எவர் அறியக்கூடும்
மறுதளித்தல் தாண்டி
மறுக்கப்பட்ட காரணங்களையும்,
அதன் பொருட்டான வலிகளையும்.
Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru
உருவேறத் திருவேறும்
நீண்ட நாட்களுக்கான பிறகான
சந்திப்பு உன்னுடன்.
காற்று உன் கூந்தலைத் தழுவிச் செல்கிறது.
‘என்ன வேண்டும்’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
‘வண்ணமும் வாசமும்
சுவையுடன் கூடிய உணவா வேண்டும்’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
நிறைந்த மலர்கள் வேண்டுமா’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
‘சிறந்த உடைகள் வேண்டுமா’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
நாட்களின் நகர்தலை
ஒத்து இருக்கிறது என் கேள்விகள்.
அப்போதும் மௌனத்திருக்கிறாய்.
‘என்னதான் வேண்டும்’ என்கிறேன்.
பெண்களால் மட்டுமே அறியப்படும்
ரகசிய புன்னகையைச் சிந்தி
‘நீ வேண்டும்’ என்று
என் கன்னத்தில் இதழ் பதிக்கிறாய்.
ரகசியமாய் அழும் ஆண்களின்
வரிசையினில் நானும்.
ஆகாய கங்கை – இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை. ஆனாலும் அதன் தாக்கம் இன்று வரை தீர வில்லை.
படம் : தர்ம யுத்தம்(தலைவர் படம்).இசை: இசை ஞானி. எனக்கு மிகவும் விருப்பமான மலேஷியா வாசுதேவன்.(கணவனை மிகவும் விரும்பும் மனைவியின் ஆரத்தழுவுதல் -அந்த குரலுக்கு இன்னும் உருவகம் தேடிக் கொண்டிருக்கிறேன்).
மெல்லியதாய் ஆரம்பிக்கிறது பாடல்.
ஆண் : துணையை விரும்புவதாக சொல்கிறான்.
பெண் : தேடிய ராமனை கண்டதாக உரைக்கிறாள்.
ஆண் : ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்
பெண் : குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
நான் என்றும் தனித்து இல்லை. என் வாழ்வு உன் துணையோடுதான் என்கிறாள் துணை.
மிக அழகாக தன் காதலைச் சொல்கிறாள்.
பெண் :
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஆண் நாசுக்காக மறுத்து பதில் சொல்கிறான்.
ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பல பாடல்கள் நினைவில் நீங்காமல் இருந்தாலும், இது முக்கிய இடத்தில்.
காலம் கடந்து இருப்பவை பொருள்கள் மட்டும் அல்ல. பாடல்களும் அதன் தாக்கங்களும்.
காற்றினில், கருமை இருளில்
கரைந்திருந்தன உன் கண்கள்
தங்கக் கூந்தலாய் உன் கேசம்.
அனைத்தும் அளிக்கும் உள்ளத்தோடு நீ.
கலங்கிய மனதுடம் நான்,
வினாக்களோடு விடிகின்றன
விடியல்கள் என்று
எனக்கான வினாக்களை அடுக்குகிறேன்.
விழி அசைத்து அனைத்துக்கும்
விடைஅளிக்கிறாய்.
உறு பொருள் உரைக்குமாறு கேட்கிறேன்.
காற்றில் ஆடுகின்றன வார்த்தைகள்
‘வட்டி காசுக் கட்டச் சொல்லி
வக்கில் நோட்டீஸ் வந்திருக்குன்னு
உங்கப்பனான்ட சொல்லு.
ஆதியில் மரங்களும் மனிதர்களும்
நேசம் கொண்டவர்களாக இருந்தனர்.
ஒருமித்த மொழியில்
பகிர்ந்து கொண்டனர் தங்கள் உணர்வுகளை.
தன்னை கொடுக்க தயங்கவில்லை மரங்கள்
அதனை விலக்க தயங்கவில்லை மனிதர்கள்.
நாளின் ஒரு பொழுதுகளில்
மனக்கசப்புகள்.
பெருங் காற்றின் வழி இலைகளை உதிர்ப்பதாக
மனிதனின் குரல்கள்.
நித்தமுமான கவனிப்புகள்
அநித்தியமானது என்று மரங்களின் குரல்கள்.
பிறிதொரு சந்ததியில்
மனிதனில் மொழியறிவு குறைந்து, குலைந்து
தான் மட்டும் அனைத்தும் அறிந்தவனாக
கர்வம் கொண்டிருந்தான்.
உலகில் அனைத்து மரங்களையும் அழித்து
கடைசி மரம் அழித்தலில் மரம் சொன்னது;
‘என்னை அழித்தால், நீயும் அழிவாய்’ என்று.
கோடாலியின் கடைசி வெட்டிதலில்
உலகம் தனித்திருந்தது.
சொற்களின் வேர் தேடி புறப்பட்டன
சிந்தனைகள்.
உன்னிடம் இருந்தா பிறக்கிறது என்று
ஆகாயத்திடம் வினவினேன்.
காற்று என்னுள் இருப்பதால் காற்றினை
கேட்கச் சொன்னது.
பற்றி எரிவதாலும், படர்ந்து எரிவதாகும்
நெருப்பு பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது காற்று.
கடந்து செல்ல துணைசெய்வது நீராவதால்
நீர் பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது நெருப்பு.
இயக்கம் அனைத்தும் பூமியில் என்பதால்
நிலம் பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது நீர்.
பிரபஞ்சங்களின் சேர்க்கையால் ஆனது
மனிதக் கூடு என்பதால்
மனிதனிடம் கேட்கச்சொன்னது நிலம்.
நாபிச் சுழியில் இருந்து சூல் கொள் வார்தைகள்
தொண்டைதாண்டி,
வாயினின் வழி வரத்துவங்குகையில்
சொற்களின் முடிவுகள் பூரணத்துவத்துடன்.
அன்று ஒரு நாள்
ஏரியில் நீராவி மண்டபத்தின் அருகில்
கால்களை அலைத்தபடி நான்.
நினைவுகளில்
தும்பைப் பூவின் தேன் துளி,
வட்டங்கள் பெரிதாகவும்
மிகப் பெரிதாகவும் மாறி மாறி.
கரையினில் சலனமற்று நீ.
கைகளில் இருந்து வீசிய
கற்களும் நீருக்குள் மூழ்கி அலைகளுடன்.
சைகைகளைக் காட்டி
காரணம் கேட்கிறேன்.
முற்றுப் பெறா புன்னகையை உதிர்க்கிறாய்.
அப்போது
கற்கள் மூழ்கி இருந்தன
அலைகள் அற்றதாய் ஏரி.
அப்போதும் சலனமற்று நீ.
ஜகத்பதி* – கால பைரவர் அஷ்டத்தில் வரும் பெயர்.