
பாடல்
பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – திருவைந்தெழுத்து ஆனது போகம் வேண்டுவாருக்கு போகத்தையும், முக்தி வேண்டுவாருக்கும் முக்தியையும் தரும் என உணர்த்தும்
பதவுரை
திருவைந்தெழுத்தை ஓதுபவரிடத்தில் மாறுபாடுகளையும், வெறுப்பினையும் ஏற்படுத்தும் பகை, பணிதலைக் கொண்ட பெரியோர்களை இகழும் இகழ்ச்சி, நல்வினை தீவினை ஆகிய இருவினைகள், பொருந்தாச் செயல்கள், இடையூறு, மூப்பு, தடை, தளர்ச்சி, வஞ்சனை, நடுக்கம் மற்றும் மாறுபாடு இவைகள் என்பவை இல்லை; நாள்தோறும் நன்மைகளே விளையும். அம்மந்திரமே மலத்தை முற்றிலும் கழுவித் தூய்மையைத் தரும்.
விளக்க உரை
- பகை – எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன் பகை கொள்ளுகை; கோளின் பகைவீடு; காமகுரோதம் முதலிய உட்பகை
- பணிந்தவர் – பணியப்பட்டவர்
- விருத்தம் – வட்டம், சொக்கட்டான் ஆட்டத்தில் விழும் தாயவகை, பாவினம் மூன்றனுள் ஒன்று, ஒழுக்கம், செய்தி, தொழில், ஒரு சிற்ப நூல், நிலக்கடம்புச்செடி, ஆமை, வெள்ளெருக்கு, மூப்புப்பருவம், பழைமை, அறிவு, முரண், பகைமை, குற்றம், பொல்லாவொழுக்கம், இடையூறு, ஏதுப்போலிகளுள் ஒன்று, கூட்டம்.