அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 14 (2020)


பாடல்

தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே

ஸ்ரீ வாராஹி மாலை

கருத்து – வாராஹி அன்னையின் உக்ர ஸ்ரூப தியானம் என்ன விஷயங்களைச் செய்யும் என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

அன்னை வாராஹியானவள் கலப்பையை தன்னுடைய கரங்களில் ஆயுதமாக் கொண்டு இருப்பாள்;  என்னுடைய எதிரிகள் என்பவர்களை நெருப்பின் பொறி எழுமாறு தீயில் இட்டு தீய்த்து அவர்களை இல்லாமல் செய்து, அதன்பின் தலைகளை நெரிப்பாள்; தலை,  பின்பகுதி ஆகிய மண்டை மற்றும் மூளையினைத் தின்று பகைவர்களின் நீண்டதான உடலை உரிப்பாள்; படுக்கை போன்று கீழே வீழ்த்தி அந்த உடலை உலர்த்துவாள்.

விளக்க உரை

  • தன் அடியவர்கள் என்பதற்காக எதிரிகளை துவசம் செய்யும் அன்னையின் முறைகளைக் கூறுவது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி – 23 (2020)


பாடல்

மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்து வாய்கடித்துப்
பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே

ஸ்ரீ வாராஹி மாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்துவராஹி அன்னையானவள் பகைவர்கள் என்று கருதுபவர்களை நாசம் செய்வது குறித்து எழுதப்பட்டப்  பாடல்.

பதவுரை

வராஹி அன்னையானவள், மனம், வாக்கு காயம் ஆகியவற்றால் ஒன்றி முத்தி நிலையை அடுத்து நிற்கும் மெய்யில் சிறந்த அடியவர்களை பணியாதவர்களை பகைவர்கள் என்று கருதி மனதாலும், உடலாலும் கடும் கோபம் கொண்டு, அவர்களது தலை கரத்தில் ஏந்தும்படி செய்து, பகைவர்களது கொழுப்பு மிகுந்த உடலினை கடித்து குதறி, துர்நாற்றம் வீசும்படி செய்து, வச்சிரம் போன்ற முகத்தால் குத்தி, வாயால் கடித்து அதில் இருந்து வரும் இரத்ததினை குடிப்பாள்.

விளக்க உரை

  • பகைவர்கள் தடுப்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 3 (2019)


பாடல்

ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள் கொன்றைவேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

வாராகிமாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்து –  தன்னை அண்டிய அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுத்துபவர்களை வீழ்த்தி பகைவர்களுடம் இருந்து காப்பாள் என்று கூறும் பாடல்.

பதவுரை

கொன்றை மலர்களையும், அழகான மகுடத்தினையும்  தன் கூந்தலில் சூடியவளும், தடியினை ஏந்தியவளுமான திரிபுரை எனப்படும் வராகி என்னை வாழ்விப்பதற்காக  வந்து குடி இருந்தாள்; அதுமட்டும் அல்லாமல் எவராவது நமக்கு வினையின் காரணமாக துன்பம் ஏற்படுத்துமாறு செய்தால் அவர்கள் உடலை கூரான வாள் கொண்டு வெட்டி  வாளுக்கு இரையாக்கி விடுவாள்.

விளக்க உரை

  • சீர் – 1) செல்வம் 2) அழகு 3) நன்மை 4) பெருமை 5) புகழ் 6) இயல்பு  7) சமம் 8) கனம் 9) ஓசை 10) செய்யுளின் ஓருறுப்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 21 (2019)


பாடல்

தாளும் மனமும் தலையும் குலையத் தரியவர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கட்கமும் சூலமும் ஏந்திவரும் துணையே

வாராகிமாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்துவாராகியை தொழுபவர்களுக்கு நவக்கிரகங்களாலும், பகைவர்களாலும் துன்பம் இல்லை என்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

வாராகியைப் போற்றி பணியும் அன்பர்களுக்கு நவக்கிரகங்களாலோ  பகைவராலோ பயமில்லை; அவள்  வெற்றி சங்கு ஒலிக்க வாளும், சூலமும் தாங்கியவர்களாக துணைக்கு வருகிறாள்; அவள் அருள் பெருங்கவசமாய் பக்தர்களைக் காத்து நிற்கும்; அவளிடத்தில் பக்தி இல்லாமல் மும்மலங்களில் ஒன்றான கர்வம் கொண்டு காலை முதலாகக் கொண்டு(கண்டம் எனக் கொள்வாரும் உண்டு),  தலை வரை குலையுமாறு செய்து திரிபவர்கள் அழியும் படிக்கு வரம் தர வேண்டும்.

விளக்க உரை

  • தாள் – காகிதம், பாதம்; கால், கால், மரமுதலியவற்றின் அடிப்பகுதி, பூ முதலியவற்றின் அடித்தண்டு, வைக்கோல், விளக்குத் தண்டு, படி, ஆதி, சட்டைக் கயிறு, வால்மீன் விசேடம், ஒற்றைக் காகிதம், தாழ்ப்பாள், கொய்யாக்கட்டை, முட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் திறவுகோல், தாடை, கண்டம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 13 (2019)


பாடல்

படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே

வாராகிமாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்துமெய்ஞான கண்டு உணர்ந்தவர்களை வராகி கைவிடமாட்டாள் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

மெய்ஞானக் கல்வியைக் கற்று அறிந்தவர்களால் பெரிதும் போற்றி வழிபடத்தக்கதான பஞ்சமி தினத்துக்கு உரித்தானவளும், தன்னை பகைப்பவர்களை இரும்புத் தடி கொண்டு அடிக்கும் பேய் போன்றவர்களின் குருதியினைக் குடித்து அவர்களின் குடலினை தோளில் மாலையாக இட்டு அதில் மகிழ்வு கொண்டு நிலை பெற்று வாயில் முற்றத்தில் (சுடுகாடு எனவும் கொள்ளலாம்) இருப்பவளும், பதினான்கு உலகமும் நடுங்குமாறு செய்பவளும் ஆனவள் வாராகி ஆவாள்.

விளக்க உரை

  • குலாவுதல் – உலாவு, சஞ்சரித்தல், நட்பாடுதல், விளங்குதல், மகிழ்தல், நிலைபெறுதல், கொண்டாடுதல்
  • மன்றில் – வாயில்முற்றம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 6 (2019)


பாடல்

ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

வாராகிமாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்துவராகி அன்னையின் உருவத் தோற்றம் குறித்து கூறும் பாடல்.

பதவுரை

மலர்க்கொடி போன்றவளும், உடலுக்கு ஆற்றல் தரும் தெய்வம் ஆனவளும், ஐயும் கிலியும் எனும் பீஜ மந்திரங்கள் கொண்டு தொண்டர்களால் போற்றப்படுபவளும், அரியதான பச்சை நிற உடலும், கருணை மிகுந்ததான விழியும் கொண்டு, கைகளில் மலர்கள்,பிரம்பு, கபாலம், மற்றும் சூலம் ஆகியவை கொண்டவளான வராகி வழிபடும் அன்பர்கள் கண் முன்னே தோன்றும்படியாக இந்த உலகத்து உயிர்கள் துதிக்கும்படியாக வருவாள்.

விளக்க உரை

  • அரியபச்சை – மரகதம் ஒத்த பச்சை நிறம் கொண்டவள் எனவும் கொள்ளலாம். மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி எனும் அபிராமி அந்தாதி பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 24 (2019)


பாடல்

வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே 

வராகி மாலை

கருத்து – வாலை புவனை திரிபுரை மாலயன் தேவர் ஆகியவர்களால் எக்காலத்திலும் வணங்கத்தக்கவள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

அணிமா, லகிமா, மகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எட்டு சித்திகளையும் அளிப்பவளும் பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்ணாக இருப்பவளும், சத்திபேதங்களுக்குள் ஒன்றான வாலையால் காலையில் வணங்கப்படுபவளாகவும், பார்வதி என்று அழைக்கப்படும் புவனையால் மாலையில் வணங்கப்படுபவளாகவும், திரிபுரசுந்தரி என்றும் அழைக்கபடுபவளும் உச்சி வேளையில் வணங்கப்படுபவளாகவும் இருக்கும் திரிபுரையால் வணங்கப்படுபவளுமாக இருக்கும் வராகியின் ஆலயத்திற்கு சென்று அவளது அன்பில் தோய்ந்து திருமால், பிரமன் உள்ளிட்ட தேவர்களும் பாடி துதிக்கின்றார்கள்.

விளக்க உரை

  • வாலை – பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண், சத்திபேதங்களுளொன்று, திராவகம் வடிக்கும் பாண்டம், சுத்தம், பாதரசம், சித்திராநதி
  • புவனை – பார்வதி
  • உன்னுதல் – நினைத்தல், பேச வாயெடுத்தல், எழும்புதல், முன்னங்கால் விரலையூன்றி நிமிர்தல்
  • வாலை புவனை திரிபுரை ஆகியவர்களால்  எக்காலத்திலும் (காலை, மாலை, உச்சி ஆகிய பொழுதுகளில்) வணங்கப்படுபவளாக இருப்பவள் என்றும் மற்றொரு பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. குருவருள் கொண்டு அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 10 (2019)


பாடல்

நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே

வராகி மாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்து – பலவிதமான துன்பங்களுக்கு எதிர்ப்புக் கட்டு (சத்ருசம்ஹாரம்) வராகி அம்மனே என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

புது மலரில் பெருகிய தேனைப் போல இனிமையான வாராகி தேவியை மனதில் இருத்தி, வாழ்த்தி வழிபாடு செய்யாததால் பலவகையிலும் அழிவு ஏற்பட்டு மரணத்திற்கு நிகரான அளவில் நாசம் அனுபவிப்பவித்தல், நாசத்தின் காரணமாக ஏற்படும் இழப்பு, பயம், துன்பம், கவலை, அவமானம் என்று நடுங்குதல், நமனாகிய எமன் தனது கயிற்றினை வீசும் போது அது பற்றி கவலைப்படுதல், இகழ்ந்து வையப்படுதல், களங்கம் ஏற்பட்டு தாழ்வு கொண்டு அவமானப்படுதல் போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றது.

விளக்க உரை

  • நாசம் – அழிவு, பாழ், மரணம்
  • இழுக்கு – அவமானம். நிந்தை, களங்கம்; வழு, தாழ்வு, பொல்லாங்கு, மறதி, வழுக்கு நிலம்
  • காலம் 16-ஆம் நூற்றாண்டு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 3 (2019)


பாடல்

வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவிஎங்கள்
கருத்திற் பயிலும் வாராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்தி பொதிக்கிட்ட தீப்பொறிகாணும் பகைத்தவர்கே

வராகி மாலை

கருத்து – அம்மையின் படைத்தலைவிகளும் அம்மையே என்பதையும், அவளிடம் பக்தி கொண்டவர்களை தான் என்றும் விலக்கமாட்டாள் என்பதையும் விளக்கும் பாடல்.

பதவுரை 

தேவர்கள் வேண்டிய படி அவர்களின் துன்பம் நீங்குவதன் பொருட்டு அவர்களுக்காக சென்று சிரித்தபடியே மூன்று கோட்டைகளை அழித்தவனின் இடபாகத்தில் அமர்ந்திருக்கும் தேவி ஆனவளும், பஞ்சமி திதிக்கு உரித்தானவளும் ஆன  வாராகியின் வல்லமை புரியாமல், அவள் வணங்கும் பக்தர்களை வருத்தி பகைத்து கொண்டால்  தன் பக்தனுக்கு தீங்கு இழைத்தவர்களை கண்டு தீப்பற்றி எரியும் நெருப்பானது எத்தனை வேகமா எரியுமோ அத்தனை வேகமாக பகைத்தவர்களை கண்சிவந்து வெட்டி வீழ்த்துவாள்.

விளக்க உரை

  • பயிலுதல் – தேர்ச்சியடைதல்; சொல்லுதல்; பழகுதல்; சேவித்தல்; நடமாடுதல்; தங்குதல்; கற்றல்; நிகழ்தல்; நெருங்குதல்; பொருந்துதல்; ஒழுகுதல்; ஒலித்தல்; அழைத்தல்

Loading

சமூக ஊடகங்கள்