‘குடை பிடிக்க
கற்றுக் கொண்டேன்
எப்பொழுது மழைவரும் என்கிறாய்’
தகப்பனின் மனதறியா இருக்குமோ
மழை மேகங்கள்.
Photo : Karthik Pasupathi
உருவேறத் திருவேறும்
வினைகளின் வழியே
பிறந்து பார்,
வேறு என்ன இருக்கிறது?
புழுதி நிறைந்த தெருக்களில்
விளையாடு,
வேறு என்ன இருக்கிறது?
உறவுகளோடு சொந்தம்
கொண்டாடு,
வேறு என்ன இருக்கிறது?
கற்றல் தவிர்த்து
அனைத்து விஷயங்களையும் செய்,
வேறு என்ன இருக்கிறது?
பெரு மிருகங்களால்
துரத்தப்படும் சிறு மிருகமாய்
வேலை தேடு,
வேறு என்ன இருக்கிறது?
தனிமை விலக்க
தவறா மணம் செய்,
வேறு என்ன இருக்கிறது?
மனைவியின் வார்த்தைகளால்
வலி கொள்,
வேறு என்ன இருக்கிறது?
குளிரில், ஊன் முழுவதும்
புண்ணாகி குரைத்துச்
செல்லும் நாயினைப் பார்,
வேறு என்ன இருக்கிறது?
தவறாது தமிழ் இலக்கியம் படித்து
தவித்துப் போ,
வேறு என்ன இருக்கிறது?
மகிழ்வின் விளைவாய்
மகிழும் குழந்தை கொள்,
வேறு என்ன இருக்கிறது?
பெருங்குரலுடன் கரைந்து
செல்லும் காகத்தினை உணர்,
வேறு என்ன இருக்கிறது?
கனவுகளில் வாழ்வினை நடத்து
வேறு என்ன இருக்கிறது?
ஒட்டு பீடியும் ஊறுகாயும் கொள்,
வேறு என்ன இருக்கிறது?
மனிதர்களால் விலக்கப்படு,
வேறு என்ன இருக்கிறது?
தடம் மாறாது தனித்துச் செல்லும்
பறவைக் கூட்டங்களை காண்,
வேறு என்ன இருக்கிறது?
தனிமைகளுடன் தனித்திரு,
வேறு என்ன இருக்கிறது?
யாருமற்ற இரவில்
தடயங்கள் அற்று
மரணம் அறிந்து மரித்துப் போ.
வேறு என்ன இருக்கிறது
வாழ்வினை கொண்டாடுதல் தவிர?
Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru
தனித்த அறையில்
தகிக்கும் தனிமையில்
இருக்கும் ஒருவனை
சந்திக்க நேர்ந்தது.
யாவரும் கண்டு உணர முடியா
செடிகளும் மரங்களும் அவனிடத்தில்.
அவன் கண்களில், காதுகளில்,
மூச்சுக் குழல்களில், செவிகளில்.
அவைகள் தாண்டி
மேனி முழுவதும்.
காரணம் அறிய விரும்பி
கேள்விகளைத் தொடுத்தேன்.
பிறந்து காலமுதல்
அவைகள் தன்னிடத்தில் இருப்பதாக உரைத்தான்.
தோன்றி மறையும் இயல்பு
அவைகளுக்கு உண்டு என்று உரைத்தான்.
இயல்பான தனிமைகளில்
எதிர்பாரா அளவு பரவும் என்று உரைத்தான்.
பேச்சுக்களில் அவைகள்
விருட்சங்களாக ஆவதும் உண்டு என்றும்
அவைகள் இயல்பெனவும் உரைத்தான்.
பேச்சுக்களின் முடிவில்
சில மரங்கள் என்னுள்ளும் வேறூன்றி இருந்தன.
நீண்ட நாட்களுக்கான பிறகான
சந்திப்பு உன்னுடன்.
காற்று உன் கூந்தலைத் தழுவிச் செல்கிறது.
‘என்ன வேண்டும்’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
‘வண்ணமும் வாசமும்
சுவையுடன் கூடிய உணவா வேண்டும்’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
நிறைந்த மலர்கள் வேண்டுமா’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
‘சிறந்த உடைகள் வேண்டுமா’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
நாட்களின் நகர்தலை
ஒத்து இருக்கிறது என் கேள்விகள்.
அப்போதும் மௌனத்திருக்கிறாய்.
‘என்னதான் வேண்டும்’ என்கிறேன்.
பெண்களால் மட்டுமே அறியப்படும்
ரகசிய புன்னகையைச் சிந்தி
‘நீ வேண்டும்’ என்று
என் கன்னத்தில் இதழ் பதிக்கிறாய்.
ரகசியமாய் அழும் ஆண்களின்
வரிசையினில் நானும்.
காற்றினில், கருமை இருளில்
கரைந்திருந்தன உன் கண்கள்
தங்கக் கூந்தலாய் உன் கேசம்.
அனைத்தும் அளிக்கும் உள்ளத்தோடு நீ.
கலங்கிய மனதுடம் நான்,
வினாக்களோடு விடிகின்றன
விடியல்கள் என்று
எனக்கான வினாக்களை அடுக்குகிறேன்.
விழி அசைத்து அனைத்துக்கும்
விடைஅளிக்கிறாய்.
உறு பொருள் உரைக்குமாறு கேட்கிறேன்.
காற்றில் ஆடுகின்றன வார்த்தைகள்
‘வட்டி காசுக் கட்டச் சொல்லி
வக்கில் நோட்டீஸ் வந்திருக்குன்னு
உங்கப்பனான்ட சொல்லு.
ஆதியில் மரங்களும் மனிதர்களும்
நேசம் கொண்டவர்களாக இருந்தனர்.
ஒருமித்த மொழியில்
பகிர்ந்து கொண்டனர் தங்கள் உணர்வுகளை.
தன்னை கொடுக்க தயங்கவில்லை மரங்கள்
அதனை விலக்க தயங்கவில்லை மனிதர்கள்.
நாளின் ஒரு பொழுதுகளில்
மனக்கசப்புகள்.
பெருங் காற்றின் வழி இலைகளை உதிர்ப்பதாக
மனிதனின் குரல்கள்.
நித்தமுமான கவனிப்புகள்
அநித்தியமானது என்று மரங்களின் குரல்கள்.
பிறிதொரு சந்ததியில்
மனிதனில் மொழியறிவு குறைந்து, குலைந்து
தான் மட்டும் அனைத்தும் அறிந்தவனாக
கர்வம் கொண்டிருந்தான்.
உலகில் அனைத்து மரங்களையும் அழித்து
கடைசி மரம் அழித்தலில் மரம் சொன்னது;
‘என்னை அழித்தால், நீயும் அழிவாய்’ என்று.
கோடாலியின் கடைசி வெட்டிதலில்
உலகம் தனித்திருந்தது.