பாடல்
அருளது சத்தியாகும் அரன் தனக்கு அருளை இன்றித்
தெருள் சிவம் இல்லை அந்தச் சிவம் இன்றிச் சத்தி இல்லை
மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க்கு அளிப்பன் கண்கட்கு
இருளினை ஒளியால் ஓட்டும் இரவியைப் போல ஈசன்
சிவஞான சித்தியார்
பதவுரை
மல மாயைகளுக்கு உட்பட்ட உயிர்கள் அதை விலக்க முதன்மையாக இருப்பது அருள் எனப்படும் இறைவனின் சத்தியாகும். இவ்வாறாக பெறப்படும் சக்தி சிவம் என்பததில் இருந்து தனியே அறியப்படுவது இல்லை, அந்த சக்தி விடுத்து சிவம் என்பதும் தனித்து இல்லை. அத்தகைய சிவமானது, கண்ணில் தோன்றும் இருளை சூரியன் தன் ஒளியால் ஓட்டுதல் போல, உயிர்களின் அறிவை மறைத்து, மயக்கம் தரும் மல மாயையை தனது அருளாலே நீக்கி மண்ணில் தன் அருளை அளித்து, முத்தியைக் கொடுப்பான்.