அமுதமொழி – விகாரி – சித்திரை – 6 (2019)


பாடல்

கள்ள மயக்கந் தொடராமல்
      கவலைப் பிணிகள் அடராமல்
   கனவை நனவாய்த் தொடர்ந்தடர்ந்து
      கரைய விழியின் புனலாறாய்த்

துள்ளி மனந்தான் மிகச்சலனம்
      தொடுத்துத் தொடுத்தே அலையாமல்
   சுகமாய் உன்றன் இருபதத்தைத்
      தொண்டன்மனத்துட்கொண்டருள்வாய்

உள்ள படியே மனத்தடத்தில்
      ஒன்றாய் வாழுங் கனியமுதே
   ஓங்காரத்துக் குள்ளிருந்தே
      உயர்ந்த கமலா சனத்தரசே

வள்ளல் இடத்தி அருள்மயத்தி
      வனச முகத்தி கனகசத்தி
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம்பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

*கருத்துதுயர வாழ்வு மனதில் தொடராமல் திருப்பாதங்களை என் மனதில் நிலை கொள்ளுமாறு செய்விக்க வேண்டும் என்பது பற்றியப் பாடல் *

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, மாறுபாடு இல்லாமல் மனம் எனும் தடத்தில் ஒன்றாக வாழும் அமுதக் கனி போன்றவளே, உயர்ந்ததான தாமரையான கமலாசனத்தில் வீற்றிருப்பவளும், ஓங்கார வடிவத்தின் உப்பொருளாகிய மகாரப் பொருளாக வும்இருப்பவளே, மாறுபாடு இல்லாமல் மனம் எனும் தடத்தில் ஒன்றாக வாழும் அமுதக் கனி போன்றவளே, உயர்ந்ததான தாமரையான கமலாசனத்தில் வீற்றிருப்பவளும், ஓங்கார வடிவத்தின் உப்பொருளாகிய மகாரப் பொருளாக இருப்பவளே, தங்கம் போன்ற திட சக்தி கொண்டவளே! மும் மலங்களில் ஒன்றானதும், எப்பொழுதும் தீமைத் தரத் தக்கதுமான மயக்கம் தொடராமல், வினை பற்றி நின்று செயலாற்றுவதான கவலைப் பிணிகள் தொடராமல், பொய்யான இந்த உலக வாழ்வினை மெய் என்று நம்பி அதனைத் தொடர்ந்தும் அலைந்தும், அதன் பொருட்டு விளையும் துயரங்களால் கண்ணீர் விட்டு அழுது மனமானது நிலைபெறாமல் துள்ளித் திரிவது போல் செய்வதும், மனதில் சலனத்தைக் கொடுத்து வருவதுமான மனதை அலையவிடாமல் செய்து உன்னிடத்தில் இயைத்து வைத்து சுகம் தருவதான உன்னுடைய மலர் போன்ற உன் திருப்பாதங்களை என் மனதில் நிலை கொள்ளுமாறு செய்விப்பாய்.

விளக்க உரை

  • தொடுத்தல் – இயைத்தல், தொடங்குதல், கட்டுதல், பூட்டுதல், வளைத்தல், எய்தல், அணிதல், சேர்த்துவைத்தல், பா தொடுத்தல், உண்டாக்குதல்,வழக்குத் தொடர்தல், பூ முதலியன இணைத்தல்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *