அமுதமொழி – சார்வரி – ஆனி – 19 (2020)


பாடல்

இருக்கெலாமள விட்டின்னு மினைத்தென வறியவெட்டாத்
திருக்குலாவிய பேரின்பச் செழுங்கட றிளைக்கலாமால்
மருக்கலாரங் கண்மொய்த்தவா விசூழ்காஞ்சி வாழ்வுற்
றிருக்குமானந் தருத்திரே சனையிறைஞ் சினோர்க்கே

கச்சிஆனந்தருத்திரேசர் பதிகம். – சிவஞான யோகிகள் அருளிய பிரபந்தத் திரட்டு – பாகம் 5

கருத்து – காஞ்சியில் வீற்றிருக்கும் ஆனந்தருத்திரேசரை வணங்குவோர் பேரின்பக் கடலில் திளைப்பார்கள் என்பதை அறுதியிட்டுக் கூறும்    பாடல்.

பதவுரை

மால் மருகன் என்று அழைக்கப்படுபவனாகிய குமரனின் கண்பார்வையில் இருக்கும்படியான காஞ்சி மாநகரில், சைவப்பிரிவுகளில் ஒன்றானதும், மந்திரமார்க்கக் கிளைநெறி ஆனதும், சிவனின் முதன்மை வடிவமாக கபாலீச பைரவரையும் அவர் தேவி, சண்டகபாலினியையும் போற்றி வணங்குவதுமான யாமளம வீட்டில் அறிய இயலாத சிறப்புடையதும், பெருமை உடையதும், நிலைபெற்று விளங்கக்கூடியதுமான இறைவன் ஆகிய ஆனந்தருத்திரேசரை வணங்குவோர் பேரின்பக் கடலில் திளைப்பார்கள்.

விளக்க உரை

  • யாமளம் – கபாலீச வைரவரும் அகோரேசுவரியும் இவர்களது வழிபடு தெய்வங்கள். சில யாமள நூல்கள், அகோரேசுவரியை, சண்டகபாலினி என்று அழைக்கின்றன. பிரமயாமள தந்திரம்/ பாசுபத தந்திரம், பிங்களாமத தந்திரம் முதலானவை இவர்களுக்குரியவை.
  • யாமளர் – தம்மைத் தாமே அறிந்து சிவத்தை உணர்ந்ததன் மூலம், இவர்கள் தாமும் சிவரூபமாக மாறியவர்கள் .குருநாதர்கள் எண்மர் – சுவச்சண்டர், குரோதர், உன்மத்தர், உக்கிரர், கபாலி, சங்கரர், சேகரர், விஜயர் எனும் எட்டு வைரவர்கள், உருத்திரம், ஸ்கந்தம், பிரமம், விஷ்ணு, யமம், வாயு, குபேரம், இந்திரம் ஆகியவை எட்டு யாமள நூல்கள்
  • குலாவுதல் – உலாவு, சஞ்சரித்தல், நட்பாடுதல், விளங்குதல், மகிழ்தல், நிலைபெறுதல், பூந்துகில், புகைகூடி, கொண்டாடுதல்
  • இறைஞ்சுதல் – தாழ்தல், கவிழ்தல், வளைதல், வணங்குதல்

மூலப்பாடலின் எழுத்துக்கள் சரியாக அறியப்படாமையாலும், சொற்பிரிப்பு சரியாக இல்லாததாலும் பாடலில் எழுத்துப்பிழை ஏற்பட்டிருக்கலாம். அதுபற்றி விளக்கத்தில் பிழை ஏற்பட்டிருக்கலாம். குறை எனில் மானிடப்பிறப்பு சார்ந்தது. நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *