அமுதமொழி – விகாரி – சித்திரை – 23 (2019)


பாடல்

கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர்
கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியிணை இரண்டும் அடையுமா றடைந்தேன்
அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க
நிலைவிளக் கலகில்சா லேகப்
புடைகிடந் திலங்கும் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே

ஒன்பதாம் திருமுறை –  திருவிசைப்பா – கருவூர்த் தேவர்

கருத்துஉன் திருவடி அடைந்த பிறகும் அருள் செய்யாது இருப்பாயா என்று வினவும் பாடல்.

பதவுரை

நீண்டதும், உயரமானதும் ஆன அடுக்குக்களை உடைய மாட வீடுகளில் இரவு நேரங்களில் இருளைப்போக்குவதற்காக இருப்பதும், அணையாதும்  ஆன விளக்குகள் சாளரங்களுக்கு வெளியே வந்து ஒளியை வீசுகின்றதும் ஆன கடைத் தெருக்களையுடைய திருப்பூவணம் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கின்ற பெருமானே! கொடிய வினையாகிய பாசக்கடலைக் கடந்து, ஐம்பொறிகளாகிய திருடர்களை மெதுவாக விரட்டி, உன் திருவடிகள் இரண்டனையும் குருவால் சொல்லப்பட்ட நெறியில் நிற்கும் முறையை அடைந்துவிட்டேன். அடியேனுக்கு அருள் செய்வதோ, அருள் செய்யாது விடுப்பதோ உன் திருவுள்ளம்.

விளக்க உரை

  • அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய் – அருள் செய்வாய், அருள் செய்யாது ஒழிவாயா(நிச்சயம் மாட்டாய் என்பது மற்றொரு பொருள். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • அடையுமாறு அடைதல் – நூலில் சொல்லப்பட்ட நெறி வழி நின்று அந்த  முறையில் அடைதல் என்று சில இடங்களில் விளக்கப்பட்டு இருக்கிறது. குரு காட்டிய வழியில் அடைதல் என்பது பொருத்தமான பொருளாக இருக்கும் என்பதால் மேலே குறிப்பிடப்பட்ட விளக்கம் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • ஐவர் கள்ளர் – ஐம்பொறிகள்
  • மெள்ள – இனிமையாக விதித்த வழியில் சென்று நீக்கினமை பற்றி; சிறிது சிறிதாக நீக்கி என்று பொருள் பகர்வாரும் உளர்
  • துரந்து – ஓட்டி.
  • நிலை விளக்கு – அணையாது உள்ள விளக்கு.
  • சாலேகப் புடை – சாளரங்களுக்கு வெளியே
  • இலங்கும் – ஒளியை வீசுகின்ற

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *