
பாடல்
மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொணோய் வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ண முணர்வுதா வுலக மூர்த்தீ
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – நிலை அற்ற உடல் குறித்து குறிப்பிட்டு நிலையானதான சிவானுபவம் வேண்டுதல்.
பதவுரை
உலகத்துக்குத் தலைவனே! பெரு வாழ்வு வாழ்ந்து பிணம் கண்ட காக்கைகளைப் போல, அடியேனுடைய வலிமையான தீய வினைகள் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க, அடியேன் மயங்குகின்றேன்; பெரு வாழ்வு வாழ்ந்து பிணம் கண்ட காக்கைகளைப் போல, அடியேனுடைய வலிமையான தீய வினைகள் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க, அடியேன் மயங்குகின்றேன்; இழிவு தன்மை உடையவனும், கைவிடப்பட்டவனும் , குணமில்லாதவனும், நிரந்தர வடிவம் ஒன்றும் இல்லாததும் இருந்து வெறுக்கத்தக்கதாய், பண்பு அற்றதாய் நாற்றம் கொண்டதாய், நோய்க்கு இருப்பிடமாய் இருக்கும் இந்த உடலை அடியோடு போக்கும் வண்ணம் அடியேனுக்குச் சிவானுபவத்தை அருளுவாயாக.
விளக்க உரை
- பிணத்தைக் கண்ட காக்கை அதனை விடாது மொய்ப்பது போல் உயிரைக் கண்ட வினையும் அதனை விடாது மொய்க்கும்.
- மோத்தை – வாழை தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ; முற்றுத்தேங்காய்; ஆட்டுக்கடா; வெள்ளாட்டுக்கடா; பொருந்த வாழ்வு
- சீத்தை – குணமின்மை, கைவிடப்பட்டவன், கீழ் மகன், பதனழிவு, சீட்டுச்சீலை; சீ என்று வெறுத்தற்குரியது
- சிதம்பு – பதனழிவு, இழிவு, தன்மையின் அழிவு