பாடல்
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாயச் சொரியுமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
பிரமனால் படைக்கப்பட்டு சரீரம் கொண்ட ஆருயிர்களின் அகமாகிய உடம்பில் பாலினைத் தரும் பசுக்கள் ஐந்து உள்ளன. அவை அறிவுக்கு புலனாகும் மெய், வாய், கண், மூக்கு, செவி. அப் பசுக்களை மேய்த்தருள்பவன் சிவன். மேய்ப்பார் இன்மையாலே அப்பசுக்கள் உலகியல் புலன்களில் ஆருயிர்களை ஈர்த்துச் செல்வதால் அவைகள் வெறித்துத் திரிகின்றன. அப் பசுக்களை மேய்ப்பானாகிய சிவ பெருமான் வெளிப்பட்டு காத்து அருளினால் அப்பசுக்களுக்கு வெறியடங்கும். வெறியடங்கினால் அப் பசுக்கள் அந்த உயிர் சிவப்புலனை நுகருமாறு துணை நிற்கும். புலன்கள் திருவடியின்பத்தினை நுகரத் துணைநின்று அப்புலன்களும் சிவ வண்ணமாகும்.அப்பொழுது பசு கரணங்கள் பதி கரணங்களாகத் திரியும்.