படர்ந்து ஓடும் ஆறு, மனதை வருடும் காற்று, இரைச்சலைத் தாண்டி குருவிகளின் ஒலிகள், உயரமான இடத்தில் நட்சத்திர ஓட்டலில் மனைவியான உன்னுடன் உணவு. அனைத்தும் தாண்டி ஒர் குரல். நாடார் கடையில போய் நாலு ரூவாயிக்கு கடன் சொல்லி சக்கரை வாங்கி வாடா உங்கப்பனுக்கு காப்பி தண்ணி ஊத்தணும்.
கவிஞனான பொழுதுகளில் தொடங்கியது தொடர் கேள்விகள். எல்லா பிம்பம்களும் மற்றொரு பிம்பம் உண்டாக்கி. நிழல் பதித்து செல்கின்றன எல்லா பிம்பம்களும் நிஜங்களின் தடையங்களை மூடி. பிம்பம் மறையும் பொழுதுகளில் ப்ரம்மம்.
பல தேசம் சென்றும் பொருள் பெருக்கியும் பல அனுபவம் பெற்றவன் எனும் கர்வத்தோடு கவிஞன் ஒருவனை கர்வத்தோடு சந்தித்தேன். கவிஞனுக்கான வினாக்கள் கொட்டும் அருவியாய். பொருளற்ற தருணங்களில் நீரை உண்டு பசியாறி இருக்கிறாயா, தவிக்கும் பொழுதுகளில் தட்டுப்பட்ட ஒற்றை நாணயம் வைத்து புகைத்திருக்கிறாயா, கண்ணிரை கரைக்க நீண்ட நேரம் குளியலரையில் கழித்திருக்கிறாயா, சந்தித்தலை மறுதலித்து நெடு நேரம் கழித்து வீடு திரும்பி இருக்கிறாயா, அந்த தருணத்திலும் விழித்திருந்து என்ன வாங்கி வந்திருக்கிறாய் என்ற மகளின் கேள்விக்கு இமை வழி கண்ணிரையும் இதழ் வழி புன்னகையும் இதய வலிகளுடன் பரிசளித்திருக்கிறாயா இன்னும் தொடரவா என்றான். விஷ்ணு முன்னான மகாபலி சக்ரவர்த்தியாய் நான்.
ஏதோ சில கணங்கள் உணர்தின எனக்கான மரணத்தினை. மல ஜலம் கழிதலும் மாறுபட்ட சுவாசமும் மாற்றமின்றி நிகழ்ந்தன. காயம் பட்ட மனிதர்கள் பழி தீர்க்க கண நேரத்தில் வரிசையாய். காசினியில் கொண்ட கொள்கைகள் காட்டைத் தாண்டுமோ! எரியுட்டப் படுகையினில் எல்லோரும் பிறிதொருநாளில் அறியக் கூடும் எல்லா மரணங்களும் நிகழ்வுகளை இடம் மாற்றி நிச்சய குறிப்பொன்றை எழுதிக் செல்வதை.
வெற்றிக்கு பின்னால் ஆன விருதுகளும் கண்ணிரும் நண்பனிடத்தில். ஆனந்தக் கண்ணீரா என்றேன். கணத்த மௌனத்திற்குப் பின் மொழியின் பிரவாகம். இழந்த குடும்ப உறவுகளையும் காலங்களையும் அதனால் ஆன காயங்களையும் விருது சமன் படுத்துமா?
காலத்தின் மாற்றத்தில் தருமனாகி யஷ்ஷனிடம் நிபந்தனைகள் அற்று கேள்வி கேட்கும் வாய்ப்பு நிகழ்ந்தது. மன வலிகளில் வலிமையானது தாய்மையின் வலியா, தன்னை இழத்தலா, அவமானங்களை உள்வாங்கி அனுபவம் பெறுவதிலா, பணம் அற்ற பொழுதுகளில் உணரப்படும் பசியா எது என்றேன். யஷ்ஷனின் விழித்துளிகளில் விடைக் கிடைத்தது.
மரணத்தின் அனுபவங்களை மனதோடு ஒன்றி கூறுமாறு வழி பட்ட மனிதர்களை வழியில் பட்ட மனிதர்களை வினவினேன். காய்ந்த கிளை ஒன்று மரத்தினில் இருந்து விழுவதைப் போன்றது என்றான் ஒருவன். நீண்ட நதியினில் படகினில் பயணம் என்றான் ஒருவன். நண்டின் கால்களை ஒடித்து உள்ளிருப்பதை உறிஞ்சுவதைப் போன்றது என்றான் ஒருவன். நான்கு தினைகளின் திரிபில் பயணம் என்றான் ஒருவன். அடங்காத மனைவியின் வார்த்தைகள் கேட்டும் அமைதியை கொண்டாடும் கணவனின் உணர்வு என்றான் ஒருவன். வாழ்வினை அனுபவித்தவனுக்கு மரணம் சூட்சமாய் கொண்டாடப் படும் என்றார் என்றைக்குமான கடவுள்.
வந்த நாளைக் கொண்டாடிய நினைவுகள். மனிதர்களை ஏற்றிச் சுமந்த நினைவுகள். உறுப்புகள் உடைந்த போதும் சரி செய்து சமன் செய்த மனிதர்களின் நினைவுகள்.. கதவுகளைத் தாண்டி காலத்தின் சாட்சியாக கனத்த வலியுடன் வீட்டின் கடைவழியினில் பழைய நினைவுகளைச் சுமந்தபடி சைக்கிள்.
காலத்தின் மாற்றத்தில் விக்ரமாதித்தியன் ஆகி கேள்வி கேட்கும் வாய்ப்பும் நிகழ்ந்தது. பிறர் அறியா கவிஞனின் மன வலியும், பசி இருந்தும் யாசகம் பெறா கர்வமும் என்று மாறும் என்றேன். வேதாளத்திடம் பதில் இல்லை. விடுதலை ஆனேன்.
பாதணிகளை உதறிவிட்டு ஓடி வந்து மடியினில் அமர்ந்து உங்களுக்கு பிடித்தது ரோஜா வாசமா மல்லி வாசமா என்ற எனது மகளின் கேள்விக்கு உன் வாசம் என்றேன். வியப்புடனான புன்னகையில் கடை நாள் வரையிலான வாசம்.
ஒரு முறை கடவுளை சந்திக்கையினில் லட்சிய கவிதைகள் எப்பொழுது வாய்க்கும் என்றேன். காதலித்துப் பார் கவிதை வரும் என்றார். மறுதலித்து மற்ற வழியினைக் கேட்டேன். கணவனாகிப் பார். லட்சம் கவிதைகள் வரும் என்றார். எழுதப் படாத கவிதைகள் எண்ணிலி என்றும் பகன்றார்.
காய்ந்த நினைவோடைகள் கணப் பொழுதினில். இருளின் துணை கொண்டு நீ என்னை பயமுறுத்திய தருணங்கள் இன்னமும் வெளிச்சங்களாய். ஒற்றை இரவினில் நீ உதிர்த்து போன ரோஜா வாசம் அறை எங்கும் சிதறிக் கிடக்கிறது. நீர் அடித்து நீர் விலகாது. நீ வீசிச் சென்ற நீரின் துளிகள் காயாமல் இருக்கிறது நெஞ்சுக்குள் நினைவுகளாய்.
என்னுள்ளே எட்டிப் பார்த்தத் என்றொ கடந்த அனுபவ மேகங்கள் வழிந்தொடும் ஆறு அதனுள் குதித்தாடிய நினைவுகள், வாய்க்கால் தாண்டி வயல், பனியுடன் கூடிய பஜனைப் பாடல்கள், பாடல்களை தொடரும் பட்டாம் பூச்சிகள் அனைத்தும் தாண்டி…. ஒங்கி ஒலிக்கும் என்றைக்குமான ஒரு குரல் ‘லீவு நாள்னா இதுதான் வேலை’
பதில் தேடி புறப்பட்ட தருணங்களில் எதிர்ப்பட்டார் என்றைக்குமான கடவுள். என்ன வினாக்களோடு பயணம் என்றார். வலிமையானது காதலா, பசியா என்று கண்டு உணரப் புறப்பட்டிருக்கிறேன் என்றேன். நீண்ட நெடும் பயணத்திற்கு பிறகான வழி திரும்புகையில் ஒன்றில் இடம் பெற வேண்டிய பெயர் மற்றொன்றில்.