
பாடல்
தந்தையை மனையை ஒக்கலைத் துணையைத்
தாயைமென் குதலைவாய்ச் சேயைத்
தனத்தையௌ வநத்தை இன்பமோ கனத்தைத்
தையல்நல் லார்பெருந் தனத்தை
அந்தியும் பகலும் விரும்பிமெய் சோம்பி
ஆழ்கடற் படுதுரும்(பு) ஆகி
அலக்கழிந் தேனைப் புலப்படத் திருத்தி
ஆட்கொள நினைத்திலாய்! அன்றோ?
சிந்தைநைந் துருக இன்னிசை படித்துச்
சிலம்(பு)ஒலி ஆரவே நடித்துச்
செழும்புனல் சடைமேல் கரந்தையை முடித்துத்
திருவெணீ(று) உடல்எலாம் வடித்துக்
கந்தைக்கோ வணம்தோல் பொக்கணம் தாங்கிக்
கபாலம்ஒன்(று) ஏந்திநின் றவனே!
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
காலனைக் காய்ந்ததற் பரனே!
திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்
கருத்து – சம்சார துக்கம் அறுபடச் செய்யும் பாடல்.
பதவுரை
சிந்தை நிலைகெடுமாறு உருகி இன்னிசை பாடி, சிலம்புகள் ஒலிக்குமாறு கூத்துக்கள் நிகழ்த்தி, செழுமையான கங்கையினை சடையின்மேல் மறைத்து வைத்து வெண்ணீற்றினை திருமேனி முழுவதும் பூசி, கந்தை ஆடையினை கோவணமாக அணிந்து, தோலினால் ஆன சிறுபையினையும், கபாலத்தினையும் யாசகத்திற்காக ஏந்தி திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடைய உயர்ந்தவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! பிறப்பிற்கு காரணமான தந்தையையும், நிரந்தரம் என்று மாயைக்கு உட்பட்டு கருதக்கூடிய மனையையும், இடுப்பில் சுமந்தவளாகிய தாயையும், மழலை மொழி பேசும் குழந்தையும், வினைபற்றி வரும் செல்வத்தையும், இளமையையும், அழகிய வடிவம் கொண்ட பெண்ணையும் அந்தியிலும், பகலிலும் விருப்பமுடன் உடல் வருந்துமாறு சோம்பல் வரும் அளவில் சிந்தையில் கொண்டு ஆழ்கடலில் அலையும் துரும்பு போலாகி அலைக்கழிக்கபடுபவன் ஆகிய என்னை மெய்யறிவு விளங்குமாறு திருத்தி ஆட்கொள்ள நினைக்கவில்லையோ?
விளக்கஉரை
- நைதல் – இரங்குதல்; நிலைகெடுதல்; கெடுதல்; தளர்தல்; நசுங்குதல்; சுருங்குதல்; மாத்திரையிற்குறைதல்; வாடுதல்; மனம்வருந்தல்; தன்வயப்படாமை
- பொக்கணம் – சோழியப்பை; கஞ்சுளி; பரதேசிகள் பிச்சை ஏற்கும் பை
- கரத்தல் – மறைத்தல்