கரைந்து செல்லும் காலம்

நீ என்னை உதறி தள்ளிய வினாடியில்
உன் கூந்தலில் இருந்து
ஒற்றை ரோஜாவினை விட்டுச் சென்றாய்.
புகைப்படமற்று
வாசனை இழக்காமல்
பத்திரமாக இருக்கிறது
அலமாரிப் பெட்டியில்
அந்தப் பூவும் நினைவுகளும்.
அப்போது முதல்
எதிர்காலம் இறந்தகாலமாகி இருந்தது.

Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

சாக்த வழிபாடும் விஜய தசமியும்

சாக்த வழிபாட்டின் (தேவியை – அம்பாளை) மிக மிக முக்கியமான பண்டிகையாக இந்த நவராத்ரி கொண்டாடப்படுகிறது.

மற்ற வழிபாடுகள் போலவே சாக்த வழிபாட்டிலும் பல வழிமுறைகளும் பல நிலைகளும் உண்டு. (உ.ம் வாரகி உபாசனை முறைகள், ஸ்ரீவித்யா உபாசனை முறைகள்).

புரட்டாசி மாதம் வளர்பிறை முதலாவதாக ஒன்பது நாட்களை நவராத்திகளாக கொண்டாடுகிறோம்.

அரக்கர்களை வென்று வாகை சூடிய நாள் என்பதால் விஜய தசமிக்கு சிறப்பு.

வனவாசம் முடிந்து, அஞ்ஞாத வாசம் (மறைந்திருந்த காலமும் முடிந்து)  தங்களது படைக்கருவிகள் அனைத்தையும் வன்னி மரத்திலிந்து அர்ஜுனனும் மற்றவர்களும் எடுத்தது விஜய தசமி அன்று.

இவ்விடத்தில் அர்ஜுனன் துர்க்கையை உபாசனை செய்கிறான்.

மகா பாரதப் போரில் வெல்ல துர்க்கையை உபாசனை செய்யுமாறு கிருஷ்ணன் பணிக்கிறான். அப்போதும் அர்ஜுனன் துர்க்கையை உபாசனை செய்கிறான்.

இரண்டுமே ஒரு தெய்வத்தை பற்றியது என்றாலும் வெவ்வேறு மந்திரங்கள்.

பல ரிஷிகளும் முனிவர்களும் சாக்க வழிபாட்டிற்குப் பிறகே உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள்.

லலிதா சகஸ்ரநாமமும் ஸ்ரீ மாதா என்றே துவங்குகிறது.

அன்னையின் கருணை அளப்பரியது.

Loading

சமூக ஊடகங்கள்

கடவுட் கொள்கை – வாதங்கள் – 4

துக்கடா..
நண்பன் 1 : நான் இன்றைக்கு உன்னிடம் விவாதிக்க வந்திருக்கிறேன்.
நண்பன் 2 : எதைப் பற்றி?
நண்பன் 1 : கடவுள் உண்டா இல்லையா என்று?.
நண்பன் 2 : சரிடா. உன் பெயர் என்ன.
நண்பன் 1 : கணபதி.
நண்பன் 2 : ஆங்கிலத்தில் எப்படி எழுதுவாய்.
நண்பன் 1 :  ganappathi
நண்பன் 2 : பேர் ஏண்டா 37ல வரமாதிரி வச்சிருக்க.
நண்பன் 1 : நான் உங்கிட்ட அப்புறமா பேசறேன்.

*****
திருமந்திரம்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்துள் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்துள் மறைந்து பார்முதல் பூதம்.

ஒரு அழகான யானை இருகிறது. சில நேரம் கழித்து அது யானை அல்ல சிலை என்ற உணர்வு வருகிறது. அது எதனால் செய்யப்பட்டிருக்கிறது என்பது மறைந்துவிடுகிறது. அழகான யானை என்பதே நினைவில் நிற்கிறது. அதைப்போலவே தனித்தன்மையான ஒப்புவுயர்வு அற்ற என்ற பொருள்படும் பரம் என்பதை பூதங்கள்(பஞ்சேந்திரியங்கள்)  மறைத்துவிடுகின்றன. அவைகளுக்குள்ளும் பரம் என்பது நிறைந்திருகிறது.

முடிவுரை 1 :
கண்டவர், விண்டிலர்..
விண்டவர் கண்டிலர்.
முடிவுரை 2:
இறை அனுபவம் அறியக் கூடியது அல்ல. உணரக் கூடியது.

கடவுட் கொள்கை – வாதங்கள்-3 
கடவுட் கொள்கை – வாதங்கள்-2
கடவுட் கொள்கை – வாதங்கள்-1

Loading

சமூக ஊடகங்கள்

ஒரு பாதி கனவு நீயடி..

எவ்வித இசையும் இன்றி நெஞ்சினில் கத்தி வைப்பது போல் ஆரம்பமாகிறது பாடல். நீ என்பதே நான் தானடி..,

ஒரு வாகனம் நகர ஆரம்பமாவதில் கவிதைகள் (மன்னிக்கவும்) பாடல் ஆரம்பமாகிறது.

ஊடல் பற்றிய நிகழ்வுகள் பல திரைப்படங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. ஆனாலும் இது தனியாக தெரிகிறது.

ஊடல் கொண்ட வேளை. கணவன் தன் நினைவு இன்றி தலைவாருகிறான். மனைவி சீப்பினை எடுத்ததால் அவளுக்கு  மிகக் கோபம். கோபத்தில் கண்களை மூடிக் கொள்கிறான்.

மனைவியை சந்திக்க நோயாளியாக நுழைகிறான். மெல்லிய புன்னகை இருவருக்கும்.

சிறு பயணத்தில் சில தீண்டல்கள்,

வாழ்த்து அட்டைகள், தன்னை தருவதாக முடிகிறது.

மனைவி கணனி கற்றுத்தருகிறாள். தன்னை அறியாமல் தீண்டிவிடுகிறாள். கள்ளப்புன்னகை கணவனுக்கு.(விக்ரமால் மட்டுமே முடியும்).

கணவன் மனைவியின் ஊடல் மிகச் சரியாக, மிகச் சிறந்த கவிதையாக வடிவம் பெற்றிருக்கிறது.

காலம் பெயரிட்டு அழைக்கும் கவிதையில் இது நிச்சயம் இடம் பெறும். வீட்டில் இருந்து மழையை ரசிப்பது போல், யாருமற்ற இரவுகளில் மனதை அதன் வழிகளில் இட்டுச் செல்லும் பாடல்களில் இது நிச்சயம் இடம் பெறும்.

Loading

சமூக ஊடகங்கள்

மறுதளித்தல்

எவர் அறியக்கூடும்
மறுதளித்தல் தாண்டி
மறுக்கப்பட்ட காரணங்களையும்,
அதன் பொருட்டான வலிகளையும்.









Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

கடவுட் கொள்கை – வாதங்கள்-3

கதை – 1
முன்னொருகாலத்தில் ஒரு ஆசிரமம் இருந்தது. அதில் ஒரு குருவும் சில சீடர்களும் இருந்தார்கள்.
பயிற்சிக்காலம் முடிந்தது.

குரு         : உங்கள் பயிற்சி முடிந்தது.
மாணவன் : உங்களை விட்டுப் பிரிவது வருத்தம் தருவதாக இருக்கிறது.

குரு         : காலம் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை உடையது.
மாணவன் : ……

குரு         : இன்று இரவு உங்களுக்கு ஒரு வாழைப் பழம் தருவேன். அதை யாருக்கும் தெரியாமல் உண்டுவிட்டால் உங்கள் அனைத்து பயிற்சிகளும் முடிவுற்று விடும்.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன்  : கிணற்றடியில், அப்போது யாரும் இல்லை.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : மரத்தடியினில் அப்போது யாரும் இல்லை.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : ஆற்றங்கரை அருகினில். அப்போது யாரும் இல்லை.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : உண்ணவில்லை.

குரு         : ஏன்?

மாணவன் : நீங்கள் யாருக்கும் தெரியாமல் உண்ணச் சொன்னீர்கள். கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பவர் என்றும் நீங்கள் தானே பயிற்றுவித்தீர்கள். அப்படி இருக்க நான் எப்படி யாருக்கும் தெரியாமல் உண்ணமுடியும்.
குரு         : நீயே என் பிரதான சீடன்.

எனது தோழமை குறிப்பிட்டதைப் போல் இருப்பு/இல்லை என்பதை பல வழிகளில் விளக்க முற்படலாம்.

ஓளி என்பது இருளின் மறைவு
வெப்பம் என்பது குளிரின் மறைவு

2907 –
உளன் அலன் எனில் அவன் உருவம் இவ் வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் வருவுகள்
உளன் என விலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமை யொடு ஒழிவிலன் பரந்தே

அவன் இருக்கிறான் என்றாலும், இல்லை என்றாலும்  அனைத்தும் ‘அவன்’ என்ற ஒன்றில் அடங்கி இருக்கிறது. அஃதாவது ஸ்தூலமாகவும், சூட்சமாகவும் இருக்கிறான் என்பதே பொருள். இஃது அவனது குணம் ஆகும்.

பலவித வேதங்களும், வேதாந்தங்களும் ஒரு பொருளையே குறிப்பிடுகின்றன்.(உ.ம். ப்ரம்மம், புருடன்)

இதை சிறிது விளக்க முற்படுவோம்.

நாடக்காட்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அதில் சில அழுகைக் காட்சிகள் வருகின்றன. மனதை உருக்குவதாக இருப்பின் நாமும் அழுகிறோம். எனில் காட்சி மற்றும் பிம்பம் என்ற வேறுபாடு அன்றி மனம் ஒரு நிலை கொள்கிறது.

சாந்தி மந்திர கூற்றுப்படி அவர் நம் இருவரையும் காக்கட்டும்.

மீண்டும் தொடர்வோம்.

கடவுட் கொள்கை – வாதங்கள் -2
கடவுட் கொள்கை – வாதங்கள் -1 

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

முதல் முறையாக 100 வயலின்கள் இசைக்கு பயன்படுத்தப்பட்டது தளபதி படத்தில். அப்போது ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அனைவரும் வாசித்து கொண்டிருந்தனர்.

அப்போது இசை ஞானி சொன்னார் ‘ஏம்பா, அந்த 38வது வயலின் சரியா வாசிக்கல. அவரை சரியா வாசிக்கச் சொல்லுங்க’ 

Loading

சமூக ஊடகங்கள்

கனவுகளில் தேடல்

இலக்கு நோக்கிய தேடல்கள்,
அடைந்தபின் மீண்டும் தேடல்.
நித்திய தேடல்களில் தொலைகிறது
நிச்சயமற்ற வாழ்வு.














Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

கடவுட் கொள்கை – வாதங்கள்-2

இக்கட்டுரையின் படி இரு பிரிவுகள் மட்டும் விவரிக்கப்படுகின்றன. கடவுள் மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கை.

இதில் முக்கியமாக உலகாதாயம் (சார்வாகம்) மட்டும் விவாதப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. ஏனைய பிரிவுகளான ஆசீவகம், பௌத்தம் மற்றும் சமணம் ஆகியவை விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதுவும் தவிர வேத தரிசனங்களான நியாயம் ,வைசேடிகம் , சாங்கியம்,யோகம்,மீமாம்சை (பூர்வ மீமாம்சை),வேதாந்தம் (உத்தர மீமாம்சை) ஆகியவைகளைப் பற்றிய விவாதங்களும் இதில் இல்லை.

மனிதன் 1 : நீ யார்?
மனிதன் 2 : மனிதன்
மனிதன் 1 : நீ எந்த கொள்கையை உடையவன்.
மனிதன் 2 : கடவுள் மறுப்புக் கொள்கை என்பதே என் நோக்கம்.
மனிதன் 1 : எதை வைத்து இக் கொள்கையை கூறுகிறாய்.
மனிதன் 2 : கடவுள் யாவருக்கும் பொது தானே.
மனிதன் 1 : ஆமாம்.
மனிதன் 2 : அப்படி எனில் நீ கண்ட கடவுளை நானும் காண வேண்டும் தானே.
மனிதன் 1 : மௌனம்…
மனிதன் 2 : என்ன பதில் இல்லையா?
மனிதன் 1 : டெல்லி சென்றிருக்கிறாயா?
மனிதன் 2 : இல்லை.
மனிதன் 1 : நீ போகவே இல்லை. கண்ணால் கண்டதும் இல்லை. ஆனால் டெல்லி என்றொரு இடம் இருப்பதை எப்படி நம்புகிறாய்.
மனிதன் 2 : மௌனம்…
மனிதன் 1 : யோசித்து பதில் அளி. அவசரம் இல்லை.

*************************************************************
குழந்தை : என்ன அப்பா இந்த புத்தகம்.
தந்தை    : இது முப்பரிமாண புகைப்படங்கள் கொண்ட புத்தகம்.
குழந்தை : அப்படீன்னா,
தந்தை    : இந்த புகைப்படத்தை எல்லாம் உற்று கவனித்தால் ஒரு படம் தெரியும்.
குழந்தை : எப்படி
தந்தை    : இந்த படத்தை கண்ணுக்கு சிறிது தூரத்தில் வைத்துக் கொள். உற்று கவனி.
குழந்தை : சரி.
தந்தை    : என்ன தெரிகிறது?
குழந்தை : மேஜையும் அதில் பூச்செண்டும்.
தந்தை    : மிகச் சரி.
நண்பர்    : என்னடா ஒன்னும் தெரியல.
தந்தை    : நீதானட, கண்ணால் காண்பது மெய் என்று சொன்னாய். அப்புறம் ஏன் உனக்கு தெரியல.

கடவுட் கொள்கை – வாதங்கள்-1

இதன் தொடர்ச்சி இன்னும் சில நாட்களில்..

Loading

சமூக ஊடகங்கள்

கைம்மை

கிளைகளின் வழியே வழிந்தோடும்
ஒவ்வொரு துளியிலும்
கிளைத்தெழுகின்றன நினைவுகள்.

*கைம்மை – கணவனை இழந்தவள்.

Loading

சமூக ஊடகங்கள்

கடவுட் கொள்கை – வாதங்கள்-1

தமிழ் இரண்டாம் பாடம்

மதிப்பெண்கள் – 10*1 = 10

கடவுள் கொள்கை குறித்து கட்டுரை ஒன்று வரைக.

முன்னுரை : கடவுள் கொள்கை குறித்த சில விஷயங்கள் இங்கு குறிக்கப் படுகின்றன.

நிகழ்வு/கதை –  1
முடித் திருத்தும் நிலையம்.
முடி திருத்துபவர் – கடவுள் இல்லை என்பதே என்கருத்து.
வாடிக்கையாளர் – ஏன்?
முடி திருத்துபவர் – ஏன் இத்தனை விஷயங்களையும் பார்த்து சும்மா இருக்கார்.
வாடிக்கையாளர் – மௌனம்.
முடி திருத்துபவர் –  உங்கள் மௌனமே கடவும் இல்லை என்பதை நிருபிக்கிறது.
வாடிக்கையாளர் – நான் ஒன்று கேட்கட்டுமா?
முடி திருத்துபவர் – சரி.
வாடிக்கையாளர் – இந்த ஊரில் முடி திருத்துபவரே இல்லை என நினைக்கிறேன்.
முடி திருத்துபவர் – எப்படி அதான் நான் இருக்கிறேனே.
வாடிக்கையாளர் – அப்படி எனில் ஏன் பல பேர் அடர்ந்த முடியோடும், தாடியோடும் அலைகிறார்கள்.

நிகழ்வு/கதை –  2
இராமகிருஷ்ண பரமஹம்சர் : வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
பார்வையாளர் : கடவுள் இருக்கிறாரா?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : இருக்கிறார்.
பார்வையாளர் : அப்படி எனில் நான் எப்படி பார்ப்பது?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : சரி நீயார்?
பார்வையாளர் : நான் மருத்துவன்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : சரிவா, அறுவை சிகிச்சை செய்ய செல்லலாம்.
பார்வையாளர் : அது எப்படி முடியும். அதற்கு படிக்க வேண்டும், பயிற்சி வேண்டும்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : அறுவை சிகிச்சை செய்ய பயிற்சி வேண்டும் எனில், கடவுளை காணவும் பயிற்சி வேண்டும்.

இதன் தொடர்ச்சி இன்னும் சில நாட்களில்..

Loading

சமூக ஊடகங்கள்

பகல் கனவுகள்

கந்தலாடைக்காரனிடம் கனவுகள்;
கனவான்களிடம் கடன் அட்டைகள்.
வாழ்வு எதைச் சொல்ல முற்படுகிறது?

Photo : Devadhai Thozhan(a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

ரகசியமாய்..

நீண்ட நாட்களுக்கான பிறகான
சந்திப்பு உன்னுடன்.
காற்று உன் கூந்தலைத் தழுவிச் செல்கிறது.
‘என்ன வேண்டும்’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
‘வண்ணமும் வாசமும்
சுவையுடன் கூடிய உணவா வேண்டும்’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
நிறைந்த மலர்கள் வேண்டுமா’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
‘சிறந்த உடைகள் வேண்டுமா’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
நாட்களின் நகர்தலை
ஒத்து இருக்கிறது என் கேள்விகள்.
அப்போதும் மௌனத்திருக்கிறாய்.
‘என்னதான் வேண்டும்’ என்கிறேன்.
பெண்களால் மட்டுமே அறியப்படும்
ரகசிய புன்னகையைச் சிந்தி
‘நீ வேண்டும்’ என்று
என் கன்னத்தில் இதழ் பதிக்கிறாய்.
ரகசியமாய் அழும் ஆண்களின்
வரிசையினில் நானும்.

Loading

சமூக ஊடகங்கள்

2038ல் – எரிபொருள்கள்

2038ல் – எரிபொருள்கள்

(இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
பெட்ரோல் விலை – இன்று காலை 11.00 மணி நிலவரம் – ரூ. 568/லி. அடுத்த விலை அறிவிப்பு 12.00 மணி செய்திகளில்.

2.
என்ன சார் எல்லா பெட்ரோல் பங்க்லேயும் கூட்டம் 2 கி.மிக்கு நிக்குது.
உங்களுக்கு தெரியாதா, பெட்ரோல் விலை அடுத்த அரை அவர்ல 0.13 காசு குறையப் போகுது.

3.
என்ன சார் பேப்பர்ல விசேசம்.
25 லி. பெட்ரோல் போட்டா 0.100கி வெங்காயம் இலவசமாம்.

4.
பேங்க் வாசலில்
பெட்ரோல் அடகு வைக்க எங்கள் கிளைகளை அணுகவும். 1லி. 511/- ரூ.

5.
அரசியல்வாதிகள் – மற்றவர்கள் கூறுவது போல் எங்களிடம் நேற்று ஒரு பேச்சும் இன்று ஒரு பேச்சும் இல்லை. பெட்ரோலிய நிறுவனங்களின் நஷ்டத்தைப் போக்க இன்று முதல் எரிபொருள் விலை ரூ.25 ஏறுகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

ஸ்ர்வ மோகினி

ஒரு நாளில்
முடிவினில் நீயும் நானும்.
சிறு பயணத்தில்
என் விரல் பிடித்து
நீ நடக்கிறாய்.
‘பார்த்து வருகிறாயா இல்லை
நான் நடை பழக சொல்லித்தரவா’
என்று கூறி
புன்னகைக்கிறாய்.
மயிலிறுகளில் தீண்டல்
வாய்த்திடுமோ மறுமையிலும்.

ஸ்ர்வ மோகினி -லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் ஒரு பெயர்

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

எனது நண்பர் ஒரு படத் தயாரிப்பாளர்.

ஒரு முறை எனது நண்பர் ரிக்கார்டிங் தியேட்டருக்கு சென்றிருக்கிறார். அங்கிருந்த ஒலி எஞ்ஜினியர் இளைய ராஜா ஒரு பாடலை முடித்து விட்டு மிகவும் சந்தோஷமாக சென்றதாக கூறியிருக்கிறார்.

எனது நண்பர் அப்பாடலை ஒலிக்கச் சொல்லி இருக்கிறார். கேட்டவுடன் எனது நண்பரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

அப்பாடல் – என்னைத் தாலாட்ட வருவாளா…

Loading

சமூக ஊடகங்கள்

மரணத்தின் நிழல்

எல்லா மறுதலித்தலும்
உருவாக்கிச் செல்கின்றன்
ஒவ்வொரு முறையும்
ஒரு மரணத்தை.

Loading

சமூக ஊடகங்கள்

தொடரும் நினைவுகளும் பாடலும்

ஆகாய கங்கை – இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை. ஆனாலும் அதன் தாக்கம் இன்று வரை தீர வில்லை.

படம் : தர்ம யுத்தம்(தலைவர் படம்).இசை: இசை ஞானி. எனக்கு மிகவும் விருப்பமான மலேஷியா வாசுதேவன்.(கணவனை  மிகவும் விரும்பும் மனைவியின் ஆரத்தழுவுதல் -அந்த குரலுக்கு இன்னும் உருவகம் தேடிக் கொண்டிருக்கிறேன்).

மெல்லியதாய் ஆரம்பிக்கிறது பாடல்.

ஆண் :  துணையை விரும்புவதாக சொல்கிறான்.
பெண் :  தேடிய ராமனை கண்டதாக உரைக்கிறாள்.

ஆண்        :  ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

பெண்       :  குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

நான் என்றும் தனித்து இல்லை. என் வாழ்வு உன் துணையோடுதான் என்கிறாள் துணை.

மிக அழகாக தன் காதலைச் சொல்கிறாள்.

பெண் :
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்

ஆண் நாசுக்காக மறுத்து பதில் சொல்கிறான்.
ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு

பல பாடல்கள் நினைவில் நீங்காமல் இருந்தாலும், இது முக்கிய இடத்தில்.
காலம் கடந்து  இருப்பவை பொருள்கள் மட்டும் அல்ல. பாடல்களும் அதன் தாக்கங்களும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்ம விசாரம்

காற்றினில், கருமை இருளில்
கரைந்திருந்தன உன் கண்கள்
தங்கக் கூந்தலாய் உன் கேசம்.
அனைத்தும் அளிக்கும் உள்ளத்தோடு நீ.
கலங்கிய மனதுடம் நான்,
வினாக்களோடு விடிகின்றன
விடியல்கள் என்று
எனக்கான வினாக்களை அடுக்குகிறேன்.
விழி அசைத்து அனைத்துக்கும்
விடைஅளிக்கிறாய்.
உறு பொருள் உரைக்குமாறு கேட்கிறேன்.
காற்றில் ஆடுகின்றன வார்த்தைகள்
‘வட்டி காசுக் கட்டச் சொல்லி
வக்கில் நோட்டீஸ் வந்திருக்குன்னு
உங்கப்பனான்ட சொல்லு.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

ஒரு முறை இசைஞானி ஜப்பான் சென்றிருந்தார். அப்போது ஒரு இசையை கேட்க நேர்ந்தது. அந்த வாத்தியத்தை பற்றியும், அதை வாசிக்கும் கலைஞரைப் பற்றியும் கேட்டறிந்தார். அவரை சந்தித்து சென்னை வரும் போது தன்னை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அந்த கலைஞர் சென்னை வந்த போது 5 நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து, அந்த கருவியை 15 நாட்களில் வாசிக்கும் திறமையை பெற்றார்.

அந்த கருவியை வாசிக்க முழுமையாக 2 ஆண்டுகள்  ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்