அப்பா உனக்கு ஒரு திகில் கதை
சொல்லப் போகிறேன் என்கிறாய்.
திகைக்கும் எனது எண்ணம் தாண்டி
கதையை தொடங்குகிறாய்.
ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பாவாம்.
அம்மா ஊமச்சியாம்
அப்பா செவிடனாம்.
என் இதழ் வழி வழியும்
புன்னகைக்கான காரணம் தெரியாமல் விழிக்கிறாய்.
உருவேறத் திருவேறும்
விருந்து ஒன்றில்
உன்னை விலகி நின்று
சந்திக்கும் வாய்ப்பு வாய்த்தது.
நீண்ட நெடும் கூந்தல்.
வில்லினை ஒத்த புருவம்.
தெறிக்கும் கண்ணின் பார்வைகள்.
மோனப் புன்னகைக்கு
முத்தாய்ப்பாய் மூக்குத்தி
பரவசம் ஏற்படுத்தும் பச்சை ஆடை.
என்னடா இப்படி பார்க்கிறாய்
என்றான் நண்பன்.
வாவி எல்லாம் தீர்த்தம்,
பூசுவது வெண்ணீரு எனும்
அவனுக்கான காலமும் வரும்.
உடல் நீங்கிய உயிர்.
வேடிக்கைகள் எளிதாக்கி
காட்சிகள் என்னுள்ளே.
பகுப்பாய்வுகள் பலவிதமாய்.
பாத அழுக்குகள்
பலதூரம் நடந்திருபதை காட்டுகின்றன
என்றான் ஒரு மாணவன்.
கைகள் அழுக்கானவைகள்.
அதனால் அவன் உழைப்பாளி
என்றான் மற்றொருவன்.
குடித்திருப்பதை குடல் காட்டுகிறது
என்றான் மற்றொருவன்.
இதயத்திலிருந்து வரும் வேர்கள்
கவிஞனாய் காட்டுகின்றன
என்றான் மற்றொருவன்.
எனக்கு உறவானவன் அவன் என்கிறாய் நீ.
உதிர்த்துவிட்ட சொல்லின் முடிவில்
உயிர் பெறுகிறது
உறைந்துவிட்ட ஒரு இதயம்.
அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.
விஷம் தடவி
வாளினால் தாக்கும்
பெரும் போரளியியை விட
வார்த்தைகளில் லாவகம் உனக்கு.
இரவினில் பாதி உறக்கத்திலிக்கும்
புல்லினமாய் நான்.
போரின் முடிவினில்,
மரணத்திற்குப் பின்வரும்
மற்றொரு வாழ்வினைப் பற்றி
பேசுகிறாய்.
நான் அற்ற இடத்தில்
எனக்கான எச்சங்கள்
இருந்தால் என்ன, இறந்தாலென்ன என்றேன்.
அப்பொழுதும்
அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.