அமுதமொழி – பிலவ – பங்குனி – 22 (2022)


பாடல்

இளையம் முதுதவம் ஆற்றுதும் நோற்றென்
றுளைவின்று கண்பாடும் ஊழே – விளிவின்று
வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் காண்டாரும்
தாழாமே நோற்பார் தவம்

நீதிநெறி விளக்கம் – ஸ்ரீ குமரகுருபரர்

கருத்து – மரணிக்கும் நாள் எதுவென்று யாருக்கும் தெரியாது என்பதால் உடனே தவம் செய்து கொள்ளுதல் மக்கள் கடன் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

நாம் இப்போது இளைஞராக இருக்கிறோம், இளமையில் இறத்தல் என்பது இல்லை என்றும், தமது வாழ்நாள் நீண்ட கால எல்லையினை உடையது எனும் எண்ணம் கொண்டும் முதுமையில் வருந்தி தவம் செய்வோம் என்று இப்பொழுது எவ்வித வருத்தமும் இல்லாமல் உறங்கிக் கிடப்பதும் ஒரு காலத்திலும் முறை ஆகாது. தமது ஆயுள் நாள் முடிவைக் காணும் துறவியரும் நொடிப்பொழும் தாமதிக்காமல் தவம் செய்வார்.

விளக்க உரை

 • வரம்பு – எல்லை, முடிவு, உளைவு, விளிவு
 • இளையம் – இளமை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 9 (2020)


பாடல்

தாகமறிந் தின்பநிட்டை தாராயேல் ஆகெடுவேன்
தேகம் விழுந்திடின்என் செய்வேன் பராபரமே
அப்பாஎன் எய்ப்பில் வைப்பே ஆற்றுகிலேன்போற்றிஎன்று
செப்புவதல் லால்வேறென் செய்வேன் பராபரமே

தாயுமானவர்

கருத்துபோற்றுதல் தாண்டி தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

பராபரமே! வினைகளை அறுத்தல் என்பதை முக்தியினை முன்வைத்து பேரின்பத்தினை தருவதாகிய அருள்தல் எனும் நோன்பினை தராவிட்டால் கெடுவேன்; ஆயினும் என்னுடைய தேகம் விழுந்து விடும் எனில் என்ன செய்வேன்; எனது தந்தையைப் போன்றவனே என்னுடைய தளர்ச்சியினை கண்டும் இன்னும் ஆற்றுப்படுத்தவில்லை ஆயினும் போற்றுதலை வாய்விட்டு உரைத்தல் அன்றி வேறு என்  செய்வேன்.

விளக்கஉரை

 • எய்ப்பு – இளைப்பு தளர்ச்சி , ஒடுக்கநிலை, வறுமைக்காலம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 18 (2020)


பாடல்

தம்மேனி வெண்பொடியாற் றண்ணளியா லாரூரர்
செம்மேனி கங்கைத் திருநதியே – அம்மேனி
மானே யமுனையந்த வாணிநதி யுங்குமரன்
தானே குடைவேந் தனித்து

திருவாரூர் நான்மணி மாலை – குமரகுருபரர்

கருத்து – தியாகேசப் பெருமானும் உமாதேவியாரும் முருகப் பெருமானும் சேர்ந்துள்ள காட்சி திருவேணி சங்கமத்தைப் போன்றுள்ளது என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

காடுடைய வெண்பொடியால் வெண்ணிறமுடையதாக தோன்றும் கங்கையினை ஒத்த திருவாரூர் பெருமானையும் அழகிய திருமேனியை உடைய மானைப் போன்றவளும், நீலநிறம் கொண்டவளும் ஆன யமுனையினை ஒத்த உமாதேவியையும் குளிர்ந்த திருவருளால் செம்மேனி கொண்டு செந்நிறமுடையதால் வாணி எனும் சரஸ்வதி ஒத்து இருக்கும் முருகப் பெருமானையும்  ஒருங்கே தியானிப்போம்.

விளக்க உரை

 • இல்லறத்தின் மேன்மையை விளக்கும் சோமாஸ்கந்தர் வடிவம் பற்றியது
 • வெண்மையும் தண்மையும் கங்கைக்கு உரித்தானவை
 • குடைவேம் – ஆடுவேம் – தியானிப்போம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 12 (2020)


பாடல்

மூலம்

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே

பதப்பிரிப்பு

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே! சகலகலாவல்லியே

சகலகலாவல்லி மாலை  – குமரகுருபரர்

கருத்து – சகலகலாவல்லியிடம் பல்வேறு கவித் திறமை பெற்று மூலம் செல்வம் வேண்டி நிற்கும்  பாடல்.

பதவுரை

அழகிய ஆசனமான செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளின் அருள் அரியதானது என்றும், நமக்கு வாய்க்கப் பெறவில்லையே என்று வருந்துகின்ற நிலை எக்காலத்திலும் ஏற்படாதவாறு காலத்தால் அழியாத கல்வி  என்றும் மெய் ஞானம் என்றும்  அழைக்கப் பெறுவதுமான பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே! சகல கலாவல்லியே! சொல்வன்மையாகிய சொற்களை கையாள்வதில் திறமையும், அட்டாவதானம் தசாவதானம் சோடசாவதானம்  சதாவதானம் எனப் போற்றப்படுகின்ற கூர்ந்து கவனிக்கின்ற ஆற்றல்களும், சித்திரக்கவி, சக்கரக்கவி, வரகவி போன்ற சிறப்புடைய கவிதைகளை பாடக்கூடிய வல்லமையுடைய வித்தகத் தன்மையும் எளியேனுக்கு அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக.

விளக்க உரை

 • அட்டாவதானம் – ஒரே சமயத்தில் எட்டுக் காரியங்களில் கவனம் செலுத்துதல்
 • தசாவதானம் – ஒரே சமயத்தில் பத்து காரியங்களில் கவனம் செலுத்துதல்
 • சோடசாவதானம் – ஒரே சமயத்தில் பதினாறு காரியங்களில் கவனம் செலுத்துதல்
 • சதாவதானம் – ஒரே சமயத்தில் நூறு காரியங்களில் கவனம் செலுத்துதல்
 • சித்திரக் கவி வகைகள் – கோமூத்திரி, கூடச் சதுக்கம், மாலைமாற்று, எழுத்து வருத்தனம், நாக பந்தம், வினாவுத்தரம், காதை கரப்பு, கரந்துறைப்பாட்டு, சக்கர பந்தம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம் , அக்கரச் சுதகம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 13 (2019)


பாடல்

தொடுக்கும் கடவுட் பழம்பாடல்
தொடையின் பயனே கறைபழுத்த
துறைத்திங் தமிழின் ஒழுகுகறுஞ்
சுவையே அகங்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
ஏற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே எறிதரங்கும்
உடுக்கும் புவனம் கடந்துன்ற
ஒருவன் திருவுள் ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோவியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழற்காடு ஏந்தும் இள
வஞ்சிக் கொடியே வருகவே
மலயத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

கருத்துசிறுமி மீனாளைத் தளர் நடையிட்டு வருமாறு அழைப்பதைப்போல அமைந்தப் பாடல்.

பதவுரை

மனிதனின் கற்பனையால் புனையப்பட்டு உருவாக்கப்படும் தெய்வீக அழகு கொண்ட தமிழ்ப் பாக்களின் ஒட்டு மொத்தத் தொகுப்பாகவும், தேன் நிரம்பித் ததும்பும் இனிமைத் தமிழினைக் கொண்டு  மாலையாக தொடுக்கப்படது போன்றதும் ஆனவளே, மும்மலங்களில் ஒன்றானதும் முதன்மையானது ஆன ‘தான்’ என்ற அகந்தைக் கிழங்கைக் கிள்ளி எறிபவர்களின் உள்ளத்தில் ஒளிரும் மெய்ஞான விளக்காக திகழ்பவளே, பனி மலைச் சிகரமாகிய இமயமலையில் விளையாடும் இளமையானதும் மென்மையானதும் ஆன பெண் யானைப் போன்றளே, புவனமெல்லாம் கடந்து நின்று அதை தன்னுடைய ஆடையாகவும் அணியும் பரம்பொருள் தன் உள்ளத்தில் ‘அழகு தோன்றுமாறு எழுதிப்பார்த்திருக்கும் உயிர் ஓவியம்’ போன்றவளே, வண்டுகள் தேன் குடித்துத் துயிலும் குழல் காட்டினை ஏந்தும் வஞ்சிக் கொடியே, மலயத்துவச பாண்டியன் பெற்ற பெரு வாழ்வே வருக வருக என்று மீனாட்சியம்மையை குமரகுருபரர் அழைக்கிறார்.

விளக்க உரை

 • மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழின் வருகைப் பருவத்தில் இடம் பெறுகிறது இப் பாடல்.
 • இந் நூல் அரங்கேற்றம் நிகழ்ந்தபோது, குறிப்பிட்ட இப்பாடலின் தருணத்தில், அன்னை மீனாட்சியே சின்னஞ் சிறுமியாக வந்து, மன்னரின் மடி மீது அமர்ந்து இதைத் தலையாட்டிக் கேட்டாள் என்ற பழங்கதை ஒன்று உண்டு.
 • பிள்ளைத்தமிழ் – தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாsசாரியர்கள், புலவர் பெருமக்கள், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
 • தமிழின் ஒழுகுகறுஞ்சுவையே – மொழியின் லயமாக அவனைத் தரிசித்தல்
 • தொடுத்தல் = கட்டுதல் / உருவாக்குதல்,
 • தொடை = மாலை
 • நறை = மணம்
 • தீம் = இனிய
 • அகந்தை = செருக்கு
 • தொழும்பர் = அடியார்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 7 (2018)

பாடல்

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்ந்தற்றால் – தன்னை
வியவாமை அன்றோ வியப்பாவது! இன்பம்
நயவாமை அன்றோ நலம்

நீதிநெறி விளக்கம் – குமரகுருபரர்

பதவுரை

மற்றவர்கள் மூலமாக பிறர் வியக்கும்படித் தன்னை புகழ்ந்து பேசும்படி செய்யும்  செயலானது, எரியும் நெருப்பில் தண்ணீரை ஊற்றி வளர்ப்பது போன்றது. தன்னைத் தான் வியக்காமல் இருப்பதுதான் வியப்புக்கு உரித்தான ஒன்றாகும். எனவே அவ்வாறான் புகழ் இன்பத்தைத் விரும்பிச் செல்லாமைதான் நலம் பயக்கும்.

விளக்க உரை

 • தானே தன் புகழைக் கூறச் செய்தல் குற்றம் என்று கூறும் பாடல்.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பொருப்பு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  பொருப்பு

பொருள்

 • மலை
 • பக்கமலை
 • கொல்லி மலை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இமயப் பொருப்பில் விளையாடும்
   இளமென் பிடியே எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்து நின்ற
   ஒருவன் திருவுள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்து இருக்கும்
   உயிர் ஓவியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழற் காடேந்தும்இள
   வஞ்சிக் கொடியே வருகவே
மலயத் துவசன் பெற்ற பெரு
   வாழ்வே வருக வருகவே

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

கருத்து உரை

இமய மலையில் விளையாடும் பெண் யானையைப் போன்றவளும், உலகத்தைக் கடந்த ஒப்பற்றவனாகிய இறைவனின் திரு உள்ளத்தில் எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியம் போன்றவளும்,  மதுவை வாயாகிய கரத்தால் உண்பவை ஆகிய வண்டுகள் தேனைக் குடித்துக் கூந்தலில் துயில்  கொள்ளுவதைப் போன்றதுமான கூந்தலாகிய காட்டைத் தாங்கி நிற்கும் வஞ்சிக் கொடி போன்றவளும், மலயத்துவசன் பெற்றெடுத்த பெருவாழ்வுக்கு நிகரானவளும் ஆன மீனாட்சியே வருக வருக.

சமூக ஊடகங்கள்