அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  பரம்

பொருள்

  • மேலானது
  • திருமால்நிலை ஐந்தனுள் ஒன்று –முதல் நிலை
  • கடவுள்
  • மேலுலகம்
  • திவ்வியம்
  • மோட்சம்
  • பிறவி நீக்கம்
  • முன்
  • மேலிடம்
  • அன்னியம்
  • சார்பு
  • தகுதி
  • நிறைவு
  • நரகம்
  • பாரம்
  • உடல்
  • கவசம்
  • கேடகவகை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

சிவபெருமான், இவ்வாறு பல உலகங்கள் பலவற்றையும் படைத்து, பிறவாமையால் அமரர் எனும் பொருள் பற்றி நிற்கும் தேவர்களையும் படைத்து,  தேவர் ஒழிந்த பிற உயிர்களையும் படைத்து,அவற்றுள் சித்துப்பொருளை அடிமைகளாகவும், சடப் பொருளை உடைமைகளாகவும் கொண்டு தான் தலைவனாய் நின்று அவை அனைத்தையும் ஆள்கின்றான்.

விளக்க உரை

  • உயிர்கட்குப் பந்தமும், வீடும் தருதலும் அவனுக்குக் கடனாதல் என்பது பற்றி கூறப்பட்டப் பாடல்
  • ‘அடிமைகளாகிய உயிர்கட்கு, வேண்டும் காலத்து வேண்டுவனவற்றைத் தருதல் அவனுக்குக் கடன்` என்பது குறிப்பு.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – வயிரவன்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  வயிரவன்

பொருள்

  • பைரவரின்  பலவேறு பெயர்களில் ஒன்று
  • பிரம்ம சிரேச்சிதர்
  • உக்ர பைரவர்
  • க்ஷேத்ரபாலகர்
  • வடுகர்
  • ஆபத்துதாரனர்
  • சட்டைநாதர்
  • கஞ்சுகன்
  • கரிமுக்தன்
  • நிர்வாணி
  • சித்தன்
  • கபாலி
  • வாதுகன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

இச்சக்கரத்தில்(வைரவச் சக்கரத்தில்) விளங்கும் வயிரவ மூர்த்தியானவர், சூலம் மற்றும் கபாலங்களை ஏந்திய வேக வடிவ மூர்த்தி ஆவார். அவர் தம் அடியவர் தவச் செயலுக்குப் பகையாய் நிற்பவரை தாமே முன்னின்று சூழ்ச்சி அற்றவராகச் செய்து, அவர்களது உயிரையும் போக்கித் தமது வெற்றிக்கு அறிகுறியாக பகைவர்களின் உயிர் நீங்கிய உடலங்களைப் பந்துபோல எறிந்து வீர விளையாட்டுச் செய்தருளுவர்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

ஐயம் இல்லாமல் விஷத்தை நேர அறிவது என்ன அளவை
காட்சி அளவை

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கொழுத்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  கொழுத்தல்

பொருள்

  • செழித்தல்
  • உடற்கொழுப்பு மிகுதல்
  • வளம்மிகுத்தல்
  • குழம்பாயிருத்தல்
  • திமிர்கொள்ளுதல்
  • பூமி மதர்த்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்னும் தோட்டியை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

மும்மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவை கொண்டு ஐந்து இந்திரியங்களும் மத யானைகள் போன்று தறியில் கட்டுபடாது பிளிறிக்கொண்டு தாம் நினைத்தபடி செல்லும் இயல்பான தன்மை உடையவை. அதை அறிந்து நான் அவைகளை அடக்கி நேர் வழியில் செலுத்துவதன் பொருட்டு அறிவு எனும் ஞானமாகிய அங்குசத்தைப் பயன்படுத்தினேன். எனினும் அவைகள் அதையும் மீறித் தம் விருப்பப்படி ஓடித் தமக்கு விருப்பமானவைகளை மிகுதியாக பெற்று, அதனால் மேலும் மதம் மிகுந்து தீய குணத்தை மிக அடைந்து என்னை நிலைகுலையச் செய்யுமாறு பெரிது.

விளக்க உரை

  • ஞானத்தின் வழி சென்றாலும் ஐந்து இந்திரியங்களை அடக்காமல் புறக்கணித்தால் அவற்றால் பெருங்கேடு விளையும் எனும் பொருள் பற்றியது இப்பாடல்.
  • இந்திரியங்களால் அடைப்பெறும் சுகங்கள் அனைத்தும் மேலும் மேலும் துன்பம் தருபவையே.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

ஞேயம் என்பது என்ன?
அறியப்படும் பொருள்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இணர்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  இணர்

பொருள்

  • ஒழுங்கு
  • தொடர்ச்சி
  • பூங்கொத்து

வாக்கிய பயன்பாடு

இணஞ்சி போனாத்தான் வாழ்க்க, அத நீங்க நல்லா புரிஞ்சிக்கணும்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

ஒரு பிரபஞ்ச பொருள்களை உணர்வதற்கு கருவியாகிய இருக்கும் உணர்வும், அந்த உணர்வினால் பொருள்களை உணர்கின்ற உயிரும், உணரப்பட்ட பொருள்களை விரும்பும் விருப்பமும், வெறுக்கின்ற வெறுப்பும் எல்லாம் ஆகியவன் சிவன். அனைத்துப் பிரபஞ்சப் பொருள்களையும் ஒன்றாக்கி இணைத்து செயற்படுத்துகின்ற அவன் பிறர் ஒருவராலும் பிரபஞ்சத்தில் இருந்து தனியே வேறுபடுத்தி நினைக்க வரமாட்டான். ஆயினும் கொத்தாய் உள்ள வாசனை மிக்க மலர்களிடம் இருந்து மணம் கமழ்வது போல அனைத்துப் பொருளின் செயல் பாட்டிலும் அவன் விளங்குகிறான்.

விளக்க உரை

  • எல்லாப் பொருள்களிலும் அவன் நீக்கமற நிறைந்து நிற்றல் பற்றியும், அனைத்துப் பொருள்களின் செயல் பாட்டையும் அவனது செயலாக உணர்தல் பற்றியதும் குறித்தது இப்பாடல்.
  • புணர்வு – விடாது விருப்பம் கொண்டு பற்றுதல்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

பிரமேயம் என்பது என்ன?
அளக்கப்படும் பொருள்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பரதுரியம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  பரதுரியம்

பொருள்

  • முத்துரியத்தில் ஒன்று (சீவதுரியம், பரதுரியம், சிவ துரியம்)
  • விழிப்பு, கனவு, உறக்கம்  எனும் மூன்றிற்கும் அப்பாற்பட்ட நான்காவது நிலை துரியம்; இதற்கு மேல் அதி நுட்பமானது பரதுரியம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பரதுரி யத்து நனவும் படிஉண்ட
விரிவில் கனவும் இதன்உப சாந்தத்(து)
உரிய சுழுனையும் ஓவும் சிவன்பால்
அரிய துரியம் அசிபதம் ஆமே.

எட்டாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

பரதுரியத்தில் உலகத்தை அனுபவிக்கும் கேவல சகல அஞ்சவத்தைகள் ஆகிய (விழிப்பு, உறக்கம், கனவு, துரியம், துரியாதீதம்) எப்பொழுதும் நிகழாது முழுவதுமாக நீங்கும். ஆயினும் நின்மல துரியத்தில் அவை ஒரு சில நேரங்களில் நிகழ்ந்தாலும் நிகழும். ஆகவே, நின்மல துரியம் என்பது `அசி` பத அனுபவமாய் நிற்பதே ஆகும்.

விளக்க உரை

  • அதையும் கடந்த அனுபவம் ஆதல் இல்லை’ எனும் பொருளில் இப்பாடல்.
  • நின்மல துரியம் – கேவல அவத்தைகள் நீங்கி, அருளாலே தன்னையும் கண்டு அருளையும் கண்டு அதன் வயமாய் நிற்கும் நிலை.
  • நனவு, கனவு, சுழுத்தி, துரியம் ஆகிய நான்கு வேறு வேறு நிலைகள் ஒன்றோடு ஒன்று முடியும் இடத்திலேயே மற்றொன்று (சீவதுரியம், பரதுரியம், சிவ துரியம்) தொடங்கிவிடும்.
  • அதனால் பன்னிரண்டு நிலைகள் (குணம் மூன்றும் ( சாத்வீகம், ராட்சத, தாமச), நான்காகிய அந்தக்கரணங்கள்(மனம், சித்தம், புத்தி, அகங்காகரம்) இவைகள் ஐம்பொறிகள் வழியே கலந்து) சுருங்கிப் பத்து நிலைகள் (மெய், வாய், கண்,மூக்கு,செவி,பகுத்தறிவு ஆகிய ஆறறிவு மற்றும் குறிப்பறிவு, மெய்யறிவு, நுண் மாண் நுழை புலம் என்னும் அறிவு (சிற்றம்பலம் நுழைய தேவையான அறிவு), வாலறிவு (இறை அறிவு)) ஆகக் குறைந்துவிடும். சீவதுரியம் முடியும் இடத்தில் பரநனவு நிலை தொடங்கும். பரதுரியம் முடியும் இடத்தில் சிவதுரியத்தின் நனவு நிலை தொடங்கி விடும்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காரணத்தில் இருந்து தோன்றும் காரிய வளர்ச்சி வகைகள் எவை?
பரிணாமம், விருத்தி

 

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

 

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வந்தித்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வந்தித்தல்

பொருள்

  • வணங்குதல்
  • புகழ்தல்
  • கட்டுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

இடநாடியாகிய சந்திர கலை வழியாகவும், பின்பு வல நாடியாகிய சூரிய கலை வழியாகவும்,  பிராண வாயுவை அடக்கியும், வெளியே விட்டும் ஒப்பற்ற நிறைவு உடைய ஒருவனாகி, வானில் அரசாளும் தேவர்களின் தலைவனாக இருந்து வழிபாடு செய்யத்தக்கதாகவும் இருக்கும் சிவனது திருவடிகளை என்றும் வணங்கி  தியானிப்பேன். அவனை புறத்திலும் கண்டு வழிபடுவேன். இவை எல்லாமும் இங்குக் கூறிய தாசமார்க்கத்தில் சொல்லப்பட்டவை.

விளக்க உரை

  • ‘பின்பு அவனைப் புறத்திலும் சில இடங்களில் கண்டு வழிபடுவேன்’ எனு சில இடங்களில் விளக்கம் தரப்பட்டுள்ளன. ‘சில இடங்களில் கண்டு வழிபடுவேன்’ எனும் பொழுது பல இடங்களில் கண்டு வழிபட மாட்டேன் எனும் பொருள் விளக்கமுறும். சித்தர் என்பதாலும், அக மற்றும் புற வழிபாட்டு முறைகளை அறிந்து கூறுவதாலும் ‘அவனை புறத்திலும் கண்டு வழிபடுவேன்’ எனும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. (இறை அன்பர்கள் தகுந்த விளக்கம் அளித்தால் பொருள் உணர்ந்து மகிழ்வுறுவேன்)
  • ‘வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்’ எனும் அபிராமி அந்தாதி வரிகளும் ‘வந்திப்பன் வானவர் தேவனை’ எனும் இப்பாடல் வரிகளும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காரியத்தோடு தொடர்பு உடைய காரணம் எது?
முதற்காரணம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தன்மம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தன்மம்

பொருள்

  • தருமம்
  • சலாசனவகை
  • நீதி
  • நன்மை
  • அறம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.

திருமந்திரம் – முதல் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

கூற்றுவனாகிய எமன், தன்னைப் பிறர் காணாதவாறும், தன்னால் பற்றப்படுவர் நல்ல பண்பினை உடையர் என்றும், தம்மை அன்றித் தம் சுற்றத்தார்களை காணாதவர்கள் என்று எண்ணாமலும், இளையர் என்று எண்ணாமலும், பிறரால் தடுத்தற்கரிய ஆற்றலோடு வருவான். அவ்வாறு வரும் முன்னே நீங்கள் அறத்தையும், தவத்தையும் செய்து கொள்ளுங்கள்.

விளக்க உரை

  • உடல் நிலைத்திருக்கும் போதே அறம் செய்ய வலியுறுத்தல் வேண்டி இப்பாடல்
  • அறம் செய்தல் (அது பற்றி வாழ்தலும்) தவம் செய்தலுடன் தொடர்புடையன. எனவே இவை உம்மைத் தொகையால் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

சமூக ஊடகங்கள்