களைப்போடு வீட்டிற்குள் நான். இரண்டு முறை சுற்றி வந்து காற்றில் கைகளை மூடி ‘என்ன இருக்கிறது தெரியுமா’ என்று என் கைகளை விரிக்க சொல்கிறாய். வினாக்களோடு விடுபடுகின்றன கைகள். பெரிய வண்ணத்துப் பூச்சியும், சில சிறிய வண்ணத்துப் பூச்சிக் கூட்டமும் என்கிறாய். வண்ணத்துப் பூச்சிகளின் இடமாறுதலில் தெரிகிறது, நான் தொலைத்து விட்ட குழந்தைப் பருவங்கள்.
யாருமற்ற இரவில் வெற்றுப் புள்ளியாய் நீ. மனம் காட்டி மோனமிட்டிருக்கிறாய். உன் கண்ணசைப்பில் கைக்குழந்தையாகிறேன். என் காதலைச் சொல்ல துணிகிறேன். ‘ஸ்துலத்தையா, சூட்சமத்தையா’ என்கிறய். விழி அருவி மடைதாண்டி பெரும் சப்தத்தோடு விரைந்து செல்கிறது. இராவணன் இராமனான பொழுதினை ஒத்து தன்னை இழத்தல் நிகழ்கிறது. ஊழிப் பெருங்காற்றின் ஓலிகள் என் காதினில். “கிழத்துக்கு இழுக்குது, இருக்கிற காசை அழிக்கிறத்துக்குன்னு வந்திருக்கிறான் செத்தாலும் நிம்மதியாய் இருப்பேன், போய் டாக்டர கூட்டிகிட்டு வாடா”.
மழையினின் நனைந்து வீட்டிற்குள் நுழைகிறேன். ‘குடை எடுத்து போகமாட்டாயா’ என்று கூறி எனக்கே எனக்காக வீட்டிற்குள் குடை பிடிக்கிறாய். மழை இடம் மாறி கண்ணுக்குள்.
எனது பள்ளி விடுமுறை நாளுக்கு தாத்தா-பாட்டி வீட்டிற்கு செல்வது வழக்கம்.
‘டேய்’ – அம்மா
‘ம்’- நான்
‘சினிமாவுக்கு போலாமா’-அம்மா
‘ம்’- நான்
‘போய் தாத்தாகிட்ட கேளு’ -அம்மா
‘தாத்தா,சினிமாவுக்கு போவட்டுமா’ – நான்
‘பத்திரமா போய்ட்டு வாங்க’ – தாத்தா.
மணி 6 நெருங்கிக் கொண்டிருந்தது.
‘சீக்கிரம் கிளம்புமா’
‘இருடா, மாவு அறைச்சிட்டு வந்திடுறேன்’
‘சீக்கிரம் சீக்கிரம் ‘
ஊருக்கு வெளியே 2 கி.மி-ல் தியேட்டர். தொலை தூரத்தில் பாடல். ‘மருத மலை மாமணியே’–
‘டேய், சீக்கிரம் வாடா, மருத மலை பாட்டு போட்டுட்டான், டிக்கட் கொடுக்க ஆரம்பிச்சிட்டான்’.
கூட்டம் வேகமாக செல்ல ஆரம்பிக்கும். இறை உணர்வோடு தொழில் தொடக்கம். அதே சமயம் மற்றவர்களுக்கு ஓரு Communication method. நினைவுகளோடு மூழ்கி TV பார்க்க ஆரம்பித்தேன். ‘மருத மலை மாமணியே – பாடல்’
தொலைதூர மனிதர்களிடம் நட்பு, தொட்டுவிடும் தூர மனிதர்களிடம் விரோதம் வாழ்தல் தாண்டி வசதிகளை கொடுத்த வாழ்வு, வரப்புக்களை உயர்த்தி இருக்கிறது. ஓட்டம் கொண்ட குதிரை ஓர் இடத்தில் நிலைபெறாமாலா செல்லும்?
நீண்ட நாட்களுக்குப் பின் கடவுளுடன் நெருக்கம். வாழ்விற்கான மாறுதலுக்கு வழி என்ன என்றேன். மறுதலித்தலே வாழ்வினை மாற்றும் என்றார். மனைவியிடம் தொடங்கலாமா என்றேன். ‘விதி வசப்பட்டவர்கள் மாந்தர்கள், நீயும் விலக்கல்ல’ என்று கூறி அவ்விடம் அகன்றார்.
எல்லா அப்பாக்களுக்கும் தெரிந்துவிடுகிறது மனைவியின் வார்த்தைகளை மறுதலித்தாலும் மகளின் வார்த்தைகளை மறுக்க முடியாமல் திணறுவதையும் அதன் பொருட்டான சந்தோஷ தோல்விகளும்.
ஆதியில், மனிதர்கள் அற்ற இடத்தினில் ஒரு மரம் இருந்தது. வளரத்துவங்குகையில் அது பேசத்தொடங்கியது. அதன் பாஷைகள் புரியாதனவாக இருந்தன. ஒரு குழந்தையை அழைத்து தன் மேல் கல் எறியச் சொன்னது. புரிந்த குழந்தை கல் எறிந்து சிரித்தது. ‘அங்க ஒரு மரம் இருக்குடா, கல் எறிந்தால் பேசும்டா’ என்றது தனது நண்பர்களிடம். குழந்தைகளின் வருகையினால் தலைகீழ் மாற்றம் அவ்விடத்தில். கால மாற்றத்தில் பயணத்திற்கு இடையூராக இருப்பதாக பயணம் செய்பவன் ஒரு நாள் சொன்னான். விழுதுகள் வேரிலிந்து அறுக்கப்பட்டன. பல காலம் கடந்த பிறகு சில குழந்தைகள் பேசிக்கொண்டன. ‘எங்க முப்பாட்டன் காலத்துல அங்க ஒரு மரம் இருந்தது. எங்க அப்பன் அதை அழிச்சிட்டான்டா ‘
நண்பன் ஒருவனை சந்திக்கச் சென்றிருந்தேன். வீட்டில் தொலைக்காட்சி அலறிக் கொண்டிருந்தது.
தொகுப்பாளர் ஊர் ஊராக சென்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.
தொகுப்பாளர் : இராவணன் தவறு செய்வதாக சொல்லி அவனிடம் இருந்து விலகி வந்த தம்பியின் பெயர் என்ன? பதில் : … தொகுப்பாளர் : விஜய் சினிமா துறைக்கு வந்து இருபது வருடம் ஆகிறது. அவர் நடித்த முதல் படம் எது? பதில் : நாளைய தீர்ப்பு. தொகுப்பாளர் : மிக அருமையான பதில் பார்வையாளர்கள் மத்தியில் மிக்க சந்தோஷம்.