பாடல்
விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ
கருணைதடத் தரசேநின் கருத்தைஅறி யேனே
ஆறாம் திருமுறை – திருஅருட்பா -வள்ளலார்
பதவுரை
அருள் நடனத்தைச் செய்யும் ஆடலரசே, விளக்கொளி இல்லாமல் இருள் படிந்துள்ள ஓர் அறையில் கவிழ்ந்து கிடந்து அமுது அழுது மயங்குகின்ற சிறு குழந்தையின் அறிவினை விட மிக்க சிறுமையை உடைய யான், அளக்க இயலாத துன்பமாகிய கடலில் விழுந்து, பன்னெடுங் காலமாக அதில் அலைந்து அலைந்து, மென்மையான துரும்பினை விடவும் மிக மெலிந்த துரும்பு போன்று, கிளைகளுடன் கூடிய பழுத்த மரம் துன்பம் அனுபவிப்பது போல் வாயாற் சொல்ல முடியாத கொடுமைகள் அனைத்தனையும் அனுபவித்து, ஆக்கத்துக் குரிய நினைவும் செயலும் இல்லாதவன் ஆகி தீமை தரும் எண்ணங்களும் கொண்டு, கடுமை செயல் உடையவனாக, கண்டாரை யிகழ்ந்து பேசும் இயல்புடையேனாகவும், கேலி பேசித் திரியும் வீணனாகவும் ஆயினேன்; இவ்வாறான யான் குற்றமறியாத இந்த உலகில் ஏன் பிறந்தேனோ? நினது திருவுள்ளத்தை அறிகிலேன்.
விளக்க உரை
- தன் பிறப்பின் நோக்கம் அறியாதற்காக வருந்தியது.
- கேவல நிலையில் ஆணவ மல இருளில் கிடந்த ஆன்மா சகலத்தில் உடம்பொடு கூடி உலகியல் அறிவொளி பெற்று அதனையே நோக்குவதும், பின்னர் திருவருள் ஞானம் பெற்று முத்தி பெறுவதும் உட் பொருள்.
- ‘அளக்கறியாத் துயர்க் கடலில் விழுந்து’ – உலகியல் துன்பங்கள் கடலலை போல் பெருகி வருவதை குறிப்பது.
- கிளத்தல் – சொல்லுதல்