முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 4

முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் கம்பீரம் குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்
 
1.
பாடல்
 
விழிக்கு துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே. 70
பொருள்
 
எனது விழிக்கு துணையாக இருப்பது உனது மெல்லிய மலர் போன்ற பாதங்கள், உண்மைக்கு குறைவில்லா (தமிழ்) மொழிக்குத் துணை முருகா என்னும் நாமம், முன்பு செய்த பாவச் செயல்களை நீக்குவது அவனது பன்னிரு தோள்கள், நான் செல்லும் தனி இடத்திற்கு துணையாக வருபவை, வடிவேலும், செங்கோடன் மற்றும் மயில் ஆகியவையே.
 
கருத்து
 
பார்வைகள் அனைத்தும் அவனது திருவடி தேடி நிற்கும். பார்க்கும் மரங்கள் எல்லாம் நிந்தன்.. என்ற பாரதியில் பாடல் நினைவு கூறத்தக்கது.
உண்மை குன்றாத மொழிதமிழ் மொழி அதற்கு துணைமுருகா எனும் பெயர். முத்தமிழ் முருகன் தமிழுக்கானவன். அவனே முதல் தலை மகன்.
நாம் செய்து வந்த பழைய வினைகளை(சஞ்ஜீத கர்மாசைவ சித்தாந்த கருத்துப்படி) நீக்க துணையாக இருப்பது அவனது பன்னிரு தோள்கள்.
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமேஎன்கிற மாணிக்கவாசகரின் வரிகள் நினைவு கூறத்தக்கவை..
தனி வழி என்று இங்கு குறிப்பிடப் படுவதுஆன்மாக்கள் உய்யும் வழி. அவ்வாறு செல்லும் போது அதற்கு துணையாக இருப்பது அவனது வடிவேல், செங்கோடன் மற்றும் மயில் ஆகும்.
 
2. 
பாடல்
சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் தனக்கொரு காலுமஞ் சேன்கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலுந் திருக்கையு முண்ட நமக்கொரு மெய்த்துணையே. 107
பொருள்
சூலம் பிடித்து, பாசக் கயிற்றை சுழற்றி நம் மீது வீச வரும் காலனைக் கண்டு ஒரு பொழுதும் அஞ்ச மாட்டேன். ஏனெனில் பாற்கடல் கடைந்த பொழுது உண்டான ஆலால விஷத்தை உண்டவருடைய குமாரராகிய  ஆறுமுக பெருமானின் வேல் மற்றும் அவரது காக்கும் திருக்கரங்கள் நமக்கு உண்மையான துணையாக இருக்கின்றன.
கருத்து
சூலம் பிடித்து எம பாசம் சுழற்றிபொதுவாக(வினை) முடிவு காலத்தில் காலன் நம்மை நெருங்குவான். அப்போது பொதுவாக எல்லோருக்கும்பயம் ஏற்படும். அது போன்ற முடிவு காலத்திலும் நான் அஞ்சமாட்டேன்.
துணை என்பது குறிப்பிட்ட காலங்களுக்கு அல்லது நீண்ட காலங்களுக்கு என வகைப்படலாம். ஆனால் அது உண்மையான துணையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட துணை அவனது வேல் மற்றும் திருக்கரங்கள்ஆகும்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *