‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – அந்தித்தல்
பொருள்
சந்தித்தல்
நெருங்குதல்
முடித்து வைத்தல்
முடிவு செய்தல்
இறத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல் வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும் வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
முதலில் சந்திர கலை ஆகிய இடநாடியின் வழியும், பின்பு சூரிய கலை நாடி ஆகிய வல நாடியின் வழியும், பிராண வாயுவை அடக்கியும், வெளி விட்டும் ஒப்பற்ற ஒருவனாகிய சிவனது திருவடிகளை என்றும் தியானிப்பேன். பின்பு அவனைப் புறத்திலும் சில இடங்களில் கண்டு வழிபடுவேன். இவை எல்லாமும் இங்குக் கூறிய தாசமார்க்கத்தில் சொல்லப்பட்டன.
விளக்கஉரை
தாச மார்க்கம் வழி சிறப்பு நிலை எய்துதல் குறித்து கூறப் பட்டப்பாடல்.
சரியை ஆகிய தாசமார்க்கத்தில் நிற்போர் சமயதீக்கை பெற்று மூல மந்திர செபம், சதாசிவத் தியானம், கதிர் வழிபாடு என்பவற்றை நாள்தோறும் தவறாது செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அவரது சரியைத் தொண்டு சிறப்பாய் விளங்கிப் பயன் தரும் என்றவாறு.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
உரை அளவையின் மூன்று வகைகள் யாவை? தந்திரச் சொல், மந்திரச் சொல், உபதேசச் சொல்
முருகன் அகத்தியருக்கு உபதேசித்து அருளிய யோகஞானம் 500
கருத்துஉரை
தானே அணுவாகவும், அதன் பொருட்டான அசைவாகவும் ஆகி அண்டம் முதல் பிண்டம் வரை அனைத்திலும் நிறைந்த வஸ்துவானது, அணு இல்லா இடம் ஏதும் இல்லாமையால் பிரபஞ்சம் எங்கிலும் நிறைந்தது. வினைகளின் வழியே வரும் அஞ்ஞானம் விலகும் பொழுது மெய்ஞானம் என்று ஒன்றுள்ளது என்பது புலனாகும். மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் தன்னிலையை உணர்ந்திடுவார். தன்னை முழுமையாக அறிந்து மெய்ஞான வடிவாக நிறைந்தவர் கந்தக் கடவுள். மூம்மூலம் உரைத்து அதை உணர்வதால் பொய்மை விலகி உண்மை நிலை விளங்கும என்பது நடைமுறை. ஆனால் கந்தனே மும்மூல வடிவாக ஆனதனால் அவ்வாறான மும்மூல வடிவம் கொண்டப்பின் கொள்ளத்தக்க தேவை என்பது ஏதும் இல்லை. சிரத்தில் இருக்கும் பூரணமான மெய்ப்பொருள் மலங்களை களையறுத்த பின் கிட்டும் உன்னத நிலையே சிரஞ்சிவி தன்மையாகும். தான் யார், தன் தன்மை என்ன என்ற உண்மை அறியாது தேகம் விடுதலையே இறப்பு என்பர். மாறாகத் தான் யார் எனும் தன்மையினை அறிந்து கொண்டோர் இவ்வுடலை விலக்கும் காலம் ‘இது ஆடை மாறுதல் போல்’ என்று அறிவர். இவ்வாறு காயம் நீக்குதலை தாமற்ற மாற்றொன்று என அறிந்தவரே சிரஞ்சிவி ஆவார். உண்மையின் வடிவமாக கந்தன் உருக் கொண்டு நின்றதால் மும்மூலம் கொள்ளாது சிரஞ்சிவி ஆனான். மும்மூலம் கொள்ளுவதன் காரணமாக வாசி கூடி நிலை மாறி வாசியானது சிவா என்று மாறும். இவ்வாறான சிவமே கந்தனானதால் மாறுதலுக்கு உட்படவும் கொள்ளவும் எதுவுமில்லை. நிதியிலோ நிலையிலோ இல்லை என்ற நிலையில்லாதவரை உலகம் தனவானென்று கூறும். ஆனால் ‘தான் இல்லை’ என்ற உண்மையை அறிந்தவரே உண்மையில் தனவான் ஆவார்கள். ‘தளர்ச்சி இல்லா தேகம்’, ‘நரை முடி இல்லாமை’ ஆகியவை கொண்டிருப்பதுவே அறிவீலிகளால் இளமை என்று குறிக்கப்பெறும். உண்மையில் ‘தளர்ச்சி இல்லா செயல் ஆக்கம்’, ‘மருட்சிஅற்று தீர்மான முடிவு எடுக்கும் நிலை’ ஆகியவையே இளமை ஆகும். இவர்களை குமரன் என்றும் கூறுவார்கள். வயதில் முதியவர்கள் செயலில் வேகம் காணும் போது அவரை குமரன் என்று கூறுவார்கள். அந்த நிலையை யாம் வேண்டி நின்றோம். இந்த நிலையை அருளக் கடவீர் என அகத்தியெம்பெருமான் தனது குருவாகிய கந்தக் கடவுளிடம்வேண்டுகிறார்.
விளக்கஉரை
அகத்தியர் முருகனிடத்தில் ‘அருள்வீர்’ என வேண்டும் பாடல்
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
கருதல் அளவையின் இரண்டு வகைகள் யாவை? தன்பொருட்டு அனுமானம், பிறர் பொருட்டு அனுமானம்
(இப் பாடலுக்கான விளக்கம் முழுவதும் சித்தர்களுக்கு தலைவரான அகத்திய மாமுனியால் அருளப் பெற்றது. அவரின் பாடல்களைக் கொண்டு அவர் பற்றி விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்)
கூரிய அம்பு எய்து முப்புரங்களையும் அழித்து, குயில் போன்ற இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனாகி, மயில்கள் நிறைந்து வாழும் சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றவர்களுக்குப் பாவம் எதுவும் இல்லை.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
கருதல் அளவையின் நான்கு வகைகள் யாவை? வாயில் காட்சி, மானதக் காட்சி, தன் வேதனைக் காட்சி, யோகக் காட்சி
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
கம்பராமாயணம் – பால காண்டம்
கருத்துஉரை
ஐந்து பூதங்களில் ஒன்றான வாயுவினை குல தெய்வமாக கொண்ட கேசரீ எனும் வானரத் தலைவரின் மைந்தனானவர் அனுமன்; ஐந்து பூதங்களில் ஒன்றான (கடல்) நீரைத் தாண்டி, ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாய மார்க்கமாக, ஸ்ரீ ராமனுக்காக ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு, ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை அயல் தேசமான இலங்கையில் வைத்தான். அவன் எம்மை அனைத்தும் அளித்துக் காப்பான்.
விளக்க உரை
அனுமனின் சேவை சிறப்பாக காட்ட கம்பனால் எழுதப்பட்டப் பாடல்
ஐந்து பூதங்களையும் அஞ்சிலே என்ற சொல் வைத்து சிறப்பாக பாடல் அமைத்தது போற்றுதலுக்கு உரியது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
ஒரு பொருளை மற்றொரு பொருளாக மயக்கி அறியும் அறிவு எது? திரிபு
கணவனுக்கு ஏற்ற மனைவி அமையப்பெற்றால் எக்காரணம் பற்றியும் அவளுடன் கூடி வாழலாம். சற்றே மாறுபாடு கொண்டு குழப்பம் தரும் எதிர்மறையான மனைவி அமையப்பெற்றால் அவன் எவரிடமும் எதுவும் விளக்காமல் சந்நியாசம் கொள்ளலாம்.
தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே
அபிராமி அந்தாதி
கருத்துஉரை
அபிராமி அன்னையே! நீ அணிந்து இருப்பது கடம்ப மாலை, உன்னுடைய படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); உன்னிடத்தில் இருப்பதோ கரும்பு வில்; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உனக்கு உண்டு. நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.
விளக்கஉரை
படை பஞ்சபாணம் தனுக் கரும்பு – உலக உயிர்களை படைப்பவள் எனும் பொருள் பற்றியது இவ்வரிகள். இவ்வாறான அருள் பெற்றே மன்மதன் தன் தொழில் செய்கிறான். மோக வடிவமாகவும், அதை நீக்கும் வலிமை பெற்றவள் என்பதாகவும் பொருள் கொள்ளலாம். (சிவனால் எரிக்கப்பட்ட காமனின் சாம்பலிலிருந்து தோன்றிய பண்டன் எனும் அரக்கனை அழிக்க, தேவியும் ஈசனும், மகா காமேசுவரனாகவும், திரிபுரசுந்தரியாகவும் தோன்றி காமனின் ஆயுதங்களான கரும்பு வில்லும் மலர்ப்பாணமும் தாங்கி அவனைக் கொன்று அழித்தாள்.)
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது – ‘உன்னை வணங்கும் பக்தர்கள் உன்னை ஏத்தும் பொழுது நள்ளிரவு’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. அஃதாவதான இரவுப் பொழுதில் (மாயைக்கு உட்பட்டு இருக்கும் காலங்களில் எனும் பொருள் பொருத்தமாக தோன்றுகிறது) அதை விலக்கி நல்வாழ்வு தருபவள்.
ஒன்றோடு இரண்டு நயனங்களே – நெற்றிக்கண் ஒன்றோடு சேர்த்து மூன்று நயனங்கள் – அம்மை அப்பர் திருக்கோலம் (சிவசக்தி சொருபம்).
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி ஆம் பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மணி என்ன
வரு பலவாய் நிற்கும் மாமாது தானே.
எனும் திருமந்திரப் பாடலும்,
‘சிந்தூராருணவிக்ரஹாம்த்ரிநயனாம்‘ என்று தொடங்கும் லலிதா சஹஸ்ரநாமமும் இங்கு ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
விட்டு விலகாமல் உடன் நிகழும் இயல்புக்கு பெயர் என்ன? அவிநா பாவம்
மனம் பலவழிகளிலும் புறத்தில் வியாபிக்காமல் ஆறு ஆறாதாரங்களிலும் அதற்கான உபாசனைத் தேவதைகளைத் தியானித்து நிராதாரமாகிய மனசலனமற்ற இடத்தே சென்று மேலிடமாகிய திருவருளினிடத்திலே செல்லுவாயாக; அப்படிப்பட்ட அந்த கர்த்தாக்களுக்கு இருப்பிடம் அந்தத் திருவருளே.
விளக்க உரை
நிராதாரத யோகம் – ஆன்மா தன்னறிவு இழந்து அறிவே வடிவமான சிவனை அடைந்து பற்றற்று நிற்கும் நிலை
ஆலகால விடத்தை உண்டு அதனால் உண்டான கறை பொருந்திய கண்டத்தை உடையவனும், நறுமணம் கமழும் கொன்றை மலர் அணிந்த சடைமுடியின்மீது கங்கையாற்றையும் அணிந்தவனுமாய சிவ பெருமானுக்கு உரித்தான தலம் சிறகுகளுடன் கூடிய மது உண்ட வண்டுகள் ஒலிக்கும் பொழில்களால் சூழப்பட்ட திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் உள்ள ஆலந்துறை என்னும் கோயிலாகும். அக்கோயிலுக்குச் சென்று அப்பெருமானது திருவடிகளைத் துதி செய்து தொழுவீராக.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காட்சியாலும், அனுமானத்தாலும் அறிய முடியாததை ஆப்த வாக்கியத்தால் அறிவது என்ன அளவை? உரை அளவை (நூல் அளவை)
சிவபெருமான், இவ்வாறு பல உலகங்கள் பலவற்றையும் படைத்து, பிறவாமையால் அமரர் எனும் பொருள் பற்றி நிற்கும் தேவர்களையும் படைத்து, தேவர் ஒழிந்த பிற உயிர்களையும் படைத்து,அவற்றுள் சித்துப்பொருளை அடிமைகளாகவும், சடப் பொருளை உடைமைகளாகவும் கொண்டு தான் தலைவனாய் நின்று அவை அனைத்தையும் ஆள்கின்றான்.
விளக்க உரை
உயிர்கட்குப் பந்தமும், வீடும் தருதலும் அவனுக்குக் கடனாதல் என்பது பற்றி கூறப்பட்டப் பாடல்
‘அடிமைகளாகிய உயிர்கட்கு, வேண்டும் காலத்து வேண்டுவனவற்றைத் தருதல் அவனுக்குக் கடன்` என்பது குறிப்பு.
காலபாசம் – பாசக்கயிறு – (பகைவர்களின் கையையும் கால்களையும் கட்டப் பயன்படும். ஒரு கயிறு. இரண்டு / மூன்று கயிறுகள் சேர்ந்து அமைந்ததாகும். எளிதில் அவிழ்க்கும் சுருக்கு முடிச்சு இடப்பட்டு இருக்கும்)
படைக்கலமும் பாசக்கயிறும் பற்றிய கைகளை உடைய நம் தூதுவர்களே! நம்முடைய ஈசன் அடியரை சென்று அடையாதீர்கள்; நீங்கள், இடபத்தை ஊர்தியாகக் கொண்ட இறைவன் அடியார் குழுமத்தின் பக்காமல் போகாமல் அவர்களை வழிபட்டு செல்வீராக!
விளக்கஉரை
பெரும்பாலான தெய்வங்களின் கைகளில் இருக்கும் ஒருவகை ஆயுதம்
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
மறைந்து நிற்கும் பொருளை அறிந்த ஒன்றின் மூலம் அறிவது என்ன அளவை? கருதல் அளவை
நடந்த வயிரவன் சூல கபாலி கடந்த பகைவனைக் கண்ணது போக்கித் தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
இச்சக்கரத்தில்(வைரவச் சக்கரத்தில்) விளங்கும் வயிரவ மூர்த்தியானவர், சூலம் மற்றும் கபாலங்களை ஏந்திய வேக வடிவ மூர்த்தி ஆவார். அவர் தம் அடியவர் தவச் செயலுக்குப் பகையாய் நிற்பவரை தாமே முன்னின்று சூழ்ச்சி அற்றவராகச் செய்து, அவர்களது உயிரையும் போக்கித் தமது வெற்றிக்கு அறிகுறியாக பகைவர்களின் உயிர் நீங்கிய உடலங்களைப் பந்துபோல எறிந்து வீர விளையாட்டுச் செய்தருளுவர்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
ஐயம் இல்லாமல் விஷத்தை நேர அறிவது என்ன அளவை காட்சி அளவை
இறைவன், நீண்ட சடை உடையவனும், ‘மைபூசிய கண்களை உடைய உமையுடன் தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும் ஆவான்’ என்று கூறினால் அவன் அவ்வளவே அத்தன்மை மட்டும் உடையவன் அல்லன்; (ஏனெனில் அஃது அவனது பொது இயல்பு ஆகும்).அவன் எந்தபொருளையும் தன்பொருட்டு ஏற்க விருப்பம் உடையான் அல்லன். உலகில் இருக்கும் பொருள்களில் ஒருவன் அல்லன்; ஓரு ஊருக்கு மட்டும் உரியவன் அல்லன். எந்தப் பொருளாலும் தனக்கு இணையாக உவமை காட்ட இயலாதவன். அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும், அந்த நிறத்தையும், அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமே ஒழிய அவ்வாறு இல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லாகவோ எழுத்தாகவோ எழுதிக் காட்டல் இயலாது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
உரை அளவையின் வேறு பெயர்கள் என்ன? ஆகமப் பிரமாணம், சப்தப் பிரமாணம்
‘அரகர’ என்று சிவபெருமானைத் துதித்து எழுப்பும் ஒலியும், ஆகமங்களினின் பொருளை முழுமையாக உணர்ந்து ஓதும் ஒலியும், அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும், ஆகாயம் முழுதும் நிறைந்துவந்து எதிரே ஒலிக்கவும், மேன்மை நிறைந்த ‘வாணன்’ என்னும் கணத்தலைவன் வந்து முன்னே வழிகாட்டிச் செல்லவும், ஏறத்தக்கதான முதன்மை நிறைந்த யானையை திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வன் எனக்கு அளித்து அருளினான் என்னே அவனது திருவருள்!
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
கருதல் அளவையின் வேறு பெயர் என்ன? அனுமானப் பிரமாணம்
அஞ்சுமுகம் தோன்றில் ஆறு முகம்தோன்றும்; வெஞ்சமரில் அஞ்சல்என வேல்தோன்றும் ;- நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்; முருகா என்று ஒதுவார் முன்
திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
கருத்துஉரை
‘முருகா’ என்று ஓதுவார் மனதில் எப்பொழுதாவது அச்சம் வந்து தோன்றும் போது ஆறுமுகம் தோன்றும்; கடுமையான மனப் போராட்டத்தில் இருக்கும் போது ‘அஞ்சேல்’ என்று வேல் தோன்றும்! மனதில் ஒரு பொழுது நினைத்தால் அவனது திருத் தாள் தோன்றும்.
விளக்கஉரை
எண்ணலங்காரம் சார்ந்தது இப்பாடல் – ஐந்து முகம், ஆறுமுகம், ஒருக்கால், இருக்கால்
அஞ்சு முகம் (ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம்) எனும் சிவ பெருமானின் ஐந்து முகம் தோன்றும் பொழுதினில் மேல் குறிப்பிட்ட ஐந்து முகங்குகளுடன் ஆறாவது முகமாகிய அதோமுகமும் உடைய முருகப் பெருமான் தோன்றுவான். (சடாட்சரம் என்று பொருள் கொள்வாரும் உண்டு). அஃதாவது சிவபெருமான் இருக்கும் இடத்தில் எல்லாம் முருகப் பெருமான் சிவ வடிவமாகத் தோன்றுவான்!
யோக மார்க்கம் முறைப்படி
சிவ வடிவம் கண்ணுறும் போது ஆறு ஆதார நிலைகளும் காட்சி பெறும்.
வாசியினை கால் என்று அழைப்பது சித்தர் மரபு. சுழுமுனை (ஒரு கால்) வழியாக வாசி செல்லும் போது திருத்தாள் (இரு கால்) காட்சி தோன்றும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காட்சி அளவையின் வேறு பெயர்கள் என்ன? பிரத்தியட்சப் பிரமாணம், காண்டல் அளவை
உடலால் ஏற்படும் பிணியொடு, மனதால் ஏற்படும் கவலையால் மனம் தளர்ந்து, சோர்ந்து யான் பாம்பினை இடையில் அணிந்தவனும், நெற்றிக்கண்களை உடையவனுமாகியவன் தந்த யானை முகம் கொண்ட திருவாளனது திருவடிகளையே புகலிடமாக அடைந்தேன்’. அதனால், யான் பிணியும் கவலையும் இல்லாதவன் ஆயினேன். (ஆதலால் நீவிரும் அவனது அடிகளையே புகலிடமாக அடையுங்கள்’ – என்பது குறிப்பு).
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காட்சி அளவையின் வேறு பெயர்கள் யாவை? பிரத்தியட்சப் பிரமாணம், காண்டல் அளவை
மக மாயை களைந்திட வல்ல பிரான் முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே.
கந்தர் அனுபூதி – அருணகிரிநாதர்
கருத்துஉரை
மிகப் பெரியதான வலிமைமிக்க மாபெரும் மாயைகளை எல்லாம் நீக்க வல்லவராக முருகப் பெருமான், தன் அறுமுகத்தில் இருக்கும் ஆறு வாயினால் உபதேசங்களை தந்து அருளிய போதிலும், வீடு, பொன் (செல்வம்), மாதர் என்று இவைகளை எப்பொழுதும் நினைத்து சோர்வு அடையச் செய்கிற உலக மாயைக்குள் கிடந்து கலங்குவதை நான் இன்னும் விடவில்லையே.
விளக்கஉரை
முருகப் பெருமான் தன்னுடைய திருவாக்கால் ஷடாச்சர உபதேசம் செய்தும் நான் தேறவில்லையே என்கிறது மற்றுமொரு உரை.
‘எனக்கு சம்சார மாயை நீங்கவில்லையே’ என பொருள் கொண்டால் முருகனின் பரதத்துவத்திற்கு இழுக்கு ஏற்படும் என்றும் உபதேசம் செய்தவர் எப்படிப்பட்டவர், செய்த உபதேசம் எப்படிப்பட்டது என்பதின் தரமே குறைந்துவிடும் என்று சில குறிப்புகளில் காணப்படுகிறது. அருளாளர்களின் பாடல்கள் அனைத்தும் அவர்களுக்காக எழுதப்பட்டவை அல்ல. சாதாரணமாக இருக்கும் கடை நிலை மனிதர்களின் நிலையில் இருந்து அவர்கள் உய்வதன் பொருட்டு எழுதப்பட்டவை.
மும்மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவை கொண்டு ஐந்து இந்திரியங்களும் மத யானைகள் போன்று தறியில் கட்டுபடாது பிளிறிக்கொண்டு தாம் நினைத்தபடி செல்லும் இயல்பான தன்மை உடையவை. அதை அறிந்து நான் அவைகளை அடக்கி நேர் வழியில் செலுத்துவதன் பொருட்டு அறிவு எனும் ஞானமாகிய அங்குசத்தைப் பயன்படுத்தினேன். எனினும் அவைகள் அதையும் மீறித் தம் விருப்பப்படி ஓடித் தமக்கு விருப்பமானவைகளை மிகுதியாக பெற்று, அதனால் மேலும் மதம் மிகுந்து தீய குணத்தை மிக அடைந்து என்னை நிலைகுலையச் செய்யுமாறு பெரிது.
விளக்க உரை
ஞானத்தின் வழி சென்றாலும் ஐந்து இந்திரியங்களை அடக்காமல் புறக்கணித்தால் அவற்றால் பெருங்கேடு விளையும் எனும் பொருள் பற்றியது இப்பாடல்.
இந்திரியங்களால் அடைப்பெறும் சுகங்கள் அனைத்தும் மேலும் மேலும் துன்பம் தருபவையே.
செம்மையான தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தை என்றும் திருப்பெண்ணாகடம் என்றும் அழைக்கப்பெறும் தூங்கானைமாடத்தில் உறையும் எம் புண்ணியனே! இரக்கக்துடன் கூடிய ஆனந்தம் கொண்டு ‘இச்சிறு தொண்டன் என்னை விருப்புற்று நினைத்தான்’ என்று திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும் தாக்காதவாறு அடியேனைப் பாதுகாக்காமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும். ஆதலினால் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகளில் பற்றித் தோய்ந்த திருநீற்றினை அடியேன் மீது பூசுவாயாக.
விளக்க உரை
சிறு தொண்டன் – தொண்டர்களில் சிறியேன்; சிறு தொண்டு புரிவேன்
அரும் பிணி நோய் – அகற்றுதற்கு இயலா பிணியையும் நோயையும்
பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த கன்னிப் பெண்கள் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள திரு மாமயிலையில், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் கபாலிச்சரர் எனும் பெருமானை பூச்சுக்களை உடைய இளமகளிர் கொண்டாடும் திருவிழாவாகிய கார்த்திகைத் திங்களில் நிகழும் கார்த்திகை விளக்கீடு விழாக்களின்போது திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெங்கணையால் சுட்டாய்; என் பாசத்தொடர்பு அறுத்து ஆண்டுகொள்!-தும்பி பம்பும் மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் சிட்டா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
சிவக்கொழுந்தே! வண்டுகள் விரும்பிச் செல்லும் தேன் பொருந்திய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதியின் வழிபாட்டினை விரும்பும் மேம்பட்டவனே! பகைவருடைய மூன்று மதில்கள் கைந்நொடிப் பொழுதாகிய ஒரு மாத்திரையில் வெந்து போகுமாறு கொடிய அம்பினால் சுட்டு நீறாக்கினாய், அதுபோல் அடியேனுடைய உலகப்பற்றாகிய தொடர்பை நீக்கி அடிமை கொள்வாயாக!