முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 6

முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் காட்சி குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்





1.
விளக்கம்
கிரௌஞ்சமலையை பிளந்தவன்
அவுணர்கள் தலை அற்றவனாக செய்தவன்
கடல் வற்றச் செய்தவன்
ஐந்து பூதங்களையும் நீக்கச் செய்து
உரை அற்று உணர்வு அற்றுசொற்கள் அற்று, உணர உணர்வுகள் அற்று
உடலற்று உயிரற்றுஉடல் நீக்கி, உயிர் அற்று
உபாயம் அற்று
கரையற்று
இருளற்றுநீக்கமற நிறைந்திருக்கும் ஒளி
எனதற்றுமும்மலத்தில் முக்கியமானதான கர்வத்தால் உண்டாகும்தான்என்னும் அகங்காரம்.
பாடல்
வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
புரையற்ற வேலவன் போதித் தவா, பஞ்ச பூதமுமற்
றுரையற் றுவர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக்
கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே. 61
பொருள்
சமாதி நிலையின் காட்சிகளும் அதற்கு முருகன் எவ்வாறு உதவினான் என்பதும் இங்கு விளக்கப்பட்டுள்ளது.
கருத்து
கிரௌஞ்சமலையை பிளந்தவனும், அவுணர்கள் தலை அற்றவனாக செய்தவனும், கடல் வற்றச் செய்தவனுமான முருகன் எனக்கு போதனை செய்தருளினான். இதனால் பஞ்ச பூதங்களில் செய்கைகள்(சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்ஒசை) நீங்கப் பெற்றன.அஃதாவது புறக்கருவிகள் செயல்கள் நீங்கப் பெற்றன. புறக்கருவிகளில் செயல்பாடுகள் நீங்கும் போது உணர்வு நீங்கப் பெற்றும், உடல் நீங்கப் பெற்றும், முக்தி என்கிற நிலையும் அழிந்து, கரைகாணமுடியாதும், மிக ஓளி பொருந்திய அக்காட்சியை அவன் எனக்கு அருளினான்.
2
விளக்கம்
துருத்திகாற்றை உட்செலுத்த பயன்படும் கருவி
.
பாடல்
துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக மென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன
கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே. 71
பொருள்
கடினமான யோக மார்கங்களால் அடையப் படும் முக்தி நிலையையும், அதற்கு மாற்றாக எளிதான வழியில் அடையும் எளிய வழியும் இப் பாடலில் குறிப்பிடப்படுகிறது.
கருத்து
துருத்தி என்ற கருவி போன்று காற்றை உட் செலுத்தி, கும்பகம் செய்து(காற்றை உள்ளே நிறுத்துதல்பூரக கும்பம் மற்றும் ரேசக கும்பம்) உட் செல்லும் பிராண வாயுவை முறித்து, அதை உணவாக கொண்டு முக்தி அடைதலை எதற்காக செய்ய வேண்டும். ஆறு திரு முகங்களை உடைய குருநாதன் சொன்ன சொல்லின் உட் கருத்தை மனதில் பதிய வைப்பவர்கள் முக்தி அடைவார்கள்.

இத்துடல் முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் பகுதிகள் நிறைவு பெருகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 5




முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் தத்துவம் குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்

பாடல்

போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாதது ஒன்று வந்துவந்து
தாக்கும் மனோலயம்தானே தரும் எனைத் தன் வசத்தே
ஆக்கும் அறுமுகவா சொல்ல ஒணாது இந்த ஆனந்தமே. – 73

பொருள்

ஆறு திருமுகங்களை உடைய திருமுருகனே, போதல், வருதல், இரவு, பகல், புறம், உள், வாக்கு, வடிவம், இறுதி ஆகிய எதும் இல்லா ஒன்று(ப்ரம்மம்) என்னிடம் வந்து வந்து என்னைச் சேர்ந்து, மனோ லயம் தானே தந்து என்னை தன் வசத்தே ஆக்குகிறது. இப்படிப்பட்ட ஆனந்தத்தை விவரிக்க இயலாது.

கருத்து

·         மனிதன் முதலிய பிறவிகளுக்கே இருமைகள் உண்டு. இருமைகள் இல்லாதவன் முருகப் பெருமான் –
o    போதல், வருதல்
o    இரவு, பகல்
o    புறம், உள்

·         வாக்கும் வடிவும் – எண்ணங்களே வாக்காகவும் பின் அவைகள் வடிவமும் கொள்கின்றன என்பது துணிபு.இவைகள் இல்லாத ஒன்று – இவைகள் அனைத்தில் இருந்தும் விலகி இருப்பவன் (முருகன்)
·         வந்து வந்து தாக்கும் – இறைமை நம்மை (விரும்பி) அழைத்துச் செல்கிறது.
·         இது மனதினை லயப் படுத்துகிறது.  – ஜப கோடி  த்யானம், த்யான கோடி லயம் என்ற தியாகராஜ சுவாமிகளின் வரிகள் நினைவு கூறத் தக்கது.
·         எனைத் தன் வசத்தே ஆக்கும் – இறைமையே நம்மை வசப்படுத்துகிறது

2.

பாடல்

தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்ந
ணவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துத் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. 96

பொருள்

முருகனது மயிலே, உலகியல் துன்பம் நீங்க உன்னை தனியாக விடுவாராயின், வட திசையில் இருக்கும் மேரு மலையைத் தாண்டி, உனது தோகையினால் சுழன்று, கடல், சூரியன், தங்கச் சக்கரம் ஆகியவைகளைக் கடந்து, திசைகளைக் கடந்து உலவுவாயாக.

கருத்து

மயில் என்பது குறீயீடாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. த்யான மார்க்க அனுபவங்கள் கூறப் பட்டிருப்பதால், குரு முகமாக அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 4

முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் கம்பீரம் குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்
 
1.
பாடல்
 
விழிக்கு துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே. 70
பொருள்
 
எனது விழிக்கு துணையாக இருப்பது உனது மெல்லிய மலர் போன்ற பாதங்கள், உண்மைக்கு குறைவில்லா (தமிழ்) மொழிக்குத் துணை முருகா என்னும் நாமம், முன்பு செய்த பாவச் செயல்களை நீக்குவது அவனது பன்னிரு தோள்கள், நான் செல்லும் தனி இடத்திற்கு துணையாக வருபவை, வடிவேலும், செங்கோடன் மற்றும் மயில் ஆகியவையே.
 
கருத்து
 
பார்வைகள் அனைத்தும் அவனது திருவடி தேடி நிற்கும். பார்க்கும் மரங்கள் எல்லாம் நிந்தன்.. என்ற பாரதியில் பாடல் நினைவு கூறத்தக்கது.
உண்மை குன்றாத மொழிதமிழ் மொழி அதற்கு துணைமுருகா எனும் பெயர். முத்தமிழ் முருகன் தமிழுக்கானவன். அவனே முதல் தலை மகன்.
நாம் செய்து வந்த பழைய வினைகளை(சஞ்ஜீத கர்மாசைவ சித்தாந்த கருத்துப்படி) நீக்க துணையாக இருப்பது அவனது பன்னிரு தோள்கள்.
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமேஎன்கிற மாணிக்கவாசகரின் வரிகள் நினைவு கூறத்தக்கவை..
தனி வழி என்று இங்கு குறிப்பிடப் படுவதுஆன்மாக்கள் உய்யும் வழி. அவ்வாறு செல்லும் போது அதற்கு துணையாக இருப்பது அவனது வடிவேல், செங்கோடன் மற்றும் மயில் ஆகும்.
 
2. 
பாடல்
சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் தனக்கொரு காலுமஞ் சேன்கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலுந் திருக்கையு முண்ட நமக்கொரு மெய்த்துணையே. 107
பொருள்
சூலம் பிடித்து, பாசக் கயிற்றை சுழற்றி நம் மீது வீச வரும் காலனைக் கண்டு ஒரு பொழுதும் அஞ்ச மாட்டேன். ஏனெனில் பாற்கடல் கடைந்த பொழுது உண்டான ஆலால விஷத்தை உண்டவருடைய குமாரராகிய  ஆறுமுக பெருமானின் வேல் மற்றும் அவரது காக்கும் திருக்கரங்கள் நமக்கு உண்மையான துணையாக இருக்கின்றன.
கருத்து
சூலம் பிடித்து எம பாசம் சுழற்றிபொதுவாக(வினை) முடிவு காலத்தில் காலன் நம்மை நெருங்குவான். அப்போது பொதுவாக எல்லோருக்கும்பயம் ஏற்படும். அது போன்ற முடிவு காலத்திலும் நான் அஞ்சமாட்டேன்.
துணை என்பது குறிப்பிட்ட காலங்களுக்கு அல்லது நீண்ட காலங்களுக்கு என வகைப்படலாம். ஆனால் அது உண்மையான துணையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட துணை அவனது வேல் மற்றும் திருக்கரங்கள்ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 3

 
 
சிவனின் மைந்தன் / பெருமாளின் மருமகன் என்ற வகையில் இக்கட்டுரை.
 
 
 
 
 
 
 
 
 
 
1.
பாடல்
மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன்வந்தா லென்முன்னே
தோகைப் புரவியிற் றோன்நிற் பாய்சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே. 80
விளக்கம்
மாகம் – ஆகாயம்
கூற்றன் – எமன்
த்ரிபுராந் தகன் – மூன்று புரங்களையும் அழித்தவன் – சிவன்
பொருள்
எமன் வருங்காலத்தில் மாசு அற்றவரும், நிலைத்த முக்தியை அளிப்பவரும் முப்புரங்களை அழித்தவரும், கொடைத் தன்மை உடையவரும் மூன்று கண்களை உடையவருமான சிவனை வலது பாகத்தில் கொண்ட மேலான கல்யாண குணங்களை உடைய பார்வதியின் புத்திரரே, ஆகாயம் தொடும் அளவு கொண்ட எமன் வரும் காலத்தில் தோகைகளை உடைய மயில் மீது வந்து நின்று அருள் புரிவீர்.


கருத்து
முப்புரம் அழித்தல் – மும்மல காரியம் (விளக்கம் – திருமந்திரம்)
முக்தி – ஜீவன் முக்தி, விதேஹ முக்தி என்று பலவகைப்பட்டாலும் அழியாத முக்தியை அருள்பவர்
சிவனை வலப்பக்கம் வைத்திருக்கும் – பார்வதியைக் குறிக்கும்.
கல்யாணி – கல்யாண் என்பதன் பெண் வடிவம்.
கல்யாண என்னும் வடசொற்கு அழகிய, மனத்திற்கேற்ற,சிறந்த, உயர்ந்த, நல்ல, நலமான, மங்கல, மகிழ்ச்சியான, ஆக்கமான என்னும் பொருள்களும், மகிழ்ச்சி, ஆக்கம், தழைப்பு, நல்லொழுக்கம், அறப்பண்பு என்னும் பொருள்களும் கூறப்பட்டிருக்கின்றன. மங்கலம் என்ற தன்மையில் ஆளப்படுகிறது. அஃதாவது, இப்படிப்பட்ட குணங்களை உடைய பரம கல்யாணியின் பாலகன்
தோகைப் புரவி – வெகு விரைவில் வந்து என்னை ஆதரிப்பாய் என்பதன் வெளிப்பாடு.
இப்பாடல் சோமாஸ்கந்த மூர்த்தத்தை நினைவு கூறும்.
2. 
பாடல்
பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும்
மாலே கொண்டுய்யும் வகையறி யேன் மலர்த்தாள் தருவாய்
காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ்வேலவனே. 41
விளக்கம்
காலே இலாத – பாம்பு
மாலோன் மருக – திருமாலில் மருமகனே
பொருள்
காற்றை உண்டு கால்கள் அற்ற ஆதிசேஷன் மீது துயில் கொள்ளும் பள்ளி கொண்டிருக்கும் மாலோனில் மருமகனே, செந்நிறமுடைய வேலை உடையவரே, பால் போன்ற இனிமையான மொழிகள் பேசும் பெண்களுடன் கலந்து(சிற்றின்பத்தில் மூழ்கியவனாக) அதை விரும்புவனாக இருக்கிறேன். அதில் இருந்து விலகி முக்தி மார்கம் அடைய வழிகாட்டுவாயாக. ஆதலால் உன் மலர் பதத்தை தருவாயாக. (இறைவனின் பாதங்கள் முக்தியை தரும் என்பது துணிபு)
சீரடி சென்னி வைக்க – அபிராமி அந்தாதி
நாதன் தாள் வாழ்க – மணிவாசகப் பெருமான்
கருத்து
காலே இலாத – பாம்பு
மாலோன் மருக – திருமாலில் மருமகனே
காலே மிக உண்டு – காற்றை ஏற்று, இது சித்தர்கள் வழி காற்றினை சுவாத்தலைக் குறிக்கிறது. இங்கு உள் இழுத்தலை மட்டுமே குறிக்கிறது. சுவாசித்தலில் அளவு குறையும் போது, வாழும் காலம் அதிகரிக்கும்.
ஆண்டிற்கு ஒன்றாய் மூவாயிரம் பாடல் எழுதிய திருமூலரது வாழ்வு இங்கு நினைவு கூறத்தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 2

கந்தர் அலங்காரம்

தன் நிலை குறித்து புலம்பல்

1.
விளக்கம்

தோலால் சுவர் வைத்து – சுவர்கள் தோலால் எழுப்பப்பட்டிருக்கின்றன.
நாலாறு காலில் சுமத்தி – அவைகள் கால்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன.
இருகாலால் எழுப்பி – அவைகள் இருகாலால் எழுப்பபட்டிருக்கின்றன.
வளை முதுகோட்டி – அவற்றின் முதுகு வளைந்திருக்கிறது.
கைநாற்றி – கைகள் நாற்றப்பட்டிருக்கின்றன
நரம்பால் ஆக்கை இட்டு – அவைகள் நரம்பால் இணைக்கப்பட்டிருக்கின்றன.
தசை கொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால் – அவற்றின் மேற்கூரை தசையால் ஆக்கப்பட்டிருக்கிறது.
வேலால் கிரி துளைத்தோன் – முருகன்
அடித் தாளின்றி – பாதங்கள்

பாடல்
தோலாற் கவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிடி தாளன்றி வேறில்லையே. 44



பொருள்
உடலின் இயல்புகளும் அவற்றின் அமைப்புகளும் விளக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட உடலில் உயிர் நீங்கும் போது முருகனின் அடித்தாள் அன்றி வேறு துணையில்லை.

கருத்து
நாலாறு காலில் சுமத்தி – அவைகள் கால்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன.
1.
4+6 = 10 (தச வாயுக்கள் என்றஒரு கருத்து உண்டு.உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று,ஒலிக்காற்று,நிரவுக்காற்று,விழிக்காற்று,இமைக்காற்று,தும்மல்காற்று,கொட்டாவிக்காற்று,வீங்கல்காற்று)

2.
சந்திரநாடி ,சூரியநாடி,நடுமூச்சு நாடி,உள்நாக்கு நரம்புநாடி,வலக்கண் நரம்புநாடி,இடக்கண் நரம்புநாடி,வலச்செவி நரம்புநாடி,இடதுசெவி நரம்புநாடி,கருவாய் நரம்புநாடி,மலவாய் நரம்புநாடி  என்று பத்து வித நாடிக்களை குறிப்பது உண்டு.
அதுவும் தவிர கீழ்கண்ட கருத்தும் உள்ளது.

3. ஆறு  ஆதாரங்களும் (மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம் ,மணிப்பூரகம் ,அனாகதம்,விசுத்தி , ஆக்ஞை ) அவற்றுடன் சேர்த்து அந்தக்கரணங்கள் 4ம் சேர்த்து(மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம்) 10 என்பாரும் உளர்.

உயிர் பிரியும் நேரத்தில் உற்ற துணையாக இருப்பது அவனது திருப்பாதங்களே என்கிறார் அருணகிரியார்.

நாற்றுதல் – நடுதல் என்ற பொருளில் வந்துள்ளது

2.
விளக்கம்
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்  – வினைகளின் வழியாக வரும் உடலை நீக்கி உயர் பதம் பெற ஒரு வழியையும் காண்கிலேன்.
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய் – வாழ்வு நதியினை ஒத்து இருக்கிறது.
நரம் பாற்பொதிந்த பொதிதனை  – உடல் நரம்பால் ஆக்கப்பட்டிருக்கிறது.
திண்டாடு மாறெனைப் போதவிட்ட – என்னை திண்டாடுமாறு விட்ட
விதிதனை நொந்துநொந்து – இது விதியினால் நிகழ்த்தப்பட்டது அதனால் மனம் நொந்துவிடுகிறது.

என்மனம் வேகின்றதே – இதனால் என் மனம் வேகின்றது.

பாடல்


கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன் கந்த வேல்முருகா
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே. 98

பொருள்


(கதி – நற்கதி) முக்தி பெறுவதற்கு உரிய ஒரு மார்கத்தையும் நான் அறியவில்லை. இவ்வாழ்வு நதியினை ஒத்து  பொய் வாழ்வாய் இருக்கிறது. நரம்பால் ஆக்கப்பட்டிருக்கிறது. அதனால் உடல் கட்டப்பட்டிருக்கிறது. விதி வசப்பட்டு  நிலையற்றவாழ்வால் மனம் நொந்து என் மனம் வேகின்றது.
கருத்து
தத்துவார்தமாக சொல்லும் போது நதியினை ஒரு குறியீடாக பயன்படுத்துவார்கள். காரணம் நதி பருவ காலங்களுக்கு உட்பட்டு தனது போக்கில் சென்று கொண்டிருக்கும். அது போல வினையின் காரணமாக உயிர்கள் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும்.

அனைத்தும் வினையின் காரணமாக விதியாக உருவாகிறது. ‘என் செயல் யாதொன்றும் இல்லை’ என்ற பட்டினத்தாரின் வரிகள் நினைவு கூறத் தக்கது.

வேகின்றது என்ற பதம் இன்னும் முழுமை அடையவில்லை என்பதைக் குறிக்கிறது. இது அருணகிரியாருக்காக எழுதப்பட்டதல்ல. இது சாதாரண மக்களுக்காக எழுதப்பட்டது.

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 1

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 1

கந்தர் அலங்காரம்

நிலைலையாமைத் தத்துவம்

1.
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 18

விளக்கம்
வடிவேலோனை வாழ்த்தி – வடிவேலனை வாழ்த்தி
வறியவர்கென்றும் – வறியவர்களுக்கு
நொய்யிற் பிளவேனும் – மிகக் குறைந்த அளவு
பகர்மின்கள் – பகிராதவர்கள்
வெய்யிற்கு ஒதுங்க உதவா – உதவாது என்பது துணிபு.
இவ் வுடம்பின் வெறு நிழல் போல் – இந்த உடம்பின் நிழல்
கையிற் பொருளும் உதவாது – கையில் இருக்கும் பொருள் உதவாது
காணும் கடை வழிக்கே – இவைகள் கடை நாள் வரையினில் உதவாது.

பொருள்
வடிவேலனை வாழ்த்தி, வறியவர்களுக்கு மிகக் குறைந்த அளவு பகிராதவர்கள் பொருள்கள்,கடைசி நாள் வரையினில் இந்த உடம்பின் நிழல் வெய்யிற்கு ஒதுங்க உதவாது போல உதவாது.

கருத்து
நொய்யிற் பிளவேனும் – அரிசி உடைபடும் போது அதில் கிடைக்கும் மிக சிறிய அளவு உணவு நொய்.  அதில் மிக சிறிய அளவு கூட கொடுக்காதவர்கள். (யாவருக்கும் உண்ணும் போது ஒரு கைப்பிடி என்ற திருமந்திரம் இங்கு நினைவு கூறத் தக்கது.
காணும் கடை வழிக்கே – காதற்ற ஊசியும்….. வாரது காணும் கடை வழிக்கே  என்ற பட்டினத்தாரின் பாடல் நினைவு கூறத் தக்கது.

2.

கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால் வருமோநும் மடிப்பிறகே. 20

விளக்கம்
கோழிக் கொடியன் – அடி பணியாமல்
குவலயத்தே வாழ நினைக்கும் மதியிலி காள் – இந்த உலகத்தில் வாழ நினைக்கும் அறிவு அற்றவர்களே
வல்வினை நோய் – வினையாகிய நோய்
ஊழிப் பெருவலி – ஊழ் வினையில் காரணமான பெரும் வலி
அத்தம் – செல்வம் எல்லாம்
ஆழப் புதைத்து – ஆழப் புதைத்து வைத்தால்

பொருள்
கோழிக் கொடியை கொடியாக கொண்டிருக்கும் அவனது தாளினைப் பணியாமல்  இந்த உலகத்தில் வாழ நினைக்கும் அறிவு அற்றவர்களே, வினையாகிய நோய்யும், ஊழ் வினையில் காரணமான பெரும் வலியும் சேர்ந்து வருகையில் ஆழப் புதைத்து வைத்த செல்வம் அடுத்த பிறவியிலும் வருமோ(வராது என்பது துணிபு).

கருத்து
இறைவனை தலைவனாகவும், உயிர்களை தலைவியாகவும் வைத்துப் பாடுதல் மரபு. எனவே கோழிக் கொடியன் (சேவல் ஆண் – கோழி பெண்).
வல்வினை நோய் –  நோய் வலி தரக்கூடியது. அஃது ஒத்தே வினைகளும். மிக அதிக வினைகளின் காரணமாக வல்வினை
ஊழிப் பெருவலி – ஊழிப் பெருவலி  யாவுள என்ற குறள் இங்கு நினைவு கூறத் தக்கது.
அத்தம் – அத்தம் எல்லாம் குழைக்கும் என்ற அபிராமி அந்தாதி நினைவு கூறத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும்

கந்தர் அலங்காரம்

கந்தனை, முருகனை, வடிவேலனை, சண்முகனை, கார்த்திகேயனை எப்படி பெயரிட்டு அழைத்தாலும் அழகு என்று பொருள் வரும் கடவுளை பாடல் வரிகளால் அழகு செய்து அலங்காரம் செய்யும் வரிகள்.

காப்புச் செய்யுளையும் சேர்த்து 108 பாடல்கள்.

கீழ் கண்ட தலைப்புகளில், தலைப்புக்கு 2 பாடல் என்று எழுத உள்ளேன்.

நிலைலையாமைத் தத்துவம்
தன் நிலை குறித்து புலம்பல்
சிவன்/பெருமாளின் மருமகன்
கம்பீரம்
தத்துவம்
காட்சி

நிலைலையாமைத் தத்துவம் தொடக்க நிலை
நிலைலையாமைத் தத்துவம் என்பது தன் நிலை குறித்து புலம்பல் ஏற்படுத்தும்.
அது சிவன்/பெருமாளின் சிந்தனைகளை ஏற்படுத்தும்.
சிந்தனைகள் கம்பீரம் ஏற்படுத்தும்
அதன் மூலம் தத்துவம் பிறக்கும்
காட்சி நல்கும்.

திருவருள் முன்னின்று நிற்கட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்