உணவுப் பரிமாற்றத்தில்
நடக்கிறது ஒரு உணர்வு பரிமாறம்.
‘ஒங்க அப்பன் பாட்டு எழுதறேன்னு
திரிறான். ஒழுங்கா திங்கச் சொல்லு’
என்கிறாள் உன் அன்னை.
‘அப்படீன்னா பாபா ப்ளாக்ஷீப் கூட தெரியுமா’
என்கிறாய்.
தொட்டுவிடம் தூரத்தில் சொர்க்கம்.
உருவேறத் திருவேறும்
முழு நிலவில் குளுமையின்
அருகருகினில் நீயும் நானும்.
பேச்சுகள் திசைமாறி
கனவுகள் பற்றிச் செல்கிறது.
என் கனவு முழுவதும்
நாய்கள் என்று உரைக்கிறேன்.
விதவிதமான நாய்களும்
தோற்றங்களும் என்கிறேன்.
முழுவதுமாய் விளக்கச் சொல்கிறாய்.
சில நாட்களில்
அவைகள் என்னிடம் விளையாடுகின்றன.
சில நாட்களில்
பற்கள் விரிய கோபம் கொள்கின்றன.
சில நாட்களில்
காலை நேரத்து நாய்களாக என்னிடம் விளையாடுகின்றன.
சில நாட்களில்
தேடிய முகம் கண்ட மகிழ்ச்சியோடு ஓடி வருகின்றன.
சில நாட்களில்
இருப்பினை தவிர்த்துவிடுகின்றன என்று உரைத்து.
இதைத் தவிர்க்க வழி கேட்கிறேன்.
‘விழித்திரு’ என்கிறாய்.
ஞானத்திறவு கோலாய் உன் வாக்கு.
வார்த்தைகளில் பொருள் ஏற்றி
விளையாடும் பொழுதுகள்
உனக்கும் எனக்கும் புதியவை அல்ல.
‘என்னைப் பிடிக்குமா’ என்கிறாய்.
‘மிகவும் பிடிக்கு’ம் என்கிறேன்.
‘எனக்காக உன்
பெயரை மாற்றிக் கொள்வா’யா என்கிறாய்.
‘மாற்றங்கள் அற்றது என் வார்த்தைகள்’ என்கிறேன்.
‘நேசித்தலில் மறத்தல்
ஒரு பகுதி தானே’ என்கிறாய்.
‘உன் பெயர் மறக்கப்படும்
நாளில் என் பெயர் பிணம்’ என்கிறேன்.
கார்காலக் குறிப்புகள் உன் கண்களில்.
ஆதியில் விசித்திரங்களை ஈனும் பூமியில்
நான் விழுந்த போது
எனக்கு சிறகுகள் இருந்தன.
அப்போது நீர்ப் பரப்பு சலனமற்று இருந்தது.
சில பறவைகளுக்கு சிறகுகள் இருந்தன
பல பறவைகளுக்கு சிறகுகளில் முட்களும் இருந்தன.
பல பறவைகள் சிறகுகள் அற்று.
ஏன் இந்த நிகழ்வுகள் என்றேன் அவைகளிடம்.
மாயையின் தோற்றம் படா இடங்களில் சிறகுகள் இருக்கும்;
சந்தோஷ வாழ்வுடன் கோபங்களை வீசியவைகளுக்கும்,
கோபத்தில் தடித்த வார்த்தைகளை வீசியவைகளுக்கும்,
சிறகுகளில் முட்கள் இருக்கும்;
வாழ்வினை கொண்டாடத் தெரியாதவைகளுக்கு
சிறகுகள் அற்று இருக்கும்
என்றும் பகர்ந்தன.
பதிலின் வசிகரத்தில் ‘எனக்கு என்ன ஆகும்’
என்று வினா ஒன்று எழுப்பினேன்
‘விடை தேடுதல் தான் வாழ்வு’ என்று கூறி
அவ்விடம் விட்டு அகன்றன.
தொலை தூரத்தில்
மேகக் கூட்டங்களின் சாயைகள் நீரினில்.
அப்போதும் நீர்ப் பரப்பு சலனமற்று இருந்தது.
நாளின் முடிவுப் பொழுதினில்
தனித்து நீயும் நானும்.
அறை எங்கும் நறுமணம்.
‘எனக்கான..’ எனத்துவங்குயில்
‘அனைத்தும் அறிவோம்’ என்கிறாய்.
ஆரத்தழுவுதலில்
கனத்திருந்த இதயம் கரைந்து போகிறது.
உனக்கான முத்த மழைகள்
கண்களை நீரினில் கரைத்துவிடுகின்றன.
மீண்டும் வார்த்தைகளைக் கோர்த்து
வாக்கியமாக்க துவங்குகிறேன்.
எல்லைகள் அற்ற பிரணவ ஓலி
எனக்குள் எனக்காக.