
பாடல்
பொற்புறு சபையின் மாதரார் நடனம்
புரிந்தியான் காண்பதை யொழித்துச்,
சிற்பர சபையி னின்றிரு நடனந்
தரிசிக்கப் பெறுவதெந்நாளோ,
மற்பொரு முசுக்கள் காந்தளைப் பாந்தண்
மணிப்பட மெனப்பயந் துந்திக்,
கற்பக தருவின் கழுத்தொடி தரப்பாய்
கற்குடி மாமலைப் பரனே
திருக்கற்குடிமாமலைமாலை – ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை
கருத்து – பொன்னாசையும், பெண்ணாசையும் துறந்து சிற்சபையில் நடனம் காணும் நாள் பற்றி எண்ணும் பாடல்.
பதவுரை
கற்பக தருவின் கழுத்தில் ஒளி வீசிக் கொண்டிருப்பதைப் போல் கற்குடிமாமலையில் வீற்றிருக்கும் கடவுளே! உட்கொண்டால் மரணம் கொடுக்கக் கூடியதும், இலையும் தண்டும் மேனி மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாக்கக் கூடியதுமான கார்த்திகைபூ எனும் காந்தள் மலரினை தொட்ட குரங்குகள் பயம் கொள்வதைப் போல் பொன்னால் ஆக்கப்பட்ட சபையில் மாதர்கள் நடனம் புரிவதைக் காண்பதை ஒழித்து,திருச்சிற்றம்பலம் எனவும், சிற்சபை எனவும், எனவும் அழைக்கபடும் சிற்பரசபை தனில் திருநடனத்தினை தரிசிக்கப் பெறும் நாள் எதுவோ?
விளக்க உரை
- திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை – பிரபந்தத்திரட்டு – பகுதி 25.
- தற்போதைய பெயர் உய்யக்கொண்டான்மலை
- முசுக்கள் – கருங்குரங்குகள்
- மற்பொரு – மல் பொரு – மல்யுத்தம், மதம் கொண்ட யானை