உமை
மனிதர்களில் சிலர் கோணல் அங்கம் உடையவர்களாகவும், சிறிதான அங்கம் உடையவர்களாவும், ஒற்றைக்கை நொண்டிகளாகவும், கூனர்களாகவும், குள்ளர்களாகவும் காணப்படுகின்றனரே, அது ஏன்?
சிவன்
முன் ஜென்மத்தில் பொருள் ஆசையினால் மதிகெட்டு விற்றல் வாங்கல் ஆகியவற்றில் தானியங்களின் அளவுகளை குறைத்தும் அவற்றில் மாறுபாடு செய்தும் விலையை வித்யாசப்படுத்தியும் விற்பனை செய்த மனிதர்களும், கோபத்தினால் பிறரை அங்கக் குறைவு ஆக்கியவர்களும், மாமிசம் உண்டவர்களும், விஷயங்களை சரியாக தெரிவிக்காத மனிதர்கள் மற்றும் இவ்வகை நடைஉடைய மனிதர்கள் பின் ஜென்மங்களில் கோணல் அங்கம் உடையவர்களாகவும், சிறிதான அங்கம் உடையவர்களாவும், ஒற்றைக்கை நொண்டிகளாகவும், கூனர்களாகவும், குள்ளர்களாகவும் காணப்படுகின்றனர்.
உமை
மனிதர்களில் சிலர் பித்துபிடித்தவர்களாகவும், பேய் பிடித்தவர்களாகவும் காணப்படுகின்றனர், அது ஏன்?
சிவன்
பூர்வ ஜென்மத்தில் கர்வமும், தான் எனும் அகங்காரமும் படைத்து பிறரை பலவிதமாக பேசியும், மிகவும் நகைத்தும் இருந்த மனிதர்களும், பொருளாசையினால் மயக்கம் தரும் இன்பப்பொருளால் பிறரை மயக்கியவர்களும், வயதானவர்களையும், மேலானவர்களையும் வீணாக பரிகாசம் செய்த மூர்க்கர்களும் சாத்திரங்களை அறிந்த போதிலும் எப்பொழுதும் பொய் சொல்பவர்களாகவும் மற்றும் இவ்வகை நடத்தை உடைய மனிதர்கள் பின் ஜென்மத்தில் பித்துபிடித்தவர்களாகவும், பேய் பிடித்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.
உமை
சில மனிதர்கள் குழந்தைகள் இல்லாமல் துன்பப்படுகின்றனர், பலவகை முயற்சி செய்தும் சந்ததிகளை அடைவதே இல்லையே, அது ஏன்?
சிவன்
பூர்வ ஜென்மத்தில் எந்த பிராணிகளிடத்திலும் தயை இல்லாமலும், சிசுஹத்தி செய்து கொண்டும், மிருகங்களையும், பட்சிகளையும் உண்டும், பெரியோர்களை பகைத்தும், பிறர் பிள்ளைகள் மேல் பொறாமை கொண்டவர்களாகவும், சாத்திரத்தில் சொல்லியபடி சிராத்தம் முதலியவற்றால் பித்ருக்களை வணங்காமலும் மற்றும் இவ்வகை நடத்தையும் இருக்கும் மனிதர்கள் பின் ஜென்மங்களில் வெகுகாலம் கழித்து மானிட பிறப்பு அடையும் போது குழந்தைகள் இல்லாமலும், பலவகை முயற்சி செய்தும் சந்ததிகளை அடையாமலும் இருக்கின்றர். இதில் சந்தேகமில்லை.
உமை
சில மனிதர்கள் பயமுள்ள இடங்களில் வசித்துக் கொண்டும் எப்பொழுதும் பயமும் துயரமும் உள்ளவர்களாகவும் ஏழைகளாகவும் தவம் செய்துகொண்டும் மிகவும் கஷ்டப்படுகின்றனரே, அது ஏன்?
சிவன்
பூர்வ ஜென்மத்தில் எப்பொழுதும் பிறரை திட்டிக் கொண்டும், பயமுறுத்தியும் பலதீங்குள் செய்துகொண்டும் இருந்த மனிதர்களும், ஏழைகளுக்கு தாம் நினைத்தபடி வட்டிக்கு கொடுத்தும் இவ்வாறு அவர்களை பயமுறுத்தியும், நாய்களைக் கொண்டு வேட்டையாடி பிராணிகளை பயமுறுத்தியும் இருந்த மனிதர்கள் மரணம் அடைந்தப்பின் யமதண்டையினால் பீடிக்கப்பட்டு வெகுகாலம் நரகத்தில் கிடந்து பின் மானிடத் தேகம் அடையும் போது அநேக கஷ்டங்களும், அநேக துயரம் நிரம்பின தேசங்களில் பிறந்து எதற்கும் பயப்படுகின்றனர்.
உமை
சில மனிதர்கள் கல்வியும் செல்வமும் பெற்றவர்களாக இருந்தும் அந்நிய தேசங்களில் அவர்களின் அதிகாரங்களுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனரே, அது ஏன்?
சிவன்
சில மனிதர்கள் தனம் தானியம் போன்றவை நிரம்பியவர்களாக இருந்தாலும் சிரத்தை இல்லாமல் முறைதவறி தானம் செய்கின்றனர். உடல் சுத்தம், ஆச்சாரம் போன்றவைகளை விட்டு தகுதி அற்றவகளுக்காக தானம் செய்வோரும், பெருமைக்காகவும் பிறரை அவமதிக்க தானம் செய்வோரும் மற்றும் இவ்வகை நடத்தை உடைய மனிதர்கள் கல்வியும் செல்வமும் பெற்றவர்களாக இருந்தும் அந்நிய தேசங்களில் அவர்களின் அதிகாரங்களுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர்.
உமை
பூமியில் உள்ள மனிதர்களில் சிலர் சக்தி அற்றவர்களாகவும், ஆண்மை அற்றவர்களாகவும், பயன்பாடு அற்றவர்களாகவும், இழி தொழிலில் ஆசை உள்ளவர்களாகவும் கீழான எண்ணம் உடையவர்களோடு நட்பு உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். அது என்ன வகையான கர்மப் பலன்?
தொடரும்