பாடல்
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே
நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – சிவனை பைரவ ரூபமாக கண்டு அவரை வணங்கி தன் சூலை நோய் எனும் வயிற்று வலியை நீங்க வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
திருவதிகைக் கெடிலநதிக்கு வடபால் விளங்கும் திருத்தலமான திருவீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரிய கடவுளே, உலகில் புறப்பற்றுகளோடு இருந்து பின் இறந்தவர்களை எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்லமை உடைய பெருமானே! விடை ஆகிய காளையை விரும்பி ஊர்தல் செய்பவரே, திருத்தலையைச் சுற்றிலும் வெண்டலைமாலை கொண்டு அணிந்தவரே, உம்மை வழிபாடு செய்பவர்களின் பாவங்களைப் போக்க வல்லவரே! இறந்தவருடைய மண்டை ஒட்டில்(பிரம்ம கபாலம்) பிச்சை ஏற்றுத் திரிபவரே! உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுவதால், எம்மைத் துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.
விளக்க உரை
- படுவெண்தலை – பட்டதலை
- படுதல் – அழிதல்
- பொடி – இறந்தவரது வெந்த உடம்பின் சாம்பற்பொடி
- பெற்றம் – விடை, ரிஷபம், காளை