பாடல்
அமல கமலவுரு சங்கந் தொனித்தமறை
அரிய பரமவெளி யெங்கும் பொலித்தசெய
லளவு மசலமது கண்டங் கொருத்தருள …… வறியாத
தகர முதலுருகொ ளைம்பந் தொரக்ஷரமொ
டகில புவனநதி யண்டங் களுக்குமுத
லருண கிரணவொளி யெங்கெங் குமுற்றுமுதல் …… நடுவான
கமல துரியமயி லிந்துங் கதிர்ப்பரவு
கனக நிறமுடைய பண்பம் படிக்கதவ
ககன சுழிமுனையி லஞ்சுங் களித்தமுத …… சிவயோகம்
கருணை யுடனறிவி தங்கொண் டிடக்கவுரி
குமர குமரகுரு வென்றென் றுரைப்பமுது
கனிவு வரஇளமை தந்துன் பதத்திலெனை …… யருள்வாயே
திமிலை பலமுருடு திந்திந் திமித்திமித
டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட
திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த …… திகுதீதோ
செகண செகணசெக செஞ்செஞ் செகக்கணென
அகில முரகன்முடி யண்டம் பிளக்கவெகு
திமிர்த குலவிருது சங்கந் தொனித்தசுரர் …… களமீதே
அமரர் குழுமிமலர் கொண்டங் கிறைத்தருள
அரிய குருகுகொடி யெங்குந் தழைத்தருள
அரியொ டயன்முனிவ ரண்டம் பிழைத்தருள …… விடும்வேலா
அரியின் மகள்தனமொ டங்கம் புதைக்கமுக
அழகு புயமொடணை யினபங் களித்துமகிழ்
அரிய மயிலயில்கொ டிந்தம் பலத்தின்மகிழ் …… பெருமாளே.
திருப்புகழ் – அருணகிரிநாதர்
பதவுரை
திருமாலின் மகளான வள்ளியின் தனங்களோடு தனது அங்கமும் சேர்ந்து இருக்கும் படி, திருமுக அழகுடன் திருத்தோள்களால் அவளை அணைத்து இன்பத்தில் திளைத்து மகிழ்ந்து, அருமை வாய்ந்த மயிலுடனும், வேலாயுதத்துடனும் இந்தம்பலம் என்ற ஊரில் மகிழ்ந்து ஆனந்தமாக அமர்ந்த பெருமாளே, திமில் எனும் பறையும், முருடு எனும் பலவிதமான மத்தள வகையும் ‘திந்திந் திமித் திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த திகுதீதோ செகண செகண செக செம் செம் செகக்கண’ என தாளத்துக்கு ஏற்ப ஒலிக்கவும், ஆதிசேஷனின் முடிகள் வரை நீண்டதான அண்டங்களும் பிளந்து போகும்படி மிக்க பேரொலியை எழுப்பி, வெற்றிச் சின்னங்களான சங்கங்கள் முழங்க, அசுரர்கள் சண்டையிட்டு மடிந்த போர்க்களத்தில் தேவர்கள் ஒன்று கூடி மலர்களைக் கொண்டு அங்கு பொழிய, அருமை வாய்ந்த கோழிக் கொடி எங்கும் சிறப்பாக விளங்க, திருமாலும், பிரமனும், முனிவர்களும், அண்டங்களும் பிழைத்து உய்ய வேலாயுதத்தைச் செலுத்திய வேலவனே, குற்றம் இல்லாத, 1008 இதழ் தாமரை வடிவம் கொண்ட சஹஸ்ராரதில் இருந்து சங்க நாதம் ஒலிக்க, வேதங்கள் என்றும் சாத்திரங்கள் என்றும் சொல்லப்படும் மறைகளால் அறியப்படாது செழித்து விளங்க கூடியதும், அசைவற்றதுமான அபூர்வமான ஆகாச வெளி எனும் அவ்விடத்தில் எவராலும் அவ்விடத்தின் உண்மைத் தன்மையை அறிய முடியாதவாறு, உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் ஆகி உருக் கொண்டுள்ள அகராதி 51 அக்ஷரங்கள் ஆகி, அனைத்து லோகங்களுக்கும், ஆறுகளுக்கும், அண்டங்களுக்கும் முதன்மை பெற்றதாய், செந்நிற கிரணங்களை வீசும் பேரொளியை எல்லா இடங்களிலும் கண்டு, முதல், நடு, மற்றும் தாமரைவடிவமானதும், யோகியர் தன் மயமாய் நின்று தியானிக்கும் உயர் நிலையான துரியத்தில் சந்திர ஒளி போல் பரவுவதும், பொன்னொளி பொன்ற நிறமுடையதும், ஸ்படிகம் போன்ற வெண்மை நிறமான சுத்த வாயிலைக் கொண்டதுமான ஆகாய வெளியில், சுழி முனை நாடியின் உச்சியில், பஞ்ச இந்திரியங்களும் இன்பம் பெறக் கூடியதாய் அமுதம் போல் விளங்கும் சிவ யோக நிலையை உனது கருணையினால் அறியும்படியான வழியை யான் அடைவதற்கு, பார்வதியின் குமரனே, குமர குருவே என்று பல முறை கூற, முதிர்ந்து கனிந்த பக்தி நிலை வர, செயல் செய்வதற்கான திடம் எனப்படும் இளமையைத் தந்து, உன் திருவடியில் என்னை இணைக்க அருள்வாயாக.
விளக்க உரை
- பெரும்பேர்கண்டிகையில் இருந்து கிழக்கே செய்யூர் வழியில் உள்ளது இத்தலம் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடலில் யோக மரபு பற்றிய குறிப்புகள் பல இருப்பதாலும், அம்பலம் என்ற சொல் சிற்சபையை குறிப்பதாலும், தச தீட்சையில் பல குறிப்புகள் இருப்பதாலும், பூத்தாக்காலாயிரத்தெட்டின் வாசி பூங்கமலத் திருவடியை பூசை செய்யே (அகஸ்தியர் ஞானம்) – உண்மையான குருவினை சரண் அடையும் போது அவர் கற்றுத் தருவதில் இவையும் அடக்கம் என்பதாலும் குருமுகமாக ஆழ்ந்து அறிக.