திருச்சடையின்மேல் பிறை ஆகிய சந்திரனையும், சிவந்த கண்களை உடைய பாம்பையும் உடையவனாகவும், உடைந்த தலை ஓடு ஆகிய மண்டையோட்டில் உணவு ஏற்று, ஊர்ந்து செல்லும் விடைமீது ஏறி வருபவனாகவும், தேவர்களால் வணங்கப்படும் திருவெண்ணி என்னும் தலத்தைத் தனக்கு ஊராக உடையவனாகவும் இருக்கும் அவனையன்றிப் பிறரை நினைக்காது எனது உள்ளம்.
எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே
தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
பதவுரை
கயிலைமலையை பெயர்த்து எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவரும், தவறு உணர்ந்து பின் அவன் புகழ்ந்து போற்ற அவனுக்கு விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவரும், விலகாத செல்வத்தோடு கூடியவரும், பிறப்பு இறப்பும் அறியாதவரும், சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவரும், வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக கொண்டவரும், உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னுடைய அருள்பெருமையும், வாழ்வும் கொடுத்தவரும் ஆன பெரும்புகழையுடைய சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்து அருளுகின்றார்.
காலத்தால் முற்பட்டு வரையறை செய்ய இயலாதவனாகவும், படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழில்களை உடைய மூவருக்கு முதலாவதாக ஆனவனாகவும், கொத்து கொத்தாக பூக்கும் சோலைகளை உடைய கூகம் என்ற ஊரில் உறைபவனாகவும், அந்தி வானத்தில் தோன்றும் பிறை சந்திரனை தன் தலையில் சூடியவனாகவும் அடியவர்களுடைய வினைகளை முழுவதுமாக நீக்குபவனாகவும் ஆன இறைவன் உறையும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
மார்க்கண்டேயருக்கு விதிக்கப்பட்ட விதியானது அவரது வாழ்நாள் வயது பதினாறு எனவும், அந்த விதியின் விளைவாக வந்த மரணத்தினை, அவர் இறை வழிபாடு செய்து, விதியின் விளைவாய் வெளிப்பட்டுச் சினந்து வந்த கூற்றுவனை உதைத்து சிவபிரான் எழுந்தருளிய தலம், தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளும், தேன்கூடுகள் நிறைந்த சோலைகளும் சூழ்ந்தது புகலிநகர் எனும் திருத்தலமாகும்
விளக்கஉரை
கூற்றுதைத்தார் பதியாவது புகலிநகர் என்பது பற்றிய பாடல்.
‘கொதியாவருகூற்றை உதைத்தவர்’ – விதியென்னும் நியதியைப்பற்றி வந்த கூற்றுவனின் அந்நியதிக்கும் காரணம் இறைவன் என்பதை உணர்ந்து கொள்ளவைத்த பெருங்கருணை எனும் பொருள் பற்றியது.
சுழித்து ஓடக்கூடிய கங்கை, அதனோடு ஒத்து காணப்படுவதாகிய திங்கள், மிகவும் பழமையான பாம்பு, நல்ல கொன்றை மலர் ஆகியன நெருக்கமாக உள்ள சிறப்புகளை தலையில் உடைய முக்கண்ணனும் ஆதியும் ஆகிய சிவபிரானுடைய சைவ வேடத்தை விருப்புற்று நினைத்து, ஐம்புலன்களும் மனமும் அழிந்த சிந்தையினை உடையர்களும், இணைந்த திருவடிகளை உடையவனும், அந்தணர் குலத்தினை உடையவருமான பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகர், சனத்குமாரர், சதானந்தர் மற்றும் சனாதனர் முதலியவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை உபதேசித்த திருவாயினனாய் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றம் ஆகும்.
விளக்கஉரை
தாள் இணைத்து – கால்களைப் பத்மாசனம் முதலிய ஆசனவகைகள் பொருந்தப் பின்னி என்றும் கூறலாம். சிவசக்தி ரூபமாக எனவும் கொள்ளலாம்.
சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் என்பதை மட்டும் நினைந்து ஐம்புலனும் அழிந்த சிந்தை உடைய அந்தணர்கள் என்ற பாடம் புதுவைபிரெஞ்சுஇந்தியக்கலைநிறுவனஆய்வுப்பதிப்பில் காணப்படுகிறது.
சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் என அகமுகமாகயோகமரபில்காணுதலும் உண்டு. ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.
இலக்குத் தவறாது சென்று வினையாற்றும் ஆயுதம் ஆகிய கணைகளொடுகூடிய விற் படையை உடைய இராவணனை ‘ஆ’ என்று அலறுமாறு தாக்கி அருளிய சிவபிரானுக்குரிய இடமும், தாவிச்செல்லும் மான்கன்றுகளை உடையதும், குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததுமான வேணுபுரம் ஆகும்.
விளக்கஉரை
மறிமான் – மான்கன்று; ஆடுகளும், மான்களும் எனவும் கூறலாம்.
குடவாயிலில் எனும் தலத்தில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய இறைவனானவன், அலைகள் ஏற்படுத்தும் கங்கையை அணிந்தவன்; அனலை ஏந்தியவன்; எண்குணத்துள் ஒன்றான மும்மலமில்லாதவன்; கபாலம் எனும் பிரமகபாலத்தில் யாசகம் பெறுபவன்; யகங்கள் கடந்தவன்; நடுங்கத்தக்க கொலைக்கருவியாகிய திரிசூலத்தையும், மழுவாயுதம் முதலியவற்றையும் ஏந்தியவன்.
விளக்கஉரை
சதுரன் – ‘மூவர்க்கும் முதல்வன்’ என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளன. திறமையுடையவன்; நகரவாசி; பேராசைக்காரன் போன்ற பொருள்களும் இருக்கின்றன. பொருத்தமின்மை காரணமாக இவைகள் விலக்கப்படுகின்றன.
சிவபெருமான் முனிவர்களுக்காக பாடலாக உடைய வேதத்தை அருளிச் செய்தவர். புறங்காடு எனப்படும் சுடுகாட்டினை ஒரு இடமாகக் கொண்டு எவ்விதமான குறையும் இல்லாமல் வாழ்பவர். இடுப்பிற்கு கீழ் ஒற்றை ஆடையை அணிபவர். திருச்சடை முடியில் கங்கையைத் தாங்குபவர். இடபத்தினை வாகனமாகக் கொண்டவர். இவ்வாறான சிவபெருமான் திருப்பைஞ்ஞீலியில் தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்யது வீற்றிருந்து அருளுகின்றார்.
எட்டு திசைகளிலும் சென்று மார்க்கண்டேய முனிவரின் உயிரை கவருவதற்காக போராடிய காலனின் உயிரைக் கவர்ந்தவனும், இராவணனின் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவனும் ஆகிய சிவன் விரும்பி உறையும் இடம் தேனீகளின் ஒலிப்பு சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும்.
விளக்கஉரை
எட்டும் இருபத்திரண்டும் (8+22) – பத்துத் தலைகளும் இருபது கைகளுமாகிய முப்பதும்
மனமே! தெளிந்த அறிவினை உடையவனும், தென்இலங்கைக்கு இறைவனாகவும்# விளங்கிய இராவணன், ஈசன் வீற்றிருந்து அருளும் கயிலைமலையைப் பெயர்க்க முற்படும் போது, பற்றிய அளவில் அவன் முடிகள் கொண்ட பத்து தலைகளையும், இருபது தோள்களும் நெரியுமாறு அவன் கர்வம் அழித்த தேவனாகிய நம்முடைய சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை, வினைகள்யாவும் தேய்ந்து ஒழிய நீ ஆராய்ந்து நினைவாயாக.
விளக்கஉரை
தெற்றல் – அறிவில் தெளிந்தவன். இராவணன் ஒழுக்கத்தில் பிழை உடையவன் ஆயினும் பல நூல் கற்றதால் அறிவில் சிறந்தவன்.(இராவணம் கொடி வீணை என்பது கண்டு உணர்க).மாறுபாடுடையவன் என்பது இக்காலத்தார் கூறும் புதுப்பொருள் பொருந்தாமையால் விலக்கப்பட்டுள்ளது.
#இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பலபெயர்கள் இருபதாலும், ஈஸ்வர பட்டம் பெற்றமையாலும் இறைவன் என்று அழைக்கப்பெற்று இருக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
தலையில் சந்திரனை பிறையாக அணிந்தவனும், பெருமை மிக்க செயல்களைச் செய்கிறவர்களும், நல்ல பண்புடையவர்களாக விளங்குகின்றவர்களும், புகழ்ச்சியை விரும்பாதவர்களும், உலகியல் நோக்கத்தினை பிரதானமாக கொண்டு செயல்படுவர்களும் ஆன பெரியோர்களின் தலைவனும், வேத வடிவங்களாகி அதன் தலைவனாக இருப்பவனும், மழுவாகிய வாளை உடையவனும், மால் துயிலுகின்ற கடலாகிற பாற்கடலிலே தோன்றிய நஞ்சினை உண்டு அதனால் ஏற்பட்ட கண்டத்தை உடையவனும், கோபம் கொண்டு கனல் சேர்ந்த விழிகளால் காமனைக் எரித்தவனும், சிவபெருமான் தம் திருநடனத்தைப் புலப்படும்படிக் காட்டியருளும் செல்வனுமாகிய காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தை உறைவிடமாக கொண்டவனாகிய இறைவன் திருவடிகளை நாள்தோறும் விரும்பி ஏத்தி அத்திருவடிகளையே கை கூப்பினோம்.
விளக்கஉரை
காட்டுப்பள்ளிக் குறையுடை யான் – அன்பர்களின் குறைகளைக் கேட்டறிபவனும் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. பொருள் பொருந்தாமையால் இவ்விளக்கம் விலக்கப்பட்டுளது. ஆன்றோர்கள் ஆய்ந்து அறிக.
பூம்பாவாய்! பராக்கிரமும், கோபமும் தன் இயல்பாக உடைய இராவணனின் தோள்களை நெரித்து உகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலை எனும் கபாலீச்சரத்தில் அமர்ந்து உள்ளவனுக்கு, இடை வடிவமான பண்ணோடு பாடும் சப்தரிஷிகள் & வாலகில்யர்கள், தேவர்கள், அரம்பையர்கள், அசுரர்கள், தானவர்கள், தைத்தியர்கள், நாகர்கள், கருடர்கள், கிண்ணரர்கள், கிம்புருசர்கள், யட்சர்கள் / யட்சினிகள், வித்தியாதரர்கள், அரக்கர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், பூத கணங்கள், பிசாசர்கள் ஆகிய பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டு மகிழாமல் செல்வது முறையோ?
விளக்கஉரை
தண்ணா – வெம்மையைச் செய்யும்; ‘தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை’ – குளிர்ச்சி பொருந்திய, தமிழை வளர்க்கிற பாண்டி நாட்டையுடையவனும் எனும் வரிகளுடன் மாற்றுப் பொருள் கொண்டு சிந்திக்கத் தக்கது.
கண்ணார் – பகைவர்
தேவர்கள், சித்தர்கள், அசுரர், தைத்தியர்கள், கருடர்கள், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், இயக்கர்கள், விஞ்சையர், பூத கணங்கள், பிசாசர்கள், அந்தரர், முனிவர்கள், உரகர்கள், ஆகாய வாசியர், போக பூமியர் ஆகியோர் பதினெண் கணத்தினர் என்று மற்றொரு குறிப்பில் காணப்படுகின்றது.
முன் காலத்தது விழா – அட்டமிநாள் விழா; தற்காலத்தில் சித்திரைப் பௌர்ணமி; ‘கடம் மட்டமிநாள்’ – அடர் அட்டமி நாள் – அடர் எனும் சொல் பூவிதழ் எனும் பொருளோடு இணைந்து எனக் கொண்டால் முழுமை பெற்ற (இரண்டு) அட்டமி நாள்; ஆக மொத்தம் 16 எனவே சித்திரை பௌர்ணமி எனவும் கொள்ளலாம்; கடலாடுதல் சித்திரை நிலவில் நிகழும் என்பதாலும், அவ்விழா குறித்து எழுதப்பட்டதாகவும் இருக்கலாம்.
பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்ததும், விழாக்கள் இடையறாது நிகழ விளங்கும் வீதிகளைக் கொண்டதுமான பெரியதும், பெருமைக்கு உரியதுமான மயிலையில் திருவருள் எழுச்சியை விளைக்கும் கபாலீச்சரம் என்னும் திருக்கோயில் திருவிழாக்களைக் கண்டு, திசைதோறும் இடும் பலியாகிய உருத்திரபலி எனும் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக்காணாது செல்வது முறையோ?
விளக்கஉரை
பங்குனி உத்தர விழாச் சிறப்பினை உணர்த்தும் பாடல்
மலிவிழா வீதி – விழாக்கள் இடையறாது நிகழ விளங்கும் வீதி
காந்தள் மலர் போன்றதும், இதழ்கள் நிறைந்ததும் ஆன தோடார் மலர்களைத் தூவித்தொழும் தொண்டர்களே! திரண்ட கூந்தலையும், செம்மையான அணிகலன்களையும் அணிந்து கொண்டுள்ள அம்மையோடும் உடனிருந்து, பெருமைக்கு உரிய இரும்பூளையில் உறையும் ஈசன், காட்டில் வாழும் கடுமையான வேடனாய் வந்தது ஏனோ? இதனை எனக்குச் சொல்வீராக.
விளக்க உரை
அர்ச்சுனனோடு போர் செய்த வேடனாக வந்தது ஒப்புநோக்கி சிந்திக்கத் தக்கது.
செற்றரக் கன்வலியைத் திரு மெல்விர லாலடர்த்து முற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன் மும்மையினான் புற்றர வம்புலியின் னுரி தோலொடு கோவணமும் தற்றவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்துஉரை
செருக்கினை அடைந்த அரக்கனாகிய இராவணனது வலிமையைத் தன் மெல்லிய திருக்கால் பெருவிரலை ஊன்றி அழித்தவன்; முழுவதும் திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவன்; உருவம், அருவம், அருவுருவம் என்ற மூவகைத் திருமேனிகளையுடையவன்; புற்றில் வாழ்கின்ற பாம்பையும், புலித்தோலையும், கோவணத்தையும் ஆடையாக உடுத்தவன்; அப்படிப்பட்ட பெருமான் வீற்றிருந்து எழுந்தருளும் இடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காத்தலின் நோக்கம் என்ன? உயிர்கள் தம் வினையைப் பற்றச் செய்தல்
மயிலாப்பூரில், மாசிமகநாளில், கடலாடுதலைக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளி இருப்பவனும், வலிமை பொருந்திய விடையின் மேல் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?
விளக்கஉரை
மாசிமகநாளன்று கடலாட்டு விழா நிகழ்வு குறித்தப் பாடல்