பாடல்
மாய விளக்கது நின்று மறைந்திடுந்
தூய விளக்கது நின்று சுடர்விடுங்
காய விளக்கது நின்று கனன்றிடுஞ்
சேய விளக்கினைத் தேடுகின்றேனே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
மாயாகாரியமாகிய உடல், உலகு, ஊண் முதலிய பொருள்கள் விளக்குப்போல் நம் வாழ்க்கைக்குத் துணையாக இருந்து காலவரையறைக்கு உட்பட்டு மாயும். பேரின்பப் பெருவாழ்வினைத் தருவதும், செம்மையான விளக்கானதும், திருவடிப்பேற்றினை தருவதுமான தூய விளக்காகிய சிவன் திருவடியானது விளக்காக நின்று உயிர்களுக்கு முற்றுணர்த்தி வினைகளை விளக்கி நீக்கம் செய்விக்கும். திருவருள் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவித்து வருவதால் காயவிளக்கு சுடர் பெறும். எனவே அந்த திருவிளக்கினை அருளால் நாடி, அடைய அதைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.
விளக்க உரை
- தோன்றிய அறிவால் ஆன்மரூபத்தின் வழி தத்துவ தரிசனத்தைச் செய்து, திருவருளை நாடவேண்டும், திருவருளே ஞானக்கண் என்பது பற்றியது
- சேய – செம்மையான
- கனற்றுதல் – வெதுப்புதல்; துன்பம் தருதல்
- மாய விளக்கு – இயற்கை ஒளி
- தூய விளக்கு – ஞான ஒளி
- காய விளக்கு – உள் ஒளி
- சேய விளக்கு – சிவ ஒளி