பாடல்
மாலினுக்கன்று சக்கரமீந்து மலரவற்கொருமுக மொழித்து
ஆலின்கீழறமோர் நால்வருக்கருளி யனலதுவாடுமெம் மடிகள்
காலனைக்காய்ந்து தங்கழலடியாற் காமனைப்பொடிபட நோக்கிப்
பாலனுக்கருள்கள் செய்தவெம்மடிகள் பாம்புர நன்னகராரே
தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
*கருத்து – திருப்பாம்புரம் எனும் திருத்தலத்து உறையும் இறைவனானவர் வீரச் செயல்கள் செய்த இறைவனின் வடிவமானவர் என்பதை கூறும் பாடல்.*
பதவுரை
திருப்பாம்புரம் எனும் திருத்தலத்து உறையும் இறைவனானவர் முன்பு திருமால் விரும்பியதன் பேரில் அவருக்கு சக்கராயுதம் அளித்தவர்; தாமரை மலர் மேல் உறையும் பிரமன் ஐந்து தலைகளை பெற்று அதன் காரணமாக அகந்தை கொண்டிருந்த போது ஒன்றைக் கொய்தவர்; பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருப்பதற்காக படைத்த சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி நால்வருக்குக் கல்லாலின் கீழிருந்து அறம் அருளியவர்; தீயில் நடனமாடும் திருவடிகளை உடையவர்; தங்கத்தால் செய்யப்பட்ட கழலினை அணிந்த திருவடியால் காலனைக் காய்ந்தவர்; காமனை கண்களால் நோக்கி அவனைப் பொடிபட செய்தவர்; உபமன்யு முனிவருக்குப் பாற்கடல் அளித்து அருள் பல செய்ததலைவர் ஆவார்.
விளக்க உரை
- திருப்பாம்புரம் – தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 59 வது சிவத்தலமாகும்
- வீரச் செயல் செய்த தலங்களான திருவீழிழலை(சக்கரம் ஈந்தது), தலை கொய்தது(திருக்கண்டியூர்), காலனை அழித்தது (திருக்கடையூர்), காமனை எரித்தது (திருக்குறுக்கை) ஆகியவை பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
- நால்வர் – சனகாதியர்.
- அறம் – சிவாநுபவம்
- பாலன் – உபமன்யு