
பாடல்
பவன்எம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண்ணோர்பெருமான்
சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண் டான்என் சிறுமைகண்டும்
அவன்எம் பிரான்என்ன நான்அடி யேன்என்ன இப்பரிசே
புவன்எம் பிரான்தெரி யும்பரி சாவ தியம்புகவே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
*கருத்து – மாணிக்கவாசகர் தன் சிறுமை கண்டும் சிவன் அருளிய திறம் உரைத்தது பற்றியப் பாடல்*
பதவுரை
பவன் என்னும் திருப்பெயரால் போற்றப்படுபவனும், எம் தலைவன் ஆனவனும், குளிர்ச்சி பொருந்திய பெருமையமைந்த கங்கையை தலைமாலையாக அணிந்தவனும், விண்ணோர்கள் ஆன தேவர்களுக்கு பெருமான் ஆனவனும், சிவன் என்னும் பெயர் உடையவனும், வினை பற்றி நின்று யான் கொள்ளும் சிறுமையைக் கொண்டும், என்றைக்கும் முழுமையான பிரானான அவன் தன் அடியேன் என்று என்னை ஆண்டு கொண்டருளினன். இதைவிட வேறு என்ன வெகுமதி இருக்க இயலும்?
விளக்க உரை
- பிரான் – தலைவன், தேவன், இறைவன்
- பவனாகிய எம்பிரான், சிவனாகிய எம்பிரான், புவனமாகிய எம்பிரான் – சிவன் தன்மைகளைக் குறிப்பது