வழி தவறிய நாய் குட்டியாய் எதோ ஒரு கணத்தில் வந்து சேர்ந்தது கிழிந்த ரூபாய் நோட்டு உலகின் நடனம் கண்டு வியக்கும் பொழுதுகளில் செவிகளில் செய்தி ‘நெத்தியில எழுதி ஒட்டியிருக்கும் போல இளித்த வாயன் என்று’
கோபம் கொண்ட தருணங்களில் கண்களை உருட்டி கைகளை காட்டி மிகப் பெரிய மிருகமொன்று உன்னைக் கவ்விச்செல்லும் எனும் தருணங்களில் உங்களை விடவா அப்பா எனும் மகளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது
என்ன வாங்கி வந்திருக்கிறாய் மகள் கேட்கையில் மறுதலித்து கைகளை ஆட்டுகிறேன் யேய் பொய் சொல்ற என்று கைகளை ஆட்டி எதிர்ப்படும் வார்தையில் தென்படுகின்றன என்றைக்குமான கடவுளின் பரிச்சயம்
எல்லா நிலைகளிலும் வெளிப்படுகின்றன கவிதைகள். எண்ண ஓட்டத்திலும் எதிர் கொள்ளும் வெற்றியிலும் கவிதைக்கான கருப்பொருள்கள். வெற்றியிலும் பாராட்டிலும் வெறுமைக்கான நிமிடங்களிலும் சந்தோஷத்தின் சாயல் காட்டும் சக தர்மினியிடமும் உணர்வுகளை உள்வாங்க துவங்கிய வேலைகளில் உள்ளிருந்து ஒலிக்கிறது குரல் நாலு காசு சம்பாதிக்க வக்கிலைனாலும் நாற்பது பக்கம் எழுதுவாரு உங்கப்பாரு.