
பாடல்
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்
நல்வழி – ஔவையார்
கருத்து – முற்பிறவியில் செய்த வினைகளை ஒத்தே இந்தப் பிறவியில் செல்வம் சேரும் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
உலகில் இருப்பவர்களே கேளுங்கள்! பொருளை சம்பாதிப்பதற்காக கணக்கில் அடங்காத முயற்சிகள் செய்தாலும் செய்த வினையாகிய ஊழின் அளவே பொருள் ஈட்டுதல் கைகூடும்.அதற்கு மேல் நினைத்தாலும் செல்வம் சேராது. தேடிய செல்வத்தைக் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்யும் உலக மக்களே! அந்தச் செல்வம் ஒருவரிடம் நிலையாகத் தரித்து இருப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.