அமுதமொழி – பிலவ – தை – 29 (2022)


பாடல்

அத்துவித சித்த பரிசுத்தர்களிடத்தினில்
   அடுத்திடர் தொலைப்பம் என்றால்
ஆசையெனு மூவகைப் பேய்பிடித் தாவேச
   மாட்டும் வகையல்லாமலே
தத்து பரியொத்தமனம் எத்தனை சொன்னாலுமிது
   தன் வழியிலே இழுத்துத்
தள்ளுதே பாழான கோபமும் அடங்காது
   தன்னரசு நாடு செயுதே!
இத்தனை விதச் சனியில் எப்படி வழிப்படுவ
   தெப்படி பிழைப்பதம்மா?
இனியாகிலும் கடைக்கண் பார்த்து வினைதீர்த்து
   இணை மலர்ப்பதம் அருளுவாய்
வித்தகது தற்கணனிடத்தில் வளரமுதமே
   விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
   விமலி கற்பகவல்லியே

ஸ்ரீ மயிலை கற்பகாம்பிகை பதிகம் – திருமயிலை கற்பகாம்பிகை பதிகம் – தாச்சி அருணாச்சல முதலியார்

கருத்துதுன்பங்களில் உழலும் தன்னை அதனிடத்தில் இருந்து காத்து அருள வேண்டி விண்ணப்பம் செய்யும் பாடல்.

பதவுரை

திருமயிலையில் வீற்றிருந்து மணம் பொருந்திய மலர்களை தனது கூந்தலில் அணிந்து வேதங்களால் தாங்கப் பெறும் திருவடிகளை உடையவளே, சிவபெருமானுக்கு  துணையாக இருக்கும் கற்பகவல்லியே! சித்தமானது  மாறுபாடு இல்லாமல்  இருக்கும் பரிசுத்தர்களை அடைந்து அவர்கள் மூலமாக துயரத்தை தொலைக்க எண்ணும் போது ஆசை, மாயை, கன்மம் எனும் மூவகைப் பேய்கள் பிடித்து ஆவேசமாக ஆட்டுகின்றது; குதிரையினை ஒத்த மனமானது எத்தனை நல்விஷயங்களை  உரைத்தாலும் அதனைக் கேளாமல் தன்னுடைய வழியிலே இழுத்து தள்ளுகிறது; அத்துடன் தீமை தரத் தக்கதான கோபமும் அடங்காது எவருடைய வார்த்தையும் கேளாமல் தானே ஆட்சி செய்கிறது; இவ்வாறு அனைத்தும் துன்பம் தருமாறு  இருக்கும் நிலையில் எவ்வாறு வழிபாடு செய்து வினைகளைக் குறைத்து பிழைக்கமுடியும்? எனவே நீ இனியாவது உன்னுடைய கடைக்கண் பார்வை தந்து என்னுடைய வினைகளைத் தீர்த்து ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும் மலர் போன்ற பாதங்களை அருளுவாய்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 19 (2021)


பாடல்

பூரணி மனோன்மணி தயாபரி பராபரி
   புராதனி தராதரமெலாம்
பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு
   புத்ரி மகமாயி என்றே
சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன்
   செவிதனிற் கேறவிலையோ?
தேஹி என்றாலுனக் கீயவழி இல்லையோ
   தீனரக்ஷகி அல்லையோ?
ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள்தமை
   ஆதரிப்பவர் சொல்லுவாய் ?
அன்னையே இன்னமும் பராமுகம் பண்ணாமல்
   அடியனை ரக்ஷி கண்டாய்
மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே
   விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
   விமலி கற்பகவல்லியே

திருமயிலை கற்பகாம்பிகை பதிகம் – தாச்சி அருணாச்சல முதலியார்

கருத்துஅன்னையை பல பெயர்களில் அழைத்தும் தன்குறைகளை உரைத்தும் தன்னைக் காக்கவேண்டும் என உரைக்கும் பாடல்.

பதவுரை

பூரணியாகவும், மனோன்மணியாகவும், அருள் செய்தவற்கு காரணமாகவும் இருப்பவளே, பரம்பொருளாக இருப்பவளே, காலத்திற்கு முற்பட்டு இருப்பவளே,  விரும்பம் கொள்பவர்களின் நிலையினைப் பாராமல் அவர்கள் விரும்பும் அனைத்தையும் அளக்க வல்ல சிவசக்தியாக இருப்பவளே, இமவான் புத்ரியாக இருப்பவளே, மகமாயி என்று சிறப்புடையதான தமிழில் பாக்களாக எழுதி பாடி முறையிடுவது உந்தன் செவிதனில் விழவில்லையோ?  வறுமை, கொடுமை, நோய் ஆகியவை கொண்டவர்களாகிய தீனர்களை காப்பவள் என்றாலும் தேஹி என்று யாசகம் செய்வதன் பொருளுட்டு யான் அழைத்தபோதும் உனக்கு அருள வழி இல்லையோ?  மேருமலையை வளைத்தவன் ஆகிய சிவபெருமான் இடத்தில் வளரும் அமுதமே, மணம் பொருந்திய மலர்களை தனது கூந்தலில் அணிந்து வேதங்களால் தாங்கப் பெறும் திருவடிகளை உடையவளே, சிவபெருமானுக்கு  துணையாக இருக்கும் கற்பகவல்லியே! இந்த பரந்து விரிந்த உலகில் தன் தாயைத் தவிர மக்களை ஆதரித்து காப்பவர் சொல்லுவாயாக. ஆகவே அன்னையே அலட்சியமும் புறக்கணிப்பும் செய்யாமல் அடியேனை காப்பாயாக

விளக்க உரை

  • தீனம் – வறுமை, கொடுமை, குரூரம், நோய்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 26 (2020)


பாடல்

சீர்கொண்ட வகிலந் தனில்வாழு மாந்தர் செய்கொடி தப்பிதத்தை
ஏர்கொண்ட வுன்றன் வாளா லறுத்து மிரட்சிக்கு முலகம்மை நீ
ஆர்கண்டு நின்சீடருரை செப்பவல்ல வனாதரட்சகி நீயலோ
வார்கொண்ட வுண்ணாமுலை நாமதேவி வரவேணு மென்றனருகே

உண்ணாமுலையம்மன் பதிகம்

கருத்து – உன்னுடைய சீடராகி உன்னைப் போற்றி புகழ்ந்து உன் பெருமைகளை சொல்ல எவரால் இயலும் என்பதை பாடல்.

பதவுரை

நன்மை, பெருமை ஆகியவற்றைத் தரக்கூடிய இந்த உலகத்தில், மாந்தர்கள் எனப்படும் மக்கள் செய்யக்கூடிய கொடுமையான நெறி தவறும் குற்றம் ஆகிய தவறுகளை ஏற்றுக்கொண்டு உந்தன் வாள் கூர்மையான ஒளிபொருந்திய வாளால் அறுத்து ரட்சிக்கும் உலகத்திற்கு அன்னை நீ, அனைத்தையும் ஒழுங்குபடுத்தி நடத்திவரும் உண்ணாமுலை எனும் பெயர் கொண்டவளே, உதவி எவரும் இல்லோரை ரட்சிக்கக் கூடியவள் நீ அல்லவா! எவர் உன்னுடைய சீடராகி உன்னைப் போற்றி புகழ்ந்து உன் பெருமைகளை சொல்ல இயலும் (அஃது போலவே என்னைக் காப்பதன் பொருட்டு) என்னருகே வரவேண்டும்.

விளக்க உரை

  • சீர் – செல்வம், அழகு, நன்மை, பெருமை, புகழ், இயல்பு, சமம், ஓசை

Loading

சமூக ஊடகங்கள்

ஓங்காரம் எனும் ஒர் புள்ளி – 1

*அன்னையை உபாசிக்கும் நிறை மாந்தர் ஒருவர் தன் பெயரை சத்திசிவம் என்று உரைத்தார். அவர் உரைத்தவாறே இந்த எழுத்துகள். மானுடப் பிறவி சார்ந்து எழுதுவதால்  சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.*

ப்ராமணன்

ப்ரமம் உணர்ந்தவன் பிராமணன். பொது நலத்திற்காக தன்னை அர்பணித்துக் கொண்டவன் என்றே தொடங்குவோம்.

ப்ரமம் என்பது என்ன?

விவரிக்க முற்படும் போது ஏழு சமுத்திரம் தாண்டி விவரிக்க வேண்டும். அவ்வாறு அதைத் தாண்டிய நிலையே ப்ரமம்.

ஏழ் சமுத்திரத்தினையும் தாண்டி, ஏழு புவனம் தாண்டி, ஏழு நிலை தாண்டி என விரியும்.

ஸ்ரீ சக்தியின் சொரூபமான சக்தி ரூபம் ஆகும்.

இது மொத்தம் 14 கலைகளைக் கொண்டது. சிவத்திற்கு ஏழு கலைகளையும், சக்திக்கு 7 கலைகளையும் கொண்டது.  இதுவே சிவசக்தி ஐக்கியம் ஆகும்.

அன்னை ஆகிய ஸ்ரீக்கு 7 கலைகள் ஆகும்.

அவை லயம், வாவண்யம், அர்த்தம், சாஸ்திரம், அலங்காரம், வசியம், மோகனம்

  • லயம் – ஒடுங்கும் நிலை

உ.ம்

  1. குதிரை லாயத்தில் ஒடுங்குதல்
  2. ஆடுகள் பட்டிகளில் ஒடுங்குதல்
  3. பறவைகள் கூட்டில் ஒடுங்குதல்
  4. ஆதி மனிதன் காட்டில் ஒடிங்கினான்.
  • லாவண்யம் – சிருங்காரம் ஆகிய மயக்கும் நிலை

உ.ம்

  1. பூ அழகு மயக்கும்
  2. வண்டு பூ அழகில் வாசனையில் மயங்கும்
  3. எதிர்பால் மயக்கும்
  4. இசை மயக்கும்
  5. மகுடி நாகத்தை மயக்கும்
  • அர்த்தம் – அறிவு – ஆசானான் கற்பிக்கப்படுவது. முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த நியதி. மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு ஏற்கும் நிலை என்றும் கூறலாம்.

உம்

  1. தீ சுடும்
  • சாஸ்திரம் – முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த நியதிகள்.இந்த நிலையில் அறிவு மலராமல் மொக்காக இருக்கும்.
  • அலங்காரம் – நாத மற்றும் ரூப வடிவமாகும் (கண்ணால் காணப்படும் காட்சி, காதால் கேட்கப்படும் ஒலி). நிறம் , ரூபம் ஒளி வடிவானவை
  • வசியம் – வாசி, வாசி என்பது மாறி சிவா. இது ராம நாமத்திற்கும் பொருந்தும்
  • மோகனம் – அன்னை மோகன நிலை மாற்ற இயலா எண்ணம் கொள்ளாவரையில் மோகனம் திறக்காது
  • இது விஷ்ணு மாயா, சிவ மாயா, ப்ரம மாயா என மூன்றாகும். இது ரஜோ, தமோ மற்றும் சத்துவ குணத்தின் கூறுகளாகும்

மனிதன் அறிவு நிலையை அடைந்து மீண்டும் எண்ணங்களால் குழந்தை நிலை அடைய வேண்டும்.  தாயாகி குழந்தையை ரசிப்பதும், குழந்தையாகி தாயை ரசிப்பதும் ஆன்ம விடுதலை அளிக்கும்.

7 சிவ கலைகள்  பற்றிய பதிவினை அடுத்துக் காண்போம்.

தொடரும்.,

Loading

சமூக ஊடகங்கள்

error: Content is protected !!