
பாடல்
கொள்ளாத பசுவுக்குப் பாலங்கேது
குருடான கண்ணுக்கு வெளிச்சமேது
சொல்லாத பேச்சுக்குக் கேள்வியேது
சோரஞ்செய் மங்கையர்க்கு வாழ்வுமேது
கல்லாத வீணருக்குக் கல்வியேது
காணா பேர்களுக்கு காட்சியேது
விள்ளாத சிடனுக்குக் குருவுமேது
வேடிக்கையாய்த் திரிந்தால் விழலாம்பாரே
சுப்ரமணியர் ஞானம்
கருத்து – கிட்டாதவை என்பதை உதாரணங்களாக காட்டி மனித வாழ்வினில் வேடிக்கையாக பொழுதினை போக்கி திரிதல் கூடாது என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
பசு தயாராக இருந்தாலும் அதை ஏற்காத கன்றுக்கு பால் எங்கனம் கிடைக்கும்? பார்வை அற்ற கண்களை உடையவர்களுக்கு வெளிச்சம் என்பது எங்கனம் இருக்கும்? உச்சரித்து சொல்லப்படாத சொல் குறித்து கேள்வி என்பது எப்படி எழும்? தர்ம நெறி விலகிய கற்பு இல்லா மங்கையர்களுக்கு வாழ்வு என்பது எங்கனம் கிட்டும்? நூல்களைக் கல்லாதவருக்கு கல்வி எங்கனம் கிட்டும்? மெய்ஞானம் அடைதல் பொருட்டி விரும்பி அதன் பாதையில் செல்லாதவர்களுக்கு காட்சி எங்கனம் கிட்டும்? தெளிவு அடைதல் பொருட்டு வாய் திறக்காத சீடனுக்கு குருவானவர் எங்கனம் கிட்டுவார்? இவை போல பிறப்பின் நோக்கம் அறியாமல் வேடிக்கையாக திரிந்தால் மண்ணில் விழ மட்டுமே செய்யும்.
விளக்க உரை
- விள்ளுதல் – மலர்தல், உடைதல், வெடித்தல், பிளத்தல், பகைத்தல், மாறுபடுதல், தெளிவாதல், நீங்குதல், சொல்லுதல், வெளிப்படுத்துதல், வாய் முதலியன திறத்தல், புதிர் முதலியன விடுத்தல்