பிறந்த குழந்தையை காண வருபவர்களால்
அறை நிரப்பப்பட்டிருந்தது.
எவர் அறியக்கூடும்
அதனையையும் தாண்டி
குழந்தையைக் காணவந்த
மலடி என்று அழைக்கப்பட்டவளின்
கண்ணீர் வலிகளை.
உருவேறத் திருவேறும்
ஆதியில் விசித்திரங்களை ஈனும் பூமியில்
நான் விழுந்த போது
எனக்கு சிறகுகள் இருந்தன.
அப்போது நீர்ப் பரப்பு சலனமற்று இருந்தது.
சில பறவைகளுக்கு சிறகுகள் இருந்தன
பல பறவைகளுக்கு சிறகுகளில் முட்களும் இருந்தன.
பல பறவைகள் சிறகுகள் அற்று.
ஏன் இந்த நிகழ்வுகள் என்றேன் அவைகளிடம்.
மாயையின் தோற்றம் படா இடங்களில் சிறகுகள் இருக்கும்;
சந்தோஷ வாழ்வுடன் கோபங்களை வீசியவைகளுக்கும்,
கோபத்தில் தடித்த வார்த்தைகளை வீசியவைகளுக்கும்,
சிறகுகளில் முட்கள் இருக்கும்;
வாழ்வினை கொண்டாடத் தெரியாதவைகளுக்கு
சிறகுகள் அற்று இருக்கும்
என்றும் பகர்ந்தன.
பதிலின் வசிகரத்தில் ‘எனக்கு என்ன ஆகும்’
என்று வினா ஒன்று எழுப்பினேன்
‘விடை தேடுதல் தான் வாழ்வு’ என்று கூறி
அவ்விடம் விட்டு அகன்றன.
தொலை தூரத்தில்
மேகக் கூட்டங்களின் சாயைகள் நீரினில்.
அப்போதும் நீர்ப் பரப்பு சலனமற்று இருந்தது.
களைப்போடு வீட்டிற்குள் நான்.
இரண்டு முறை சுற்றி வந்து
காற்றில் கைகளை மூடி
‘என்ன இருக்கிறது தெரியுமா’ என்று
என் கைகளை விரிக்க சொல்கிறாய்.
வினாக்களோடு விடுபடுகின்றன கைகள்.
பெரிய வண்ணத்துப் பூச்சியும்,
சில சிறிய வண்ணத்துப் பூச்சிக் கூட்டமும் என்கிறாய்.
வண்ணத்துப் பூச்சிகளின் இடமாறுதலில் தெரிகிறது,
நான் தொலைத்து விட்ட குழந்தைப் பருவங்கள்.