
பாடல்
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ
திருஅருட்பா -ஆறாம் திருமுறை – வள்ளலார்
கருத்து – அருள் இருக்கும் இடமும் அதைப் பெற்றிடும் வழியும் பற்றி கூறும் பாடல்.
பதவுரை
எல்லா வகையிலும் மற்றைய உயிர்களிடத்து மனம், மொழி, காயம் இவைகளால் சிறு வேற்றுமை உணர்ச்சியுமின்றி எல்லா உயிர்களையும் தம்முடைய உயிர்போல கருதி, தனக்கு இருக்கும் உரிமைகள் போலவே ஏனைய பிற உயிர்களுக்கும் சமமான உரிமைகள் இருப்பது போல் கருதியும் அவைகளுக்கு மனம் உவந்து அருள் புரியும் உரிமை தமக்கு உண்டென்னும் உணர்வை உடையவராய் எவர் இருப்பார்களோ அவருடைய மனமே சுத்த ஞான உருவாகவும், எம் பெருமான் ஆகிய சிவபெருமான் திருக்கூத்து இயற்றும் ஞான சபையாகிய இடம் என்று நான் தெரிந்து கொண்டேன்; அத்தகைய திறமை உடைய ஞானவான்களின் திருவடிக்கு ஏவலாகி அடித்தொண்டு புரிவதற்கு என் சிந்தை மிகவும் விரும்புகின்றது.
விளக்க உரை
- தனித் திருஅலங்கல் என்ற தலைப்பில் ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி வரும் பாடல்
- ஒத்துரிமை – அனைத்தையும் ஒன்றாய் காணும் பாங்கு
- சித்துரு – கடவுள்
- வித்தகன் – வியத்தகு தன்மையுடையவன்; வல்லவன்; வைரவன்; கம்மாளன்; தூதன்; இடையன்; பேரறிவாளன்; ஞானவான்கள்