அமுதமொழி – பிலவ – தை – 29 (2022)


பாடல்

அத்துவித சித்த பரிசுத்தர்களிடத்தினில்
   அடுத்திடர் தொலைப்பம் என்றால்
ஆசையெனு மூவகைப் பேய்பிடித் தாவேச
   மாட்டும் வகையல்லாமலே
தத்து பரியொத்தமனம் எத்தனை சொன்னாலுமிது
   தன் வழியிலே இழுத்துத்
தள்ளுதே பாழான கோபமும் அடங்காது
   தன்னரசு நாடு செயுதே!
இத்தனை விதச் சனியில் எப்படி வழிப்படுவ
   தெப்படி பிழைப்பதம்மா?
இனியாகிலும் கடைக்கண் பார்த்து வினைதீர்த்து
   இணை மலர்ப்பதம் அருளுவாய்
வித்தகது தற்கணனிடத்தில் வளரமுதமே
   விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
   விமலி கற்பகவல்லியே

ஸ்ரீ மயிலை கற்பகாம்பிகை பதிகம் – திருமயிலை கற்பகாம்பிகை பதிகம் – தாச்சி அருணாச்சல முதலியார்

கருத்துதுன்பங்களில் உழலும் தன்னை அதனிடத்தில் இருந்து காத்து அருள வேண்டி விண்ணப்பம் செய்யும் பாடல்.

பதவுரை

திருமயிலையில் வீற்றிருந்து மணம் பொருந்திய மலர்களை தனது கூந்தலில் அணிந்து வேதங்களால் தாங்கப் பெறும் திருவடிகளை உடையவளே, சிவபெருமானுக்கு  துணையாக இருக்கும் கற்பகவல்லியே! சித்தமானது  மாறுபாடு இல்லாமல்  இருக்கும் பரிசுத்தர்களை அடைந்து அவர்கள் மூலமாக துயரத்தை தொலைக்க எண்ணும் போது ஆசை, மாயை, கன்மம் எனும் மூவகைப் பேய்கள் பிடித்து ஆவேசமாக ஆட்டுகின்றது; குதிரையினை ஒத்த மனமானது எத்தனை நல்விஷயங்களை  உரைத்தாலும் அதனைக் கேளாமல் தன்னுடைய வழியிலே இழுத்து தள்ளுகிறது; அத்துடன் தீமை தரத் தக்கதான கோபமும் அடங்காது எவருடைய வார்த்தையும் கேளாமல் தானே ஆட்சி செய்கிறது; இவ்வாறு அனைத்தும் துன்பம் தருமாறு  இருக்கும் நிலையில் எவ்வாறு வழிபாடு செய்து வினைகளைக் குறைத்து பிழைக்கமுடியும்? எனவே நீ இனியாவது உன்னுடைய கடைக்கண் பார்வை தந்து என்னுடைய வினைகளைத் தீர்த்து ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும் மலர் போன்ற பாதங்களை அருளுவாய்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.