
பாடல்
பற்றிய பற்றற உள்ளே – தன்னைப்
பற்றச் சொன் னான்பற்றிப் பார்த்த இடத்தே
பெற்றதை ஏதென்று சொல்வேன் – சற்றும்
பேசாத காரியம் பேசினான் தோழி – சங்கர
தாயுமானவர் திருப்பாடல்கள்
*கருத்து – தாயுமானவர் முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி உரைத்ததும், அதனால் பெற்ற பேரின்பமும் பற்றி உரைக்கும் பாடல்*
பதவுரை
வினை பற்றி நின்று மாயைக்கு உட்பட்டு உலகியலிலும் அது சார்ந்த் பொருள்களிலும் அடியேன் கொண்டுள்ள பற்றுக்கள் முற்றிலும் அறுபடுமாறு செய்வதன் பொருட்டு எளியேன் ஆகிய எனது நெஞ்சத்திலே முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி உரைத்தேன்; அவ்வாறு உரைத்த விடத்து தன்னைப்பற்றி கொள்ளும்படி சொன்னான்; திருவருளால் அவ்வாறு உரைத்தது கண்டு நோக்கின இடத்தில் அடியேன் பெற்று நுகரும் பேரின்பினை எப்படிச் சொல்லுவேன்? அந்த பேரின்பமானது தன்னுனர்வாகிய சுவானுபூதி அன்றிப் பிறர்க்குச் சொல்ல இயலாததாகும். அதனையே தோழி குறிப்பால் பேசியருளினாள்.
விளக்க உரை
- ஆனந்தக் களிப்பிற்கு கீழ் இடம் பெறும் பாடல்
- பேரின்ப அனுபங்களை கூறுமிடத்து பெரியோர்கள் அதன் தன்மையை விளக்க இயலா நிலையில் நின்று விடுகின்றனர்.
போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்
வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து
தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே
ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே
எனும் கந்தர் அலங்காரப் பாடலுடம் ஒப்பு நோக்கி உணர்க.