
பாடல்
நேர்தரு மந்திர நாயகி யானவள்
யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – நவாக்கரி சக்கரத்தின் தியானவண்ணம் கூறும் பாடல்
பதவுரை
தன்னை வழிபடுபவர்களுக்கு நேரில் வந்து அருள் புரிகின்ற அந்த நவாக்ரி சக்கர சத்தி என்ன நிறத்தை உடையவள் என ஆராய்ந்தால் அழகிய தேவியாகிய அவள் மேகம் போன்ற நீல நிறத்தை உடையவள் என அறியலாம்; இதனை அறிந்து அவள்பால் உனது அன்பினை செலுத்தி அப்படியே நீ நட; அப்பொழுது நீ நினைத்தவை எல்லாம் உனக்குக் கைகூடும்.
விளக்க உரை
- நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம் , ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
- திரிகை – சக்கரம்
- ‘யாதொரு வண்ணம்’ என்பது வினாவாகவும், ‘கார்தரு வண்ணம்’ என விடையாகவும் தாமே விடை பகன்றார். நேரின் வந்து அருளும் போது அவளின் நீல நிறம் கண்டு அவளை அறியாமல் இருக்கலாகது என்பது பற்றியே `யாதொரு வண்ணம்` கார்தரு வண்ணம்’ எனவும் கொள்ளலாம்.