பாடல்
விண்ணார் மலர்ப்பொழில் சூழ்காமி மாமலைமேலமர்ந்த
தண்ணார் மதிபுனை வேணியன் ஆபதுத்தாரணன் மேல்
பண்ணாப் பாடிய மாலைக்கு மாமுகன் பாதமும் நீள்
கண்ணாறிரண்டுள கந்தன் பொற்பாதமும் காத்திடுமே.
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் – 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
விண்ணில் உள்ள தேவர்கள் மலர் சொரியும் இடமாகவும், சோலைகள் சூழ்ந்ததும், பொன் போன்ற உயர்ந்ததுமான பெரிய மலைமேல் அமர்ந்தவனும் குளிர்ச்சியான சந்திரனை தனது திருமுடியில் சூடியவனும் ஆன ஆபதுத்தாரணன் மேல் பண்ணால் இறைவனுக்கு ஆரம் போன்று பாடிய மாலைக்கு பெரிய முகத்தை உடைய கணபதி பாதமும், நீளமான பன்னிரெண்டு கண்களை உடைய கந்தன் பொற்பாதமும் காத்திடும்.
விளக்க உரை
- இது காப்புச் செய்யுள்.
- ஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.
குரு அருளோடும் திரு அருளோடும் ஒவ்வொரு பாடலாக பதவுரை எழுதப்பட இருக்கிறது. இந்த முயற்சியும் வெற்றி பெற என் குருவின் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.