அமுதமொழி – விகாரி – சித்திரை – 5 (2019)


பாடல்

தானென்ற வாலையிவள் ரூபங் காணச்
     சமர்த்துண்டோ ஆண்பிள்ளை தானு முண்டோ
பானென்ற வாமத்துக் குள்ளே யப்பா
     பராபரையாள் பலகோடி விதமு மாடித்
தேனென்ற மொழிச்சியிவள் சித்தர்க் கெல்லாம்
     சிறுபிள்ளை பத்துவயது உள்ள தேவி
ஊனென்ற உடலுக்குள் நடுவு மாகி
     உத்தமியாள் வீற்றிருந்த உண்மை தானே

கருவூரார் பூஜாவிதி

*கருத்துவாலையின் தன்மைகளையும் இருப்பிடம் பற்றியும் உரைத்தப் பாடல்*

பதவுரை

பாலப் பருவத்திலுள்ளவளும், சக்தி பேதங்களில் ஒன்றும் ஆன வாலையின் ரூபம் காண யாருக்கு திறமை உள்ளது? சமர்த்தனும் வீரனும் ஆகிய ஆண்பிள்ளையாலும் அவளை அறிய முடியுமோ? அழகும், ஒளி பொருந்தியும் இருக்கக் கூடியவளும் அகப்புறச்சமயம் சார்ந்தவளும் இடப்பாகம் கொண்டவளுமான பராபரை ஆனவள் பல கோடிவிதமாய் வடிவம் கொள்ளக் கூடிய திறமை கொண்டவள்; தேன் போன்ற மொழிகளை உடையவள்;  சித்தர் பெருமக்களால் பத்து வயது கொண்ட சிறு பிள்ளையாக வழிபடக் கூடியவள்; உத்தமி ஆன அவள் ஊன்னெற உடலுக்குள் உச்சிக்கு கீழே அன்னாக்குக்கு மேலேஆன உயிர்ஸ்தானத்தின்  நடுவில் வீற்றிருப்பவள் இது உண்மை தான்.

விளக்க உரை

  • வலது கண் அகாரம்; இடதுகண் உகாரம், இரண்டும் உள்ளே சேரும் இடமே மகாரம் ஆகிய வாலையின் இருப்பிடம் என்று உரை பகர்வார்களும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • வாலை பூசை செய்யாதவர்கள் சித்த தன்மை அடைவது இல்லை என்பதே உண்மை.
  • வாமம் – தொடை, அழகு, ஒளி, இடப்பக்கம், நேர்மையின்மை, எதிரிடை, தீமை, அகப்புறச்சமயம், பாம்பு வகை, முலை, செல்வம்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *