
பாடல்
பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி
அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர
உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – அதிபக்குவம் உடையவர்கள் அருளை ஈயும் குருவை காணும் வழியையும், அவரை அடையும் வகையும் பற்றி கூறப்பட்டப் பாடல்.
பதவுரை
யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும்பி அடியேன் வருந்தி துடித்து ஒழிந்தேன்; அந்த விருப்பின் காரணமாக உம்மை அடைந்த யான் இனி ஒருவரோடும் சேரமாட்டேன்; அவருடனான சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன்; ஆகையால் அடியேனது வினைகள் அழிந்து ஒழியும்படி செய்து, என்னை ஏற்றுக் கொண்டு, என் தலையில் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டு அருள்வீர்.
விளக்க உரை
- பக்குவம் உடைய ஆன்மாக்கள் பரம குருவைக் கண்டவுடன் பணிந்து இரப்பர் என்ற பொருளில் அவர்களின் கூற்றாக இப்பாடல்
- அறக் கருணைசெய்து ஆட்கொள்ளாவிடினும், மறக் கருணை செய்தேனும் ஆளுதல் வேண்டும் என்று கூற ‘திருவடி சூட்டி’ என உயர் சொல் உரையாது, ‘உதைத்து` எனத் தாழ்சொல் உரைத்த முறை கண்டு அறிக.
- பதைத்தல் – துடித்தல், வருந்துதல், நடுங்குதல், ஆத்திரப்படுதல், செருக்கடைதல்
- அகைத்தல் – வருத்தல்; முறித்தல்; அறுத்தல்; உயர்த்தல்; அடித்தல்; ஓட்டுதல்; எழுதல்; தழைத்தல்; கிளைத்தல்