
பாடல்
முன்னின் றருளும் முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சிவன் உயிர்கட்கு அருள் செய்யும் திறம் கூறும் பாடல்
பதவுரை
அடியவன் ஆகிய எனக்கு என் கண்முன் நின்று முத்தியை அளித்தருளிய சிவன் எப்படிப்பட்டவன் எனில் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகள் நீங்கப் பெற்றார்க்கு அவைகள் நீக்கம் பெற்ற காலத்தில் தனது இயற்கை வடிவோடு வெளி நிற்றல், குருவாய் வந்து நோக்கல், தீண்டல், உரைத்தல் முதலியவைகளைச் செய்து கண்முன் நின்றே அருளை வழங்குவான்; வினையில்லாத நன்மை பொருந்திய அடியார்களுக்கு உயிர்க்கு உயிராய் இருந்தே அருளை வழங்குவான்; யாவர்க்கும் அருள் வழங்கிய பின்னும் அந்த அருள் நிலையினின்றும் நீங்கி வழுவாதவாறு பாதுகாப்பான்; அதன் பயனாக முடிவில் பிறவியை நீக்கிவிடுவான்.
விளக்க உரை
- முன்னின்று அருளுதல் – ஆகமங்கள் வரையறை செய்தபடி பிரளயாகலர், சகலர் ஆகியவர்க்கு அருளும் முறை (வினையில்லாத உயிரினத்தார் விஞ்ஞான கலர்); விஞ்ஞான கலர், பிரளயாகலர், சகலர் ஆகிய மூவகை உயிர்களுக்கும் மூவகையாக அருளுதலை நியமாக ஆகமங்கள் கூறும்
- உலகு – உயிர்தொகுதி
- நடுவுயிர் – உள்ளுயிர்
- நன்னின்ற – அருள் பெறுதலுக்கு வினைகள் தடைகள் இருத்தலின் பொருட்டு வினைகள் முடிவுறும் காலத்தில் நன்மை விளையும் என்பதை விளித்தல்