பாடல்
முழுமுத லேஐம் புலனுக்கும்
*மூவர்க் கும்என்த னக்கும்
வழிமுத லேநின் பழவடி
யார்தி ரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்திருக்க
இரங்குங் கொல்லோ என்று
அழுமது வேயன்றி மற்றென்
செய்கேன் பொன்னம் பலத்தரைசே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
பதவுரை
பொற்சபையில் ஆடுகின்ற தலைவனே! முற்றும் உணர்தும் முடிவில் ஆற்றல் உடைமை கொண்டும் இருந்து எல்லாவற்றுக்கும் ஆதியான பொருளே! ஐம்புலன்களுக்கும், முத்தேவர் களுக்கும், எனக்கும் செல்லும் வழி காட்டும் முதலானவனே! உன்னுடைய பழைய அடியார்கள் கூட்டத்தோடு கூடி, பெருமை மிக்க சிவலோகத்தில் சேர்ந்து இருப்பதை திருவருளால் கொடுத்து அருள இரங்குமோ என்று அழுவது அல்லாமல் வேறு என்ன செய்ய வல்லேன்?
விளக்க உரை
- *’ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா அமரர்தொழுங் கழலானை’ என்பது திருநாவுக்கரசர் தேவாரப் பாடல். அஃதாவது தன்னில் இருந்து பிரித்து பிரம்மா என்றும் திருமால் என்றும், உருத்திரன் என்றும் அறிய ஒண்ணாத ஆதியானவன்
- ‘முழுமுதல்’ – இரட்டுற மொழிதல் பெருந் தலைவன் 2. சிறந்த நிலைக்களம் (பரம ஆதாரம் – தாரகம்)
- கெழுமுதல் – கூடுதல்.
- ‘மற்றென் செய்கேன்’ – `உன்னை வற்புறுத்துதற்கு என்ன உரிமை உடையேன்` என்ற பொருள் பற்றியது