அமுதமொழி – விகாரி – ஆடி – 22 (2019)


பாடல்

நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த்
தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் – அற்புதம்போல்
ஆனா அறிவாய் அளவிறந்து தோன்றானோ
வானே முதல்களையின் வந்து

திருநெறி 1 – சிவஞானபோதம் – மெய்கண்டார்

கருத்துஅசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

குணம் என்பதாகிய எண் குணம் உடையவனும், அழுக்கு எனும் குற்றங்கள் அற்றவன் ஆனவனும், எக்காலத்திலும் துன்பமற்றவனும், மேம்பட்டதான பரம் பொருள் ஆனவனும் படைப்பில் முதல் முதலில் தோன்றிய ஆகாயமே அசத்து என்று சுட்டறிவினைக் கொண்டு அறியும் பொருளாய்  கொண்ட அறிவினைக் கடந்து சூன்யப் பொருள் போல் தோன்றி, (குருவருளால்) சுட்டறிவதால் உண்டாகும் தன்னறிவினால் நீங்காமல் நிலை பெறுவதாகிய சோதி வடிவாய் (அகத்தில்) விளங்கிக் தோன்றுவான்.

விளக்க உரை

  • தற்பரம் தனக்குப் பரமென விரியும்.
  • சூனியமாய்த் தோன்றினாலும் அது அற்புதம் போல் வந்தது
  • தனி முதல்வன் – உலகியல் விடுத்து அதைக் கடந்து அதற்கும் காரணாய் இருக்கும் ஞானத் தன்மைப் பற்றியது.
  • பிரபஞ்சம் நிலைப்பு தன்மை உடையது அல்ல எனும் பேருண்மையினையும், அசத்தாய் உள்ள உலகினைக் அறிய ஞான வடிவமாகியவனே அருளிச் செய்ய இயலும் என்றும், அசத்து நிலையுடைய பொருள்கள் தன் சொருபத்தை காட்டாது மறைத்து நிற்கும் இயல்பு உடையது; இது நிலைப்பு தன்மை உடையது என்று அறிய உணர்த்துவது ஞான சொருபமாகிய பதி ஞானம் என்று சுப்பிரமணிய தேசிகர் உரையில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply