அமுதமொழி – விகாரி – வைகாசி – 3 (2019)


பாடல்

கனத்த மலையை எடுத்தணுவாய்க்
      காலால் ஊன்றிமீதுவைத்தால்
   கால்தான் தாங்க வசமாமோ
      கருணாநிதியே இனிஉனது

சினத்தை மகன்மேற்பொருத்தநின்றால்
      சிறியேன் பொறுத்து நிலைப்பேனோ
   சிவையே உனது தயவுவரச்
      செய்வாய் இனிஅஞ்சுகஇனமே

தொனித்தமறையின் முடிவிளக்கே
      சோதி வதனச் சுடரொளியே
   சுத்த வியோம் மண்டலத்தில்
      சுகமாய் வளரும் துரந்தரியே

மனத்துள் அழுக்கை அகற்றிஉன்றன்
      மலர்ப்பா தமதில் சேர்த்தருள்வாய்
   மயிலாபுரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துகுற்றங்களை நீக்கி திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டுதல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, அஞ்சுகம் ஆகிய கிளிக்கூட்டதை ஒத்து இருப்பவளே! ஒலித்தலை உடைய வேதமாகிய மறையின் முடிவான பொருளாக இருப்பவளே! சோதி போன்ற சுடரொளியை முகத்தில் கொண்டவளே! சுத்த பரவெளி ஆகிய மண்டலத்திற்கு பொறுப்பு ஏற்பவளே! பெரும் கருணை உடைய தாயே! உனது திருவடி ஊன்றி கனமாகிய மலையை எடுத்து அதன் ஒரு பகுதி ஆகிய ஒரு மூலக்கூறாகியதும் அளவில் சிறியதும் ஆன அணு அளவில் ஆக்கி என் மீது வைத்தால் அந்த பேரின்ப அனுபவத்தை எனது சுவாசத்தால் தாங்க இயலுமோ? (இயலாது). இவ்வாறான பேரனுபவத்தை தருபவளாகிய நீ, சினம் கொண்டு உன் மகன் ஆகிய என் மேல் சினத்தை பொருத்தி நின்றால் சிறியவன் ஆகிய யான் அதை பொறுத்து நிலை பெற இயலுமோ?(இயலாது என்பதே முடிவு) அன்னை ஆகிய பார்வதி தேவியே! என்மனத்துள் உள்ள அழுக்குகள் ஆகிய காமம், வெகுளி, மயக்கம் முதலிய குற்றங்களை நீக்கி,  உன்னிடத்தில் அருள், அன்பு, பக்தி ஆகியவை வரும்படி செய்து உன் திருவடித் தாமரை சேர அருள்வாய்!

விளக்க உரை

  • “கனமாகிய மலையை எடுத்துப் பேரணுக்களாக நெருக்கி என் மீது வைத்தால் என் கால்கள்தான் தாங்க முடியுமோ” என்று சில இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. கால் என்பது மூச்சுக்காற்றுடன் தொடர்புடையது எனும் சித்தர் பெருமக்களின் வாக்காலும், பேரனுபவத்தை விவரிக்க இயலா நிலை ஏற்படுகிறது என்பதை முன்நிறுத்தியும் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • சிவை – பார்வதி, காளி, நரி, வேர், உலைமூக்கு, நெல்லிக்காய்
  • தொனித்தல் – ஒலித்தல், சொல்லுதல், குறிப்புப் பொருள் தோன்றுதல்
  • துரந்தரி – பொறுப்பு ஏற்போள்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *