சித்த(ர்)த் துளிப்பு – 02-Dec-2020


பாடல்

பருத்திநூல் முறுக்கியிட்டுப் பஞ்சியோது மாந்தரே
துருத்திநூல் முறுக்கியிட்டு துன்பநீங்க வல்லீரேல்
கருத்திநூல் கலைப்படுங் காலநூல் கழிந்திடும்
திருத்திநூல் கவலறும் சிவாயவஞ் செழுத்துமே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

மாந்தர்களே! பருத்தியை முறுக்கி திரிக்க பஞ்சு நூல் மாறி நூல்திரியாக வரும்; அதன் பின் பஞ்சு இருக்காது; அதுபோல,காற்று தங்கும் இடமான இந்த தோல்பை போன்ற உடலில் சூரிய கலை, சந்திரகலை ஆகியவற்றை கருத்தில் வைத்து முருக்கி மேலேற்றி அக்கினி கலையுடன் கலக்கச் செய்து சிவாய எனும் ஐந்தெழுத்தினை ஓதும் போது தொந்த வினைகளை நீக்கி  காலத்தினை கடந்துவிடலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 01-Dec-2020


பாடல்

மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான்பொருளும்
வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும்
காடுங் கரைகளுங் கல்லாம் பணியும் கரிபரியும்,
தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே

அருளிய சித்தர் : இடைக்காட்டுச் சித்தர்

பதவுரை

செல்வத்தினை தருவதும் செல்வம் என்று அழைக்கபடுவதுமான மாடும், வசிக்கத் தகுந்த இடமான மனைகளும், தனக்கு உறவான தம்மக்களும், தன்னைச் சார்ந்த சுற்றமும், வானளவாக இருக்கக்கூடியதான் பொருளும், வீடும், மணிகளும், வெண் பொன் என்பதான வெள்ளியும், செம்மையான பொன் என்பதான் தங்கமும், வெண்கலமும், உணவு தரத்தக்கதான் வயல்வெளிகளும், அதனை சூழ்ந்த நிலப்பரப்பும் கொண்டிருத்தலால் ஐராவதம் போன்ற யானையால் வணங்கப்படும் இந்திரப் பதவி ஒத்ததான நிலையும், தேடும் பலவகையானப் பொருள்களும் நில்லாமல் செல்வதால் அவைகளை விலக்கி சிவகதியினை அடையுங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 29-Nov-2020


பாடல்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராம என்னும் நாமமே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

மாலை, சந்தியா காலம் என்றெல்லாம் அழைக்கப்படும் அந்தி, மதியத்திற்கும் இரவிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியான மாலை, உச்சிக்காலம் ஆகிய காலங்களில் காலம் தவறாமல் தீர்த்தங்களில் நீராடியும், மாலையில் செய்யப்படுவதான தர்பணங்களும், புறத்தால் செய்யப்படுவதாகிய ஜெபம், ஆன்மீக முன்னேற்றத்திற்காக உடலாலும், வாக்காலும், மனதாலும் செய்யப்படும் அனைத்து சாத்விகமான ஆன்மீக சாதனைகளாகிய தவமும், சிறந்த சிந்தனை உடையவர்களும், ஞானமும் கொண்டவர்களால் நித்தமு ஜெபிக்கப்படும் மந்திரம் எம் தலைவன் ஆகிய ராமனின் நாமமாகிய ராம ராம ராம எனும் நாமமே.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 24-Nov-2020


பாடல்

மாலுந் திருவும் வசித்திருக்கும் இடம்
வணங்கி இப்பால் செல்லும்போது
மேலும் உருத்திரன் ருத்திரி சேவையை
மேவியே காண்பாய் ஆனந்தப் பெண்ணே

அருளிய சித்தர் : சங்கிலிச் சித்தர் எனும் மதங்க நாதர்

பதவுரை

ஆனந்தத்தைத் தரும் மனமாகிய பெண்ணே! தனது தேவியாகிய அன்னையுடன் திருமால் வசிக்கக் கூடிய ஆதாரத்தானமாகிய மணிபூரகம் கடந்து அதை வணங்கி, மேலும் செல்லும் போது மற்றொரு ஆதாரமாகிய அனாகதத்தில் தனது தேவியாகிய ருத்ரியுடன் ருத்ரன் வீற்றிருந்து அவர் அருளும் சேவையினை மேன்மையாகக் காண்பாய்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 28-Nov-2020


பாடல்

தாயும் பகை கொண்ட பெண்டீர் பெரும்பகை தன்னுடைய
சேயும் பகை உற வோரும் பகைஇச் செகமும் பகை
ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில்இங் காதலினால்
தோயுநெஞ்சே மரு தீசர்பொற் பாதஞ் சுதந்தரமே

அருளிய சித்தர் : பட்டினத்தார்

பதவுரை

காதல் எனும் பற்றுக் கொண்டு அதில் உறைந்து நிற்கும் நெஞ்சமே முன்னோர்களால் அளிக்கப்பட்டதும், தம் வினை கொண்டு ஈட்டிய செல்வம் நீங்கில் இப்பூவுலகில் தாயும் பகை கொள்வர்; கொண்ட மனைவியும் பகை கொள்வர்; தன்னுடைய சேய்களும் பகை கொள்வர்;  உறவினர்களும் பகை கொள்வர்; இந்த உலக மக்கள் முழுவதும் பகை கொள்வர்; ஆனால் சுதந்திரத்தினை மட்டும் தருபவன மருதீசரின் பொற்பாதங்கள் மட்டுமே.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 27-Nov-2020


பாடல்

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ!

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

என் கண்ணம்மா! ஆக்கினையை வில்லாக்கி(அமுத தாரணையினை அந்தரம் என்று குறிப்பிடுவதும் உண்டு, குரு முகமாக அறிக), பஞ்சாட்சர மந்திரத்தினை அம்பாகவும் ஆக்கி, அதில் மந்திரங்களை ஏற்றி, (சூட்சம  பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மஹா காரண பஞ்சாட்சரம், மஹா மனு ஆகிய முறைகளில்), இரவி எனும் சூரியக் கலை நாடியும், மதி எனும் சந்திரக்கலை நாடியும் வந்து உறையும் காட்டில் விளையாடி, மனமெனும் மனதினை வேட்டை ஆடி அதனால் மனம் மகிழ்ந்து பார்ப்பது என்றோ?

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 25-Nov-2020


பாடல்

சும்மா இருந்துவிடாய் அகப்பேய்
சூத்திரஞ் சொன்னேனே
சும்மா இருந்தவிடம் அகப்பேய்
சுட்டது கண்டாயே

அருளிய சித்தர் : அகப்பேய்ச் சித்தர்

பதவுரை

மனமாகிய பேயே! மனம், மொழி, காயம் ஆகியவை விட்டு மௌனம் பற்றி நிற்கும் இடம் சுட்டி உணர்த்தப்பட்டதைக் கண்டாயே, இதுவே உனக்கான சூத்திரம் என்று சொன்னேன். அதை கேட்டு மறந்துவிடாமல் இருப்பாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 21-Nov-2020


பாடல்

வாதங்கள் செய்வது வேரொன்றும்
இல்லை வாசி அறிந்தோர்க்கு
நாதம் பிறந்திடக் கண்டறிந்
தோர்கள் நான் என்று சொல்லுவரோ?

அருளிய சித்தர் : ஏகநாதர் என்ற பிரம்மானந்தச் சித்தர்

பதவுரை

வாசிக் கலையினை அறிந்தவர்கள் ஒருவரின் கூற்றுக்கு மறுமொழி கூறி வாதங்கள் செய்வது இல்லை; அது போலவே தன்னுள் நாதத்தினை பிறந்திடக் கண்டவர்களும் (சங்கை ஒலிக்கச் செய்தல், தச தீட்சை ஒலி கேட்டல் என பலவும் அடங்கும்) தான் எனும் அகங்காரம் கொண்டு நான் எனும் அந்த வார்த்தையினைச் சொல்வார்களா?

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 20-Nov-2020


பாடல்

அத்தி வரைவாடி அகப்பேய்
ஐம்பத்தோ ரட்சரமும்
மித்தையாங் கண்டாயே அகப்பேய்
மெய்யென்று நம்பாதே

அருளிய சித்தர் : அகப்பேய்ச் சித்தர்

பதவுரை

மனமாகிய பேயே! உலகில் பிறப்பெடுத்து சித்தர் பெருமக்களால் விவரிக்கபடுவதான ஐம்பத்து ஓர் அட்சரம் கண்ட பின் மரணித்தாலும் அதனை மெய் என்று நம்பிவிடாதே.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 19-Nov-2020

பாடல்

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு;
பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்
பாழிலே மனத்தை விடார் பரம ஞானி;
சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்
சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே

சித்தர் திருநாமம் : அகத்தியர்

பதவுரை

சக்தியும், பராபரம் வேறு வேறு தெய்வம் அல்ல; இரண்டும் ஒன்றே. அது அண்டத்தில் உள்ள அனைத்து பொருள்களிலும் சீவனாக இருக்கிறது; இதை தன் முயற்சி செய்து சுய புத்தியாலோ அல்லது குருவருளால் கிடைக்கப் பெற்றவர்களோ புண்ணியர்கள்; கோடி பேர்களில் ஒருவர் மட்டுமே இந்த உலகில் அது குறித்த அனுபவங்களைப் பெறுகிறார்கள்; அவர்கள் பக்தி செலுத்துவதால் மனமானது பஞ்ச இந்திரியங்கள் வழி செல்லாமல் மனம் அலையாமல் அடங்கி இருப்பார்கள்; ஆணவம், மாயை, கன்மம் எனும் பாழ்படுத்துகின்றதில் மனத்தினை விடாமல் பரம் ஞானியாக இருபார்கள்; அவர்கள் மனம் சுற்றி அலைவதில்லை. இன்னொரு முக்கியமானதும் அதி சூட்சத்தில் சூட்சமான விஷயத்தினை சொல்கிறேன். அண்ட உச்சி எனப்படும், பொன்னம்பலத்தான் ஆடும் இடமாகிய சுழியத்தின் நிலை அறிந்தால் அவர்களுக்கு மோட்சம் கிட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 18-Nov-2020


பாடல்

குப்பையிலே பூத்திருப்பாள் மின்மி னுக்கி
கோலத்தே பொன்மேனி கொண்டு நிற்பாள்
தர்ப்பையிலே சிவப்பான தழலைப் போல்வாள்
தனக்குள்ளே சர்ப்பந்தான் சரண்புக் காடும்
அர்ப்பையடா சகவாசம் அணைந்து தொட்டால்
அனைத்தையுமே யெரித்திடுவாள் சலித்துக்கொள்வாள்
கர்ப்பையிலே தான்பிரித்துக் கண்ணி வைத்தே
கணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர்

சித்தர் திருநாமம் : காரைச் சித்தர்

பதவுரை

மின்னல் போல் தோன்றக் கூடியவள் ஆன அன்னையானவள், எண்ணற்ற எண்ணங்களைக் கொண்டு தம் மனதை குப்பையாக வைத்திருக்கும் மனிதர்களிடத்தில் அவைகளை நீக்குதல் பொருட்டு இவள் பூத்திருப்பாள்; பொன் போன்ற மேனியினைக் கொண்டு நிற்பாள்; தர்பை கொண்டு செய்யக் கூடியதான் அக்கியில் எழும் தழல் போல் சிவப்பு நிறம் கொண்டவளாக இருப்பாள்; காட்டில் சரணடைந்த பாம்பானது எவரும் அறியாமல் இருப்பது போல் இருக்கும் இவளை நேசமுடன் கொண்டு அவளிடத்தில் நட்பு கொண்டால் நம்முடைய அனைத்து வினைகளையும் எரித்துவிடுவாள்; பிறப்பு உடையவள் என்றும் பிறப்பு அற்றவள் என்றும் அவள் தோற்றம் பற்றி அறிய இயலாமல் சித்தர்கள் பலரும் வாதம் செய்தார்கள்.

வழிபாட்டு முறை : சாக்தம்

Loading

சமூக ஊடகங்கள்