத்தல் என்பது என்ன? தனு முதலியவற்றை ஒரு கால எல்லை வரை நிலை பெறச் செய்தல்
தெய்வீகமாகிய யானை முகம் கொண்டவ வினாயகர் புகழ்ந்து பேசிய தம்பியே, ஒளி பொருந்திய நெற்றியில் முன்றாவது கண்ணை உடையவரும், ஆகாசத்தில் வெள்ளி செம்பு தங்கமான மதிலை உடைய திரிபுரத்தை ஜெயித்த ஈசனின் மைந்தனே, தில்லை நடேசனராகிய சிவனின் குமாரனே, தெய்வயானை மணாளனே, செல்வமுடையார் அது நிலையாக இருக்காது என்பதைத் தெரிந்து கொண்டு தானதர்மங்களைச் செய்யாவிடில் எப்படிக் கடைத்தேறுவார்கள்?
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
படைத்தல் என்பது என்ன? உயிருக்கு தனு, புவன, போகங்களை உண்டாக்கும் தொழில்.
மயிலாப்பூரில், மாசிமகநாளில், கடலாடுதலைக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளி இருப்பவனும், வலிமை பொருந்திய விடையின் மேல் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?
விளக்கஉரை
மாசிமகநாளன்று கடலாட்டு விழா நிகழ்வு குறித்தப் பாடல்
நெஞ்சில் கபடம், தீய எண்ணம் ஆகியவை இல்லாமல், மணம் மிக்கதும், சிறந்த மலர்கள் உடையதுமான பலவற்றையும் பறித்துக் கொண்டு வந்து இரவும் பகலும் தொழும் அடியார்களுக்கு, தலையில் மாலை பொருந்திய செஞ்சடை உடைய சிவபெருமான் வாழும் பதியாகிய மயிலாடுதுறை மேம்பட்ட தலமாகும். இது வள்ளல் தன்மை உடையவனாகிய அவன் உகந்தருளும் திருத்தலமும் ஆகும்.
விளக்கஉரை
மயிலாடுதுறைப் பெருமான் அடியார்களுக்கு வள்ளலாக அருள் வழங்குகிறான் என்பது குறிப்பு.
ஆகாய கங்கை, வெண்மையான மணியாகிய முத்தினையும், சங்கினையும், ஒதுக்கி மந்தார மலர்களைத் தள்ளுகின்ற அணையாகிய பெருமை பொருந்தியதும், இறைவன் சடையில் தங்குதலால், ‘சிறைநீர்’ எனப்படும் தேவ கங்கை எனும் அந்நீரில், பிறையாகிய தோணி சேர்வதற்கு இடமாகிய கொன்றை மாலையை உடையவனே! (உன்னோடு) தொடர்புற்று வாழும் பெருமை அடைந்து, பழிப்பற்ற உன் திருவடியின் பழமையான தொண்டினை அடைந்து, அஃது என்னிடத்தினின்றும் தவறிவிட, உன்னை நிந்தித்துக் கொண்டு, திகைத்து இருந்த என்னை விட்டுவிடுவாயோ?
விளக்கஉரை
இறைவன் வைதாரையும் வாழ வைப்பான் என்பது கூறுவதற்காக இயற்றப்பட்ட பாடல்
பழந்தொழும்பெய்தி விழ – பழமையான தொண்டினை அடைந்தும் வினையின் காரணமாக இழந்தேன்;
‘பழித்து விழித்திருந்தேனை – அதனை இழந்த துன்பத்தால் வருந்தி வைதேன்
கட்ட றுத்தெனை ஆண்டுகண் ணாரநீ றிட்ட அன்பரொ டியாவரும் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டி னோடிரண்டும்அறி யேனையே.
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்துஉரை
இடப வாகனத்தை உடையனாகிய நீ, எண் மூர்த்திகளின் தத்துவங்களாகிய எட்டு தத்துவத்தையும் அர்த்த நாரீசுவரராகிய இரண்டு தத்துவத்தையும் அறிந்து கொள்ளாத என்னை, பாச கட்டுக்களைக் களைந்து, என்னை அடிமையாக ஆட்கொண்டாய். அது மட்டுமல்லாமல் காண்கின்ற கண்கள் மகிழ்வுறும்படி திருநீறு பூசிய உன் மெய் அடியார்கள் கூட்டத்தில் இருக்க நான் தகுதி வாய்ந்தவன் என்று உலகம் அறியும்படி என்னை அவர்களது சபையில் சேர்த்து வைத்தாய்.
விளக்கஉரை
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட உயிர், சிறுமையுடைதாக இருந்தாலும் யிருந்தும் பெருமை பெறும் என்பதற்கான பாடல்
எட்டினோடிரண்டும் அறியேனையே – எட்டும் இரண்டும் – எட்டு என்னும் எண் தமிழில் ‘அ’ என்றும், ‘இரண்டு’ என்னும் எண், ‘உ’ என்றும் குறிக்கப்படும். அகரம் சிவனைக் குறிக்கும்; உகரம் சத்தியைக் குறிக்கும். சிவம் சத்திகளை அறியாத என்னை என்பதாகவும் விளக்கம் பெறும் ( எட்டினோடு இரண்டும் – பத்து – அஃதாவது, ய – உயிர் என்றும் பொருள் கூறுதல் உண்டு; அதாவது ஆன்மா இயல்பை அறியாதவன் )
பட்டி மன்றம் – வாதசபை – அறிவில்லாத என்னை அறிஞர் அவையிலே ஏறச் செய்தாய்’ என்று பொருள் கொள்ளுதலும் உண்டு.