
பாடல்
மத்த னாய்மதி யாது மலைதனை
எத்தி னான்திரள் தோண்முடி பத்திற
ஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும்
பொத்தி னான்புக லூரைத் தொழுமினே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – ஆணவம் கொண்டு இருந்து இராவணுக்கு ஆணவம் விலகியப் பின் அருள் புரிந்த திறம் பற்றி உரைத்தது.
பதவுரை
மதச் செருக்கு கொண்டு பித்து பித்தவனாய் நந்தி எம்மானை சிறிதும் மதியாமல் திருக்கயிலாயத்தை எடுத்த இராவணனின் திரண்ட தோள்களும், முடிகளைக் கொண்ட தலைகள் பத்தும் இறும்படியாகத் திருவிரலால் ஒற்றியவனும், தன் தவறு உணர்ந்து தன் நரம்புகளை யாழாகக்கொண்டு அவன் ஒரு மனதாக வணங்கிய பொழுது மீண்டும் அருள்செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருப்புகலூரைத் தொழுவீர்களாக.
விளக்க உரை
- ஒத்துதல் – தாளம் போடுதல், தாக்குதல், ஒற்றுதல், விலகுதல்
- விரலால் ஒத்தினான் – கால்விரலை ஊன்றினான்
- எத்தினான் – எற்றினான் என்பதன் திரிபு
- இற – நெரிய
திருநாவுக்கரசர் குரு பூசை – சித்திரை – சதயம்
முக்தித் தலம் – திருப்புகலூர்